வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கவிஞர் அவைநாயகன் மொழிபெயர்ப்பு நூல் “ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்“எனும் ஞானப்பறவை


ரிச்சர்ட் பாக் எழுதிய

ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்

எனும் ஞானப்பறவை-

 

தமிழில் கவிஞர் அவைநாயகன்

 

வெளியீடு –விஜயா பதிப்பகம்- விலை ரூபாய் 35-

 

          

      

         நம்பிக்கைகளை விதைப்பது, நம்பிக்கைகளை எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுவது. நம்பிக்கைகளை ஞானமாகக் கருதி ஆழ்மனதில் துளிர்த்துவிடுவது என்பதாக இந்த உலகில் உருக்கொள்ளும் படிமங்கள் எத்தனை யெத்தனை. இந்த நம்பிக்கை விதைகள் தூவுகிற ஆன்மாக்கள் உலகெங்கிலும் எல்லாப் புத்தாயிரங்களிலும் தோன்றியபடிதான் இருக்கிறார்கள். விஞ்ஞான நம்பிக்கை அஞ்ஞான நம்பிக்கையிலிருந்து நாம் எடுத்து வழங்கும் உத்திகள் விளைந்து கொண்டேயிருக்கும். நிராகரிப்பும் ஊதாசீனமும் புறக்கணிப்பும் சமகாலத்தில் சரியான விகிதத்தில் உற்சாகபாணத்தில் கலந்து தருகிற நம்பிக்கைகளையும் கலந்து தருகிற ஊடகங்களும் நம்பிக்கை உற்பத்தியில் சிறந்து விளங்குவதை நாம் அறிவோம். விமர்சனங்கள் ஆதிசேஷனாக படம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடும் போது நாம் நம்பிக்கைகளை வைத்துத்தான் சரி செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஆன்மா ஒன்றை அலைக்கழிக்க வைக்கிற பாடு அதைவிடவும் அதிகம்.

              நமது அறிவுலகம் எப்பொழுது உலக இயக்கம் மீது அன்பு கொள்ளும். எப்பொழுது இயற்கை மீது கரிசனத்துடன் நடந்து கொள்ளும் என்பது யாராலும் கணிக்க முடியாது. இந்த நூலில் ரிச்சர்ட்பாக் மற்றும் கவிஞர் அவைநாயகன் சீகல் பறவையை அதன் பறத்தல் சாகசத்தை வைத்து அசுரவேக உலகியல் லொகீக ஆசை கொண்ட மனிதனுக்கு ஆன்மா குறித்த அறிவுறுத்தலைக் கற்றுத்தருகிறார்கள் என்று சொல்லவேண்டும். பறக்கிற சிறகுகளின் கூர்மையை விடவும் எண்ணங்கள் குறித்து கவலையடைய வேண்டியதில்லை. என்கிற படிமம் வாசித்த மனதில் அலைகிறது.

 

           சனி இரவு அவைநாயகன் அண்ணனுடன்  அலைபேசியில் பேசினேன். மறுநாள் நடக்கவிருக்கும் கவிஞர் புவியரசுவின் “கரமசோவ் சகோதரர்கள்“ மொழி பெயர்ப்பு விழா குறித்துக் கேட்டார். சென்னையிலிருந்து இந்த நிகழ்விற்காகவே நூலை மிக வேகமாக வாசித்து விட்டு வந்திருக்கிறேன். உரையாடலாம் நீ வருகிறாய்தானே என்றார். வருகிறேன் என்றேன்.  அவர் கூடுதலாய் தந்த தகவல் தான் மொழிபெயர்த்து வந்த நூல் வெளியாகி யிருக்கிறது என்பது தான். மகிழ்வாய் இருந்த்து. எப்படியோ சில காலத்தை ஒரு படைப்பு அதிகமாகவே எடுத்துக்கொள்கிறது. மொழிபெயர்க்கும் அவர் நூலின் ஞாபகம் வெகு காலமாகவே இருந்து வந்தது. ஒரு வகையில் கரமசோவ் சகோதரர்கள் போலவே. நீண்ட காலத்தை அவருடைய நூலும் எடுத்துக் கொண்டதை அறிந்தேன்.

             களம் சார்பில் நடைபெற்ற விழாவில் அவரைச் சந்தித்தபோது நூலை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். முகப்பு தலைப்பு எழுத்தும் சீகல் பறவையும் வெள்ளி முலாம் அணிந்து பறப்பது போலவே இருக்கிறது. ஆச்சர்யத்துடன் பக்கங்களைப் புரட்டினேன். விழாவின் சூழல் மேற்கொண்டு வாசிக்க முடியவில்லை. நான் பதிலுக்கு அவருக்கு ஒரு புதிய நூலை அளித்தேன்.

           சில பக்கங்களைப் புரட்டியதும் அதிலிருந்த ஒரு வரி விலங்குகள் போன்று கொடியதாக“ என இருப்பதைக் கவனித்து கொடிய விலங்கு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது யுவர் ஆனர் என்றார். சிறிய கோபத்துடன். எனக்கு சுளீர் என்றது. கொடிய விலங்கு என்றும் சொல்லுக்காக அவர் காட்டிய எதிர்ப்பும் நான் காலங்காலமாக அறிந்த செய்திகளும் சொற்றொடர்களும் மனதளவில் மோதிக்கொள்ள ஆரம்பித்தது. ஜெயமோகனின் கவிதை ஞாபகம் வருகிறது. பூனை என்பது எத்தனை நல்ல பெயர் விலங்கு என்னும் போது மனம் கூசுகிறது என்பதான பொருள் தருகிற கவிதை.

        இது நாள் வரையிலும் எத்தனை விதமான மேற்கண்ட சொற்களை வாக்கியங்களை நாம் எழுதியிருக்கிறோமா என யோசித்தேன். எனக்குத் தெரிந்த வகையில் இல்லை. இருக்கவும் செய்யலாம். வாசிப்பதற்குத் துவங்கியபோது நூலைக் கண்ட இளவேனில் நான் வாசித்துவிட்டுத் தருகிறேன் என்று பெற்றுக் கொண்டார். ஆர்வம் தாங்காமல் அன்று மாலையே அவரிடம் வாங்கிக்கொண்டு வாசிக்கத் துவங்கினேன். இளையமகன் வாங்கி தன்னுடைய நூல்களுக்குள் வைத்துக்கொண்டு தர மறுத்தான். அலைக்களிப்பாக இருந்த நேரம் அது.

        இந்த நிலையில்தான் இந்திய அரசாங்கம் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்க நாள் குறித்து இருந்தது. வித்யாசமான உணர்வும் அனுபவம் என்று சொல்லவேண்டும். பொது மக்கள் குடும்பத்துடன் நாட்கணக்கில் ஒரே இடத்தில் பள்ளிகளில் அடைந்து கிடந்தார்கள். பள்ளி மைதானத்தில் ஆளுக்கு ஆள் கவிதைகள் போன்று பேசுகிறார்கள். ஒருவர் யதேச்சையாக திருப்பதி தேவஸ்தானத்தில் அடைப்பட்டுக் கிடப்பது போலவே இருக்கிறது. என்றார். ஒருவர் போர் முகாமில் இருப்பது போன்று இருக்கிறது என்றார். ஒருவர் முள் வேலி முகாமில் இருப்பது போன்று இருக்கிறது என்றார். ஒருவர் அரசாங்கம் நம்மால் முடியாத, நம்பமுடியாதளவு குடும்பத்துடன் மூன்று நாட்கள் ஒரே இடத்தில் வாழவைத்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள். நீங்கள் கடைசியாக எப்பொழுது குடும்பத்துடன் எத்தனைநாள் ஒற்றுமையாக இருந்திருக்கிறீர்கள். இப்படியாக நாம் காத்துக்கிடப்பதிலும் சுகமாகத்தான் இருக்கிறது. நாம் போர்க்காலங்களில் வாழ்வதற்குப் பழகிக்கொள்வது மாதிரியுமாயிற்று என்றார் ஒருவர். பிறகு பொழுது போகவேண்டுமே. சமூகப் பிரச்சனையைப் பேசுவதற்கு ஒரு மைதானம் போதும். பறவைகளும் தங்கள் புகலிடங்களில் அரசியல் பேசுமா எனத்தெரியவில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்திருக்குமா..எண்ணற்ற அளவில் நாம் எடுத்து வைத்திருக்கும் பறவைகளின் புகைப்படங்களைக் கண்டு அவைகள் என்ன நினைத்துக் கொள்ளும். நான் சில சமயம்  முகம் பார்க்கும கண்ணாடியை, சில்வர் தட்டுகளை வாயிலில் வைத்து பறவைகள் தங்கள் முகத்தை எப்படிப் பார்க்கும் என சோதித்து இருக்கிறேன். எத்தனை ஆச்சர்யத்துடன் தனது அழகை ரசித்திருக்கிறது தெரியுமா. அதுபோலத்தானே கடற்கரையில் நீரில் அழகில் தன் உருவத்தை சீகல் பறவைகள் ரசித்துக் கொண்டிருக்கும்.

       

      ஆமாம். எத்தனை குடும்பங்கள். ஒன்று சேர நம்முடன் வசிக்கும மக்களைக் காண்பது கூட சீகல் பறவைகளின் கூட்டத்தைக் காண்பது போன்றுதான் இருக்கிறது என்றார் ஒருவர். எனக்கு நானே சூடு வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக இவர்கள் எழுதாததால் நம் பிழைப்பு நடக்கிறது. இந்த ஊரில் வசிக்கிறது இத்தனை மக்களா.. எத்தனைவிதமான குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் வயதானவர்கள் பலவேறுபட்ட இளைஞர்களின் முகங்கள். பார்க்கப்பார்க்க மக்கள் கூட்டம் என்பதும் மக்கள் என்பதும் இப்படித்தான் இருப்பார்களா என்று பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

             வரிசையில் நிற்கிற பொழுது கிடைக்கும் நேரத்தில் வாசித்து விடலாம் என்று முடிவுடன் புத்தகத்துடன் கிளம்பினேன். வாசிக்க வாசிக்க அந்தப் பள்ளி அரங்கம் கடலாகத் தெரிகிறது. அங்கிருந்த மனிதர்கள் எல்லாரும் சீகல் பறவைகளாகத் தெரிகிறார்கள். அந்த மக்கள் குடும்பங்கள் எல்லாம் சீகல் குடும்பங்களாகத் தெரிகிறது.

               

                   மனிதர்களின் பெற்றோர்களை விடவும் பறவைகளின் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் போலிருக்கிறது. தனது குஞ்சுகளை குட்டிகளை மிகவும் கண்ணும் கருத்துமாகவும் அறிவுட்டி வளர்க்கிறது. ஆபத்துகளை முன்கூட்டி எச்சரிக்கிறது. தாய் எட்டடி குட்டி பதினாறு அடி என்பதையும இளங்கன்று பயமறியாது என்பதையும் உயிரினங்கள் அறியும். நம்மைவிடவும அறியும்.

       

      எனது வீட்டிற்குப்பக்கத்தில் ஆட்டுப்பட்டி ஒன்று இருக்கிறது. முப்பது நாற்பது ஆடுகளின் மேய்ச்சல் ஊர்வலம் பார்ப்பதற்கு மனம் நிம்மதி தருவதாக இருக்கும். மாலைநேரத்தில் அந்த ஆடுகள் அவிழ்த்துவிடப்படும். அவைகள் காலியாக இருக்கிற மனைகளில் விளைந்த பயிர்களை செடிகொடிகளை மேயும். தங்களை அனுமதிக்காத வீடுகளுக்கு அது போவதேயில்லை. படுரோசக்கார ஆடுகள். தன் குடும்பக் கூட்டத்தை அது அழைத்துச் செல்கிற அழகும் பாங்கும் பொறுப்பும் அதிசயிக்கவைப்பவை. சாலைகளில் பறக்கும் வாகனங்களை அறிந்து கடந்து செல்வதும் தனது குட்டிகளுக்கு ஆபத்தினைக் கண்டு கற்பிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

   

       முறையற்றுத் தவ்வி விளையாடும் குட்டிகளை அது கண்டிக்கும் அழகே தனி. ஒரு சமயம் அந்தக் குட்டிகளில் ஒன்றை அவ்வழியாக வந்த  டெம்போக்காரன் ஆட்டுக்குட்டியை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய்விட்டான். ஆடுகள் கத்தியிருக்கிறது. தனது பட்டிக்குத் திரும்பும் போது தன் கண்மணியைக் காணவில்லையென்று காடு முழுக்க வீடுகள் ஒவ்வொன்றின் முன்னால் அது நின்று கொண்டு கத்தியது இன்றும் காதில் ஒலிக்கிறது. திரும்ப அந்தப் பட்டிக்காரரும் இரவெல்லாம் லே அவுட் முழுக்கத் தேடினார். மக்களுக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த ஆட்டின் குட்டி களவாடப்பட்டிருக்கிறது என்பதை அன்றிரவுதான் மக்கள் உணர்ந்திருப்பார்கள். கசாப்பிற்கு விற்கப்படும் ஆடுகளின் பிரிவினைத்தாங்குவது குறித்து. பிற்பாடு அந்த தாய் ஆடு இரண்டொரு முறை அந்த டெம்போவை அடையாளம் பார்த்து துரத்திக் கொண்டு அரற்றிக்கொண்டு ஓடியிருக்கிறது. ஆட்டின் நுண்ணுணர்வைப் புரிந்து கொண்ட லேஅவுட்கார இளைஞர்கள் சிலர் அந்த இளைஞனைப்பிடித்து விசாரித்தபோது அவன் மிரள்வதையும் முன்னுக்கு பின்னாக அளித்த பதிலை வைத்து அவன்தான் களவாடியிருக்கிறான் என்பதை அறிய முடிந்தது. இதைச் சொல்வதன் காரணம் சீகல் பறவைகளின் தலைவன் சீகல் ஜோனாதனைக் கண்டிக்கிறது. நமது பறத்தல் என்பது உணவுத்தேவைக்கு தானே தவிர அதிக தூரம் அதிகவேகமாகப்பறப்பதற்கு அல்ல என்கிறது.

       

      மறுகணம் மனிதர்களின் அடிமைத்தனத்தைக் குறித்த குறியீடாகவும் இருக்கிறது சீகல் பறவை. வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்று முடிவில் இலக்கும் வாழ்வின் அற்புதம் பற்றிய அறிவின்றி உழல்கிற மனிதர்களும்  அடையவேண்டிய தூரத்தை உணர்த்துகிறது. சியாங்  பறவை போன்ற அறிவுறுத்தல் எனும் அச்சுறுத்தல்கள் இருக்கவே செய்யும். நான்கு கோடி பிரதிகளை விற்ற நூலின் அம்சம் என்னவாக இருக்கிறது. பாருங்கள் இலக்கும் அதை அடைவதற்கு இடையறாத முயற்சியும் அவசியமாகிறது.

         

       சீகல் பறவை பத்துவினாடிகளில் தொண்ணூறு மைல்வேகம் என்பது உலக சாதனை. சீகல் பறவை தன் அசுர சாதனை பறத்தல் பயிற்சியை எப்படி மேற்கொள்கிறது. தன்னுடன் பறக்கும் ஆயிரக்கணக்கான சீகல்களுக்கு மத்தியில் இடையறாத பயிற்சியாகப் பறத்தலின் வடிவங்கள். அதற்காக அப்பறவை மெனக்கெட்டு செய்யும் முயற்சி செய்வதுமாக காட்சிகளின் பிரமாண்டம் விரிகிறது. சில குறிப்பிட்ட அடிகள் வானத்தில் பறக்கிற போது நிலவும் காற்றழுத்தம் பற்றிய புரிதல்களையும் கற்றுக் கொள்கிறது. காற்றில் இருக்கும் ஈரப்பதம் சிறகுகளை விரைவில் உலர்த்திவிடுகிற போது பறத்தலுக்கு தன் இறகுகளைக் குறுக்கிக் கொண்டு பாய்வதும் பின் சாய்வாக தளர்வாக நெற்றுக்குத்தலாகப் பறத்தலின் முயற்சியில் கடலின் செங்கல் போன்ற படிமத்தில் விழுவதும் சிறகுகளும் தோள்களும் வலிப்பது பற்றியும் விவரிக்கிறது நூல். தன் தலைமைக்குக் கட்டுப்பட்டவாறு செய்யும பயிற்சிகள் வான் சாகசம் சரியான ஓய்விற்குப்பிறகு பறக்க எடுத்துக்கொள்கிற காலம். தங்களின் கட்டளைப்படி நடக்காத சீகல் ஜோனதனுக்கு தண்டனையாக தனித்த மலையில் தான் வாழ வேண்டும் என்கிற நிலையிலு தன் பறத்தல் பயிற்சியைத் தனது நண்பகளுக்குக் கற்றுத் தருவது கவித்துவத்தின் உச்சம். பொருளும் உணர்வின் ஆழமும் சிதையாமல் சிதையாமல் மொழியாக்கம் நடந்துள்ளது.

         

        சொர்க்கத்தைப் போல வேறு ஒர் இடம் இருக்கிறதா எனும் கேள்விக்கு “இல்லை ஜோனதன் அப்படி ஒன்றும் இல்லை. சொர்க்கம் என்பது ஒர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது சொர்க்கம் என்பது குறைவில்லாதது. அது ஒரு முழுமை“ அதே நேரம் நமக்கு நரகம் குறித்து அந்தப் பறவைகள் என்ன நினைக்கும் என்பதையும் யோசிக்க வைக்கிறது. வாழ்தலில் பறத்தலில் இலக்கு கொள்ளுதல். உட்சபட்ச வேகத்தைப் பறந்து சாதித்தல் ஒலியின் வேகத்தைப் பறந்து சாதிக்க முடியுமா என முயற்சி செய்வதாக அதன் வாழ்வு நிலைபெற்ற ஒன்று என்கிறார் ரிச்சர்ட்பாக். சிறு நோகாணலில் அவர் பேசும் குறியீடுகள் முக்கியமானவை. இலக்கு நோக்கி முன்னேறுகிற கல்வி பயில்கிற மாணவ மாணவிகளுக்கும் சாதிக்க முனையும் ஒவ்வொருவருக்கும் இந்த சீகல் பறவையின் பறத்தல் அனுபவம் நல்ல உத்வேகத்தைத் தரும். கடல் புறாவின வகைகள் என அறியமுடிகிறது சீகல் பறவைகளை. கடலுக்குள்ளும் கடற்கரைப் பகுதிகளிலும் ஒரே ஜாடையில் இருக்கிற பறவைகளும் பறத்தலில் இன்பம் கொள்பவை. இன்றும் கூட நமது நாகர் கோவில் பகுதியில் வருடந்தோறும் புறாப்பந்தயங்கள் நடைபெறுகிறது.மேலும் இந்தியாவில் புராதன நிலங்களிலெல்லாம் புறாப் பந்தயங்கள் நடக்கிறது. நாகர்கோவிலில் நடக்கும் புறாப்பந்தயங்களின் தூரம் ஐநூற்று ஐம்பது கிலோமீட்டர். கேரளக்கடற்கரை முழுக்கவும் பறந்து சென்று விட்டு திரும்பவும் வருகிற புறாக்கள் அதி திறமைவாய்ந்த புறாக்கள் வளர்க்கப் படுகறது. புறாக்களின் வாழ்வு அல்லது புறாக்களுடனான நமது மனித வாழ்வும் பின்னிப்பிணைந்த ஒன்று. கடலோரங்களைத் தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆங்கிலேயர்களில் ஒரு சில விமான சாகசங்களிலும் உலகம் சுற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர்கள் புதியபுதிய தீவுகளையும் நிலப்பகுதிகளையும கண்ட டைந்தனர். காண்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சிக்குப் பிறகு உலகின் பல மூலைகளுக்கு குறிப்பாக கடல் பயணங்களின் வழியாக அனுப்ப பட்டனர். அவர்கள் அனைவரும் பறவைகளின் வாழிடங்கள் அதன் வசீகரம் இருப்பு குறித்த அனுமானத்தின் படியாக அவர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்

 

               மனிதன் ஒரிடத்தில் இருந்து வாழும் வாழ்க்கையை அறிந்த பிறகும் அதன் சொகுசு கண்டபிறகு நிலங்களின் மீது தனது ஆதிக்கத்தைத் தொடங்கியபிறகு பல போர்களும் நில விஸ்தரிப்புகளும் நடந்தது. பறவைகளின் வாழ்க்கையைத் தத்துவங்களில் புராணங்களில் இதிகாசங்களில் செவ்வியல் பாடல்களில் வழியாக நமக்குப் போதிக்க ஆரம்பித்தனர். அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும். என்பதும் அப்படித்தான். பறவைகளின் வாழ்வுக் குறியீடு எந்தநாளும் மனிதனுக்குப் பொருந்தப் போவதில்லை. வேட்டையாடி சமூகத்தைச் சார்ந்தவனான அவனுக்கும் அறிவிற்குப் பஞ்சம் தான் எந்த நாளும். தற்காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் கோமாளித்தனங்க ளுடைய தத்துவார்த்தங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். ஒரு துறைசார்ந்தவன் அந்த துறை குறித்துதான் அறிவான். ஆனாலும் நமக்கு பறவை குறித்த வாழ்வின் குறியீடுகள் அவசியமாகிறது. நாம் மனிதனை உதாரணம் காட்ட முடியாத நிலையிலிருப்பதாலேயே நாம் பறவையை சீகல் போன்ற பறத்தலை விரும்பி வாழ்கிற இலக்கை நாம் நிர்ணயம் செய்கிறோம்.

           இந்த நூல்வெளிவந்த காலத்திற்கும் தற்காலத்திற்குமான இயற்கையின் நிலையை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்த நாட்களில் நாங்கள் மாலை வரை ஆற்றில் குளிப்போம். மாலைப்பொழுது மண்டியதை அறிந்து வண்டி மாடு கழுவ  வருகிறவர்கள் யேய் சீக்கரம் போங்கடா அங்க பாருங்க என்பார். வானத்தில் மேற்கு நோக்கி வரிசையாக பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குப்பயணம் செய்வதைக் கண்டிருக்கிறோம். அவைகள் காலையில் நொய்யலாற்றுப்படுகைகளில் இருபுறமும் இருக்கிற குளங்களில் ஏரிகளில் இனப்பெருக்கத்திற்காக உணவிற்காக வந்து திரும்பிக் கொண்டிருக்கும். குறிப்பாக கொக்குகள் இனம் புரியாத அற்புதமான பறவைகள் வரிசையாகப் பறந்து போகும். அதன் படியாக நாங்களும் ஆற்றிலிருந்து வீட்டை நோக்கி வந்திருக்கிறோம்.

        இன்றும் கடலோர மாவட்ட மக்களின் ஆதாரமே மீன்கள். வகைவகையான மீன்கள் போன்ற பறவைகளும் வாழத்தான் செய்கிறது.

பிளெட்சர் பறவை கூறுகிறது ஒரு சீகல் பறவை என்பது எல்லையில்லாத விடுதலையை வேண்டுவது.உங்கள் உடலின் உள்ள ஒவ்வோர் இறகின் நுனியும் உங்கள் எண்ணங்களை விதத்திலும் உயர்ந்தவை அல்ல.“ கவிஞரின் மொழிபெயர்ப்பு வாசகங்கள். சாதாரண மொழிபெயர்ப்புக்கும் கவிஞராக இருக்கிறவரின் மொழிபெயர்ப்புக்கும் எத்தனை வேறுபாடு.

        

           தற்கால நம் சமூகத்தில் “பறவை காணுதல்“ என்னும் வழக்கம் நடைமுறை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இயற்கையியல் நேசிக்கிற சுற்றுப்புறங்களில் ஆர்வமிருக்கிற மாணவ மாணவிகள் பறவைகளைக் கண்டு அதன் வாழ்வினை அன்றாடம் அதனின் இயல்புகளை குறிப்பெடுக்கிறார்கள். புகைப்படக் கலையின் ஒரு வெளிப்பாடாகத் துவங்கிய இந்தப்பழக்கம் நமது இளையோர்களின் மீது நம்பிக்கை கொள்ளவைக்கிறது. தாவரவியல் சூழலியல் சமூகவில் ஊடகவியல் மரபு சார்ந்த இயற்கை விவசாயம் பற்றிய படிப்புகள் படிக்கிற மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பலர் இது போன்ற பறவை காணுதல் வழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பாரட்டப் படவேண்டிது. குறிப்பிடப்பட வேண்டியது. அதுபோன்ற இயற்கையியல் குறித்த விழிப்புணர்வை அளிக்கிறது இந்த நூல். ஞானம் என்பது பறவைகளின் வாழ்விலிருந்துதான் பிறக்கும் என்பது இந்த நூலும் அல்லது சீகல் பறத்தலின் வழியாகவும் அமையும் என்கிறார் அவைநாயகன்.

 

            இயற்கை குறித்தும் காணுயிர்கள் குறித்தும் பறவைகள் பற்றியும் நாம் தொடர்ந்து படைப்புகளும் அரங்குகளும் கண்காட்சிகளும் நடத்தவேண்டிய இலக்கை கொண்டிருக்கிறோம். தலைமுறை தலைமுறையாய் பறவைகளின் வாழ்வுடன் நம் வாழ்வும் கல்வியும் அறிவும் கூடவே வளர்நது வந்துள்ளது. நம் பெற்றோர்களை விடவும் பறவைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளப்பரிய அன்பும் எச்சரிக்கையுணர்வும் கொண்டிருக்கிறது என்பதை அறிய நேர்ந்துள்ளது. காக்கைக்கும் தன் குஞ்சு என்பது போன்று. தமிழ் மொழியில் பழமொழிகளில் கூறப்பட்டிருக்கிற பறவைகளின் வாழ்வும் மேன்மை பற்றிய பழமொழிகள் எல்லாம் சீகல் பறவையால் ஞாபகம் வருகிறது. சொர்க்கம் ஞானம் விடுதலை இலக்கு வேகம்  பறத்தல் என்பது எல்லாம் சக உயிர்களுக்கு முடிந்த வரை தீங்கிழைக்காமல் சீகல் வாழ்ந்திருந்து பறந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மூத்த ஆளுமை புவியரசு மிகச்சிறந்த ஆன்ம முன்னுரையை வழங்கியிருப்பது சிறப்பு. தன் படைப்பிலக்கியத்தில் மேலும் ஒரு துறையில் முத்திரை பதித்த கவிஞர் அவை நாயகன் அண்ணனுக்கும் இனிய வாழ்த்துகள். வெளியிட்டு பரவலாக்கிய நூலின் முயற்சியை வரவேற்ற விஜயா பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.