புதன், 25 டிசம்பர், 2013

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கு விழா- கோவை பதிவுகள்...


ஈஸ்ட்மென் கலர் விழா

விஷ்ணுபுரம் விருது வழங்கு விழா- 22.12.2013-கோவை-2013

இளஞ்சேரல்

 

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது வழங்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இலக்கியப் படைப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் மக்கள் கூடி நிரம்பிய அரங்கு. வாசகர்கள், படைப்பாளர்கள், பல்வேறு திசைகளிலிருந்து வந்து கலந்து கொண்டிருக்கிற நண்பர்கள் என்பதாக நிகழ்வு முக்கியமானதாக அமைந்தது.

 முதலில் டிசம்பர் மாதம் விழா நடக்குமே எங்கு நடைபெறுகிறது எனும் தகவல் எனக்கு வந்து சேரவில்லை. அல்லது நானும் விசாரிக்க முற்படவுமில்லை. எப்படியும் தகவல் வரும். முதலில் இலக்கியச் சந்திப்பின் முப்பத்தி ஏழாம் நிகழ்வு குறித்து விபரங்கள் கேட்ட போது தொலைபேசியில் பேசிய எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள்தான் தகவல் சொன்னார். ஒரு வகையில் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். விழாவை மூன்றாவது ஞாயிறுக்கு மாற்றி வைத்தமைக்காக.

இலக்கியச் சந்திப்பின் இறுதி ஞாயிறு விழாவில் மும்பையிலிருந்து புதியமாதவி கலந்து கொள்கிறார். நிகழ்வு முடிவில் அமைப்பாளர் செல்வேந்திரன் இந்த மாதம் உங்கள் நிகழ்வில் யார் கலந்து கொள்கிறார்கள் என கேட்டபோது ஆச்சர்யம் கொண்டேன். புதிய மாதவியின் பத்து நூல்கள் குறித்து ஐயா கோவை ஞானி, சுப்ரபாரதி மணியன், முனைவர் சுசீலா, சக்தி செல்வி, பொன் இளவேனில், யாழி, மயுரா ரத்தினசாமி ஆகியோர் பேச உள்ளார்கள் என்றேன்..

பிற்பாடு பொன் இளவேனில் ஒரு நாள் முன்பு நிகழ்வின் தகவலை அலைபேசியல் கூப்பிட்டுச் சொன்னார். பிறகு முகநூல்களைத்திறந்து விரிவாக அறிந்து கொள்கிறேன். லட்சுமி மில்ஸ் அருகில் இருந்த அறிவிப்புப் பதாகையைக் கவனித்திருக்கிறார் விழாவின் நிரலை அறிந்து கொள்வதின் மூலமாக மற்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்க சௌகரியமாக இருக்கும்.

                காலையில் நண்பர் கோபால்ராஜ் அவரிடமிருந்து அழைப்பு.  அவருடைய அழைப்புகள் எல்லாமே மிக முக்கியமானவை. எந்த  அழைப்பையும் நிராகரிக்க முடியாத செய்திகள் நிரம்பியவை. துயரமான செய்தியைச் சொன்னார். முனைவர். வே.பரமேசுவரன் காலமானார் என்பதுதான். நம்புவதற்கும் இயல்பிற்கு வருவதற்கும் நெடுநேரம் ஆகிறது. வள்ளலார் பாடல்களில் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். எனது முதல் கவிதை நூலான கொட்டம் தொகுப்பிற்கு விமர்சன உரையாற்றியவர். என் கவிதைகள் குறித்துப் பேசிய ஒருசிலரில் அவரும் ஒருவர். ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் தற்சயம் பணியாற்றி வந்தவர். அவருடைய சகோதரர்கள் பள்ளித்தோழர்கள். செந்தில்குமார் சங்கர்கணேஷ் மற்றும் இரண்டு சகோதர்களும் மிக நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தார்கள். கலை இலக்கியம் விளையாட்டுக்களில் அவர்களின் குடும்பம் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்கள். அவர்களுடைய குடும்பம் திராவிட இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். அவருடைய இழப்பு என்னால் சுதாரித்துக் கொள்ள முடியவில்லை. அவர் குட்டிக்கும் (இளவேனில்) தகவல் சொல்லுங்கள் என்றார். அவரிடம் சொன்னபோது நம்பவில்லை. தெளிவாக விசாரித்துக் கொண்டார். நாம் போய்த்தான் ஆகவேண்டும் என்றார். புறப்படுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியது. மார்கழி மாத மரணம் மோட்சம் என்பது போலவும் அவர்கள் நேராக சொர்க்கம் செல்வார்கள் என்பதும் உண்மையாக இருக்கட்டும் என பிரார்த்தனை செய்து கொண்டேன். வெயில் வீச்சிலும் பனி படர்ந்திருக்கிறது. குருவிகளின் சத்தம் இல்லை. நாய்கள் குரைக்க வில்லை. அதிகாலை நான்கு மணிக்குத் துவங்கிவிடுகிற மைக் செட் சப்தங்களுக்கு எழுந்து விடுகிற உயிரினங்கள் உறங்கும் நேரம் இது தான் என்னவோ. தரையிலும் ஆகாசத்திலும் விறுவிறுப்பு கூடிக் கொண்டே வருகிறது. அவர் குறித்த நினைவுகள் தவழ்கிறது. அவர் கடைபிடிக்கும் மென்மையான உணர்வுகள் அலாதியானவை. களைப்பும் சோர்வும் நீங்க உணவை முடித்து விட்டு தோழர் ராஜேந்திரன் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு கோபால்ராஜ் இருந்தார். அவருடன் மற்ற நண்பர்களுக்கான செய்திகள் பரிமாறிவிட்டுக் கிளம்பிப் போனோம். சூலூருக்குச் சென்றோம். வழியெங்கும அவர் நினைவுகளைப் பேசியபடியே போகிறோம்.

       கண்ணாடிப் பேழையில் நீண்ட துயிலிலிருந்த அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். அவருடைய வீட்டின் முகப்புக் கதவின் தூணில் பவிநுதல் இல்லம் என்று பொறிக்கப்பட்டிருக் கிறது. அதுவரையிலும் சாதாரணமாக இருந்த நானும் இளவேனிலும் கலங்கிப் போனோம். அவருடைய இளவல்கள் நான்கு பேரும் ஆற்றொணாத் துயரில் இருக்கிறார்கள். அங்கு கூடிய உறவினர்கள் அவர் காலமான அதிர்ச்சியை நம்பமுடியாமல் பேசிக்கொள்கிறார்கள். ஐம்பது வயதுக்கும் குறைவாகவே வாழ்நாளை முடித்துக் கொள்வது என்பது அனைவருக்கும் வேதனை தரும்தானே..

          அவருடனான நினைவுகளை நான் தோழர் சா.சிதம்பரம் அவர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டுப் பேசினோம். .இந்த வலி தீர நெடுநாள் ஆகும். மனசுக்கும் உடலுக்கும் நிம்மதி தேவைப்பட்டது. அது விஷ்ணுபுரம் நிகழ்வின் மூலமாகத் தீரலாம். பழகிய முகங்கள் மறந்தே விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் முகங்களைத்தான் மறக்கவே முடியாது. மறக்க முடியாத முகங்களை நம் முகங்களை அவர்களுக்குக் காட்டுவதின் மூலமாக ஒரு பழிவாங்கலைச் செய்ய முடிகிற சிற்றின்பம் இலக்கியத்தில் சுவராசியம் தான்.

 இனியொரு புறம் அகமனம் சிற்றின்பத்திலும் ஈடுபட எத்தனிக்கிறது. மதியம் ஒரு மணிக்குத்துவங்கிய கிரிக்கெட் போட்டியில் ஆறுதலாகியது. மனசெல்லாம் கிரிக்கெட் டிராவாகுமா வெற்றிபெறுமா என்பதில் யோசிக்கிறது. துயர வீடுகளில் அருந்தும் மதுவின் வாடை என் உடலெங்கும் வீசத் துவங்கியது. . பாட் சிம்காக்ஸ் தென்னாப்ரிக்கா வெல்லும் என்றும் அருண்லால் இந்தியா வெல்லும் என்றும் ஆருடன் சொன்னார்கள். டுபிளசிஸ் டிவில்லியர்ஸ் இருவரும் செமத்தியாக நாங்கூரம் இட்டிருந்தார்கள். இஷாந்த் சர்மா, ஜாகீர் கான், முகமது சமி மூவரும் மாங்கு மாங்கு என்று தெற்கும் வடக்குமாக பந்துவீசினாலும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

இளவேனில் வந்து விட விழாவிற்குக் கிளம்ப ஆயத்தமானோம். ஓயாத அலைச்சலாக இருந்தமையால் இன்று வேறொரு விழாவான களம் இலக்கியச் சந்திப்பில் நடைபெற்ற ஜெயமோகன் படைப்புலகம் நிகழ்வுக்குப் போகமுடியவில்லை. இப்படியாக ஒரு நாளில் பல விழாக்கள் துக்க விழா என்று வந்துவிட்டால் நம்மைப் போன்ற சம்சாரிகள் பாடு அதோ பாடுதான்.

      விழா நடைபெறும் அரங்கிற்குக் காலையிலிருந்தே லாரிகளில் மூட்டை மூட்டையாக அறம், விடுதலையுணர்வு, நுட்பம், துல்லியம், உள்ளுணர்வு,ஸ்தூலம் போன்ற வஸ்துகள் வந்திறங்கிக் கொண்டிருந்ததாக அறிந்தோம்.. விழாவிற்கு வருபவர்களுக்கு அளிப்பதற்காக. மேலும் கிருஸ்துமஸ் தாத்தா உடைகள், விக் தாடிகள், சிங்கம்11 மீசைதாடி கெட்டப் முகமூடிகள் வாயிலில் நிரம்பக் கொண்டிருக்கிறது. நமது முகங்கள் நகரத்திற்கான முகங்களாக மாறுகிறது. அல்லது மாற்றிக் கொள்கிறோம். செஞ்சிலுவை மன்றத்தைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் சிக்னலில் நின்ற வாகனங்களுக்கு முன்விளக்கு நடுமையத்தில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். நாங்கள் வந்த இளவேனில் வண்டிக்கும் ஒட்டினார்கள். சற்று நேரத்தில் அந்த மாணவர்கள் முகங்கள் மாறுகிறது. அந்த ஐந்து வழிச்சாலை விழாவின் அரங்கமாக மாறுகிறது. நிரம்பிய அரங்க இருக்கைகளில் உட்கார்ந்திருக்கிறவர்கள் முகங்களில் அந்த கருப்பு ஸ்டிக்கர் மினுக்குகிறது. ஒரு முறை கண் கண்ணாடியைச் சுத்தம் செய்து அணிந்து கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை ஸ்பிரைட் பாட்டிலில் கரைந்து வைத்திருந்த விஎஸ்ஓபி பீரியமியத்தின் மிடருகளை விழுங்கிக் கொள்ள எல்லாம் சரியானது. இளவேனில் கொஞ்சம் தண்ணி கொடு என்றார் நான் வேறொரு பாட்டிலிலிருந்த வெண் தண்ணீரை அவருக்கு அளித்தேன். அவர் என்னமோ உன்கிட்டருந்து வாசம் வருது என்றார் நானோ ஆரம்பிச்சிட்டியா என்றபடி என் தோள்பையைக் காட்டினேன். அவரும் விஷ்ணுபுரத்தின்  மற்ற விழாக்களுக்கு கொண்டு வந்த அதே பேக் கோட வந்திட்டிருக்கியே எப்படியா என்றார். நான் வேணும்னா ஒரு பேக் வாங்கிட்டு வந்தர்றேன் மாமாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடு என்றார். யோவ் இந்த பேக் ராசியான பேக்யா. இதவாங்கினதுல இருந்துதான்யா ஜெயமோகன் கோயமுத்தூர் வந்திட்டேயிருக்கார்..அதனால நான் மாத்தமாட்டேன் என்றேன்.

           மசங்க மாலையின் நகரத்தின் யுவதிகள் வடக்கிலிருக்கும பெருமாள் கோயிலுக்கு மார்கழி சேவித்தலுக்குப் போகிறார்கள். அரங்கம் மார்கழியின் மாலைக் குளிருக்கான ஏக்கத்தில் மிதக்கிறது. உடல் கொஞ்சம் சூடானால் தேவலை. பிஸ்கட் வண்ணத்திலிருந்த தரை முழுக்க இலக்கியம் பேசிகளின் தாரைகளாக பதிகிறது. அரங்க வாயிலில் இருந்த காவலர் தெய்வீக சத் சங்கத்தைச் சேர்ந்தவர் போலிருக்கிறார். பாரம்பரிய உணவுத் திருவிழா குறித்த நோட்டிஸ்களை விநியோகிக்கிறார்.

போலீஸ் ஜீப்பும் காவலர்களும் இலக்கிய உரையாடல்கள் நிகழ்த்துகிறார்கள். நான் முதலில் சிபிராஜ் நடிக்கும் சூட்டிங் இங்கும் நடக்கிறதோ என்று யோசித்தேன். அவர் காவலர் கெட் அப்பில் கோவையில் பல இடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப்படத்தின் பெயர் (மன்னிக்கவும்) உண்மையிலேயே  நாய்கள் ஜாக்கிரதை. அந்தப் படசூட்டிங் ஒரு பகுதியோ என நினைத்து அரங்கம் மாறிவந்து விட்டோமா அல்லது கடைசிநேரத்தில் வேறு அரங்கிற்கு மாற்றியிருக்கிறார்களோ என நினைத்தபோது வாயிலில் இலக்கிய நண்பர்களைக் கண்டபிறகு யதார்த்தநிலைக்கு வருகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றும் கூதக்காற்றும் என் ஆஸ்த்துமாவிற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நிழல் வெளிச்சம் தீண்டிக் கொண்டிருந்த டேபிளில் தேநீர் முடிந்திருக்கிறது. காலிகோப்பைகள் சிதறாமல் இருக்க பணிப்பெண்களும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல நானி பல்கிவாலா ஆடிட்டோரியத்தின் சீமாரும் இலக்கியம் பேசும். சீமார் (துடைப்பம்) தலைநகரில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா.

இளவேனில் வண்டியை ஒழுங்காக நிறுத்தினார். நோட்டிஸ் விநியோகம் இளவேனில் செய்ய முற்பட்டபோது அவர் மறந்து போய் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது அறிய முடிந்தது. என் நூலுக்கு அவர் அச்சிட்டிருந்த நோட்டீஸ் அது. பார்த்தால் திராவிடர் கழகம் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து ஒரு காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த நோட்டிஸ் போலிருக்கும். அதுபோலவே நானும் இலக்கியச் சந்திப்பின் 37 வது நிகழ்வின் அழைப்பிதழ்கள் கொண்டு வர மறந்தேன்.

         விழா துவங்குவதற்கு நேரம் ஆகியிருந்தாலும் இயக்குநர் பாலாவிற்காக காத்திருப்பது போலப் பட்டது. புத்தக விற்பனைப் பகுதிகளில் ஆர்வலர்கள் உள்பட பலர் நூல்களை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். விலைகள் ஒன்றும் அதிகமில்லை. இன்றைய விலைவாசிக்கு கட்டுபடியாகிற விலைதான். சமீபத்தில் நான் ஒரு பைபிள் வாங்க விசாரித்தேன். எல்லாம் முன்னூறு ருபாய்க்கும் மேல். இந்தியா கிருத்துவிற்குக் கொட்டிக் கொடுத்ததற்கு இலவசமாகவே தரவேண்டும். நம்மால் அந்த இரும்புக் கோட்டைகளுக்குள் நுழைந்து பார்த்தாலும் நாமும் ஒரு மெழுகுவர்த்தியாகிவிடுகிறோம்.

கோவையில் ஒரு மேசன் ஒரு எலக்ட்ரீசன் எட்டுநூறு ருபாய் சம்பளம் வாங்குகிறார்கள். தள்ளுவண்டிக்காரன் பத்தாயிரம் வரை பாக்கிறான். நம்மாட்கள் பத்து ருபாய்க்கு சமையல் புத்தகம் கூட வாங்க மாட்டான். ஆயிரம் ரூபாய் ஐநூறு ருபாய்க்கு முழு அரைபாட்டில்கள் வாங்கி சாப்பிடுகிறான். இலவசமாக கிடைக்கிற நூல்களைக் கூட வாசிக்காமல் மரப்பல்லிகளைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்சுரன்ஸ் பாலிசி ஏஜென்ட்களைக் கண்டால் தலைதெறிக்க ஓடுவது போலவே புத்தகம் வெளியிட்டவனைக் கண்டால் பாய்ந்து ஓடுவதைக் கவனிக்க முடிகிறது. இருப்பினும் வாசிக்கிறவன் எழுதுகிறவன் வெளியிடுகிறவன் பதிப்பிக்கிறவன் உள்பட எல்லாருமே உ.வே.சா மனநிலைக்கு வந்துவிட்டது நன்றுதான். வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகிறவர்கள் போலவே எழுதியதைப்பதிப்பித்துத் தொலையலாம் என்று நினைப்பதும் ஒன்றுதான். இழப்பதற்கு எல்லாம் இருக்கிறது. எப்படியோ காலம் ஏதாவது ஒன்றைத்தந்து கொண்டேயிருக்கிறது. நாளொன்று போனால் வயதொன்று போகிறது. புத்தகம் வாங்கியபடியே கீழிறங்கினோம்.

         டேபிளில் தேநீர் இல்லையென அறிந்த பிறகு அருகிலிருக்கிற அடுமனைக்குப் போனோம். ந.முத்து பாலா படங்களில் சித்தரிக்கப்படுகிற கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை ஞாபகப்படுத்தினார். இளவேனிலும் நானும் மற்ற படங்களின் காட்சிகளைச் சொன்னோம். நெருக்கடி மிகுந்த ஐந்து வழிச்சாலை. பச்சை அம்புகளை மாறிமாறிப்பார்த்துக் கொண்டு கடந்தோம். ந.முத்து தேநீர் கட்டாயமாக வேண்டாம் நான் இப்போது அருந்தினேன் என்றார். திரும்பவும் என் கதைகள் குறித்து பேசினார். இரண்டு கதைகள்தான் படித்தேன். வேகமான வாசிப்புக்கு உகந்த கதைகளாக இல்லை. நிதானமாக வாசிக்க வேண்டும் என்றார். அருகிலிருந்த டேபிளில் புதிதாக சரிசெய்த யுவதியுடன் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் காமிரா பாவனைகள் காட்டிக் கொண்டிருந்தார். அந்த மங்கை வெட்கத்தை அடக்க முடியாமல் மலங்கியதற்கு காரணம் இருக்கிறது. எதிரில் பாலா படத்து பெண்  காண்ஸ்டபிள்கள் போல இருவர் அமர்ந்திருந்த காரணம்தான். பெண் காவலர்களை ஆண்கள் யாரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அச்சம் காரணமாக, தேநீரகம் வெண் விளக்கு பொலிந்து திருநீர் கொட்டியது போலிருக்கிறது. டீ போடுகிற மாஸ்டர் ஐயப்பசாமிகளுக்காக மீண்டுமொருமுறை டபராக்களை அலம்புகிறார். இளவேனில் என்னை முறைத்துப் பார்க்க தேநீரை விழுங்கினேன். பெண் காவலர்கள் எழுந்து கொண்டபோது அநேகமாக பாலா அரங்கத்திற்கு வந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். அதே நேரம் முத்துவிற்கு அழைப்பு வருகிறது. நானும் அந்த புதிய காதலர்களும் எழுந்து கொண்டோம். வாயிலை அடைத்துக் கொண்டிருந்த ஐயப்பசாமி கோல்ட்பில்ட்ர் பத்தவைத்தார். இளவேனில் நானும் தம் அடிக்கிறேன் என்றார். கடைவாசலில் ஒரு வாசகர் மீன்கள்தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தார். அவரும் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தார்.

         ந.முத்துவின் அவசரம் புரிந்து வேகமாக இளவேனில் புகையை இந்திரலோத்துப் புகை அளவு ஊதினார். அரங்கிலிருந்த மற்ற இலக்கிய ஆர்வலர்கள் புறப்படுகிறார்கள். நாங்கள் வேகமாக நடந்து வந்தபோது வரவேற்புரை முடியும் தருவாய். அரங்கசாமி பேசியிருக்கலாம். மேடை போகஸ் லைட்டில் மின்னியது. இரவு வந்திருக்கிறது. நிரம்பிய நாற்காலிகள் கருநீலம். வெல்வெட் குஷனில் நேர்த்தியான வரிசைகளை ஒழுங்காக இலக்கிய ஆர்வலர்கள் பயண்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை செண்ட், சூடிய மலர்களின் மணம். அரங்கில் தெளிக்கப்பட்டிருக்கிற ரும் ரெப்ரெஷ்னர் மணம் என்பதாக ரம்மியம் வீசுகிறது. நானி பல்கிவாலா அரங்கம் தன் இயல்பில் தயாராகிவிட்டது. ஞாயிறு குறிப்பாக இந்த விழா சனி மாலையாக இருந்திருந்தால் சத்தியமாக உட்காரவே இடம் கிடைத்திருக்காது. எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி. அரங்கம் நிரம்பிவிடும்.

ஆனால் இலக்கியக் கூட்டம் என்றால் போதும் வியாக்யானமாக ரசிகர்கள் தவிர்த்திடுவார்கள். ஏனென்றால் இலக்கியம் வாழ்க்கையைப் பற்றி அளவளாவுகிற துறை. அறிவுரை சார்ந்த உரையாடல்களே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவர்களுக்கு.

அந்த அளவு நம் சமூகத்திற்கு இலக்கிய விழிப்புணர்வு இருக்கிறது. எப்படியென்றால் எந்தப் படைப்புகளை, படைப்பாளிகளை, எந்த முகத்தை, எந்த சாதியை, எந்த நிறத்தை, அறிவார்த்த நிலையைத் தவிர்க்க சில இலக்கிய முகாம்கள் தவிர்க்கும் அல்லவா அதுபோலவே பொது அறிவுக் கூத்தாடிகளும் தவிர்த்துவிடுவார்கள். அப்படித்தவிர்க்கிற அறிவை நமது பொதுமைச் சமூகம் வளர்த்திருக்கிறது. அப்படி வளர்வதற்கு நிதியுதவிகள் செய்கிறது. இந்த நிலையை மாற்ற விடாமல் எழுதிக்கொண்டிருக்கிற ஒரே ஜீவன் நான்தான். சுபமங்களா இதழ் சில அரிய முயற்சிகளைச் செய்தது. சுந்தர ராமசாமி உடல் நிலை மோசமாகாத வரை சிறப்பாக நடந்தது.         நானும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகத்தீவிரமாக எழுதிவருகிறேன். அதற்கு செவிசாய்த்து இயங்கியவர்கள் இருவர்கள் தான் ஒருவர் மனுஷ்ய புத்திரன் இனியொருவர் ஜெயமோகன். இருவரிடமும் பேசியும் எழுதியும் வலியுறுத்தியதின் விளைவே இந்த சில மாற்றங்கள் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்தவை. அமைப்புகளை விமர்சித்த காலங்களில் ஜெயமோகனிடம் அது அவசியமே என்று விடாப்பிடியாக வாதிட்டு எழுதியதன் விளைவாகவே விஷ்ணுபுரத்தைத் துவக்க வேண்டிய அவசியம் வந்தது. விருதுகள் ஒரு படைப்பாளிக்குத் தடையே என்று வாதம் புரிந்த காலத்தில் அவசியம் என்றபோது பிற்பாடு புரிந்து கொண்டு விருதுகள் அளிக்க முன்வந்ததும் ஒரு மாற்றம்தான். இப்படியாக கண்ணுக்குத் தெரியாத முயற்சிகளை பீஸ் காரியருக்குள் இருந்து கொண்டு பணியாற்றுகிற பீஸ் கம்பியைப் போல என்னுடைய முயற்சிகள் சிலருக்குப் பயண்படுகிறது என்பதை இந்த இடத்தில் கர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு இடத்தில் என்னை முன் நிறுத்துவதற்கு நான் கேவலம் கொள்கிறேன் என்பதையும் உணர்கிறேன்.

“ஜெயமோகன் கூட ஐய்ப்பனுக்கு மாலைபோட்டிருக்கார்என்றேன்

“யோவ் அது டிசர்ட் கலர்யா அது..“ அட ஆமாம்.. சூழ்நிலைக்குத் தகுந்த வண்ணம் உடையாகவும் அமைந்திருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி டில்லித் தமிழர்க்குரிய உடை. அரங்கசாமி அவருடைய பிரத்யேகமான உடையிலிருக்கிறார். ரவிசுப்பிரமணியன் முகத்தில் தான் பாடப் போகிற ராகங்களின் சங்கதிகளை உருப்போட்டுக் கொண்டிருப்பதாகப் பட்டது. அவருடைய சிகையலங்காரம் யதார்த்தமான இசையாசிரியரின் பாவனைகளுக்கு உட்படுவதற்கு சௌகரியமாக அமைந்திருக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கோல்ப் விளையாட்டு வீரரின் ஆகுரிதியில் இருக்கிறார். இங்கிருந்து பார்க்கிறபோது தெளிவத்தை ஜோசப் நாகேஷ் தோற்றத்தில் தெரிகிறார். சுரேஷ் என்கிற கணக்காய அதிகாரியும் சிறந்த வாசிப்பாளருமான அவர் ஜீன்ஸ்  செக் சட்டையணிந்திருக்கிறார். விழாவின் மேடையலங்காரம் சர்வதேச இலக்கிய மேடைக்குரிய பொலிவை அறிய முடிகிறது.

   மேடைக்கு வராமல் கீழே அமர்ந்த படியே நிகழ்வுகளைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த பாலா அழைக்கப்பட்டார். அவர் மிகுந்த பவ்யமாக மணப்பெண் போல மேடைக்குச் சென்று அமர்ந்தார். அவருக்கு உதவியாளர்கள் உதவினார்கள். தெளிவத்தையின் நூல்கள் வெளியிடப்பட்டது. நாஞ்சில் நாடன், செழியன் ஆகியோர் மரியாதை செய்தார்கள். நிகழ்வை ஒருங்கிணைத்து நெறிப்படுத்திய செல்வேந்திரன் இயக்குநர் பாலா குறித்து ஜெயமோகன் எழுதிய குறிப்புகளை வாசித்தபோது அவர் தான் பேசப் போகிறார் என்பதை உறுதிசெய்தோம். ந.முத்து முதல்யே பேசினா எல்லாரும் புறப்பட்டிருவாங்களே..என்று நினைத்த சந்தேகத்தை உறுதிசெய்தார். பாலா பால்தாக்கரே ஒப்பனையில் இருந்தார். உடையலங்காரமும் அரங்கின் பார்வையாளர்களை அவர் கவனித்தவிதமும் அதிர்ச்சியாக இருக்கிறது. கால்களை மிகவும் குறுக்கம் செய்து நடந்த பாங்கு நாம் யாரையும் உதைத்துவிடக் கூடாது என்பதில் ஜாக்கிரதை உணர்வு வெளிப்பட்டது. மேடையிலிருந்தவர்கள ஒருவித அச்ச உணர்வு வந்து போனதை அறிய முடிகிறது.

பாலா பேசத் துவங்கும் போதே சிலசொற்களை அவர் பேசிவிட அவை ஒலிவாங்கியின் வழியாக வந்து சேர்வதற்கு சில நொடிகள் ஆனது. இந்தி சீரியலுக்கு வசனம் ஒருபக்கம் போக அவர்களின் முகபாவங்களும் உச்சரிப்பும் வேறுபக்கம் போவது போலவே இருக்கிறது. இலக்கியவாதிகளுக்குண்டான குணாதிசயங்கள் பற்றியும் தான் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளித்த வரலாற்றைச் சொன்னார். சேது படம் ஒரு மலையாளச் சிறுகதைதான். அதற்கடுத்த நந்தா கதை கூட இலக்கியத்தின் பாதிப்பின் உருவானது. பிறகு பிதாமகன் ஜெயகாந்தன் சிறுகதை, நான் கடவுள் ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் நாவல், எச். டேனியல் எழுதிய ரெட் டீ எனும் எரியும் பனிக்காடுதான் பரதேசி படம் அதனுடன் எடலாக் குடி ராசா எனும் கதை இணைந்தது தான். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் தொகுப்பில் இருந்த கதை. நாஞ்சில் நாடன் வசனம் எழுதினார். இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் படத்திற்குக் கூட ஜெயமோகன் எழுதுகிறார். இப்படியாக எங்கள் படங்கள் இலக்கியவாதிகளின் பங்குடன் எடுக்கப்படுகிறது. இன்று எதுவும் தீண்டத்தகாதது ஒன்றுமில்லை என்றானபோது சினிமாவும் தீண்டத்தகாத தொழில் இல்லை. நீங்கள் அனைவரும் சினிமாவுக்கு வரவேண்டும். நான் இலக்கியப் பேச்சாளர் இல்லை. விருது பெருகிற தெளிவத்தை ஜோசப் அவர்களின் கதைகள் குறித்துச் சொன்னதைப் பார்க்கும் போது அவர் கதைகள் முக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறேன் விருது பெறுகிற அவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.

அவன் இவன் படத்தைக் குறிப்பிடவில்லையே என ந.முத்து தெரிவிக்க அது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது இது ஜெயமோகன் விழா எப்படிச் சொல்வார் என்றேன். அவர் பேசும்போது ஜெயமோகன் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேச இளவேனில் “யப்பா இதெல்லாம் நீதான் பேசணும்..இதயும் அவர் எழுதிக்கொடுப்பாரா என்னய்யா இதுமாதிரி நடந்துக் றது டிரேட் போல.. விஜயும் பிரபு தேவாவும் இப்படித்தான் நடந்துக்குவாங்க தெரியுமா இதெல்லாம் ஒரு டிரேட் மார்க்கா..“என்றார். ஆனா ஒண்ணுயா.. விதியப் பாத்தியா.. வசனத்திற்கே வேலையில்லாத பாலாவின் படத்திற்கு தன்வாழ்நாள் அனைத்தும் எழுதிக்குவிக்கிற ஒரு படைப்பாளி வசனம் எழுத வேண்டியிருக்கு.. கவனிச்சயா என்றேன்.. இந்த அமைப்பு கூட புதுமைப்பித்தனுக்கு கிடைக்கலையே..பாரதிதாசன் படாத கஷ்டமா..அந்தக் காலத்தில ஐம்பது பாட்டு எழுதின காலத்தில கூட நம் நவீன கவிஞர்களுக்கு ஒரு பாட்டு கூட சினிமாக்காரன் தரலையே..பாலா வாங்கங்கறாரா வந்திறாதீங்கன்னு சொல்றாரா...எங்களுக்கு அமைதிப்படை அமாவாசை தான் நினைவுக்கு வருகிறது.

         பாலா பேசிய பிறகும் அரங்கத்திற்குள் இலக்கிய ஆர்வலர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். அலைபேசி வந்த பிறகு மிகத்துல்லியமாக சாவு வீட்டுக்கு வருவதை விடவும் நேரடியாகவே மக்கள் மின்மயானத்திற்குள் நுழைவதுபோன்று வர ஆரம்பிக்கிறார்கள். நேரம் இழப்பதைக்கூட துல்லியமான நேரம் பார்த்து இழப்பவர்கள் ஆயிற்றே நம் காலத்தவர்கள்...பாலா பாலாவிற்கு டப்பிங்க் பேசி சப்பென்று முடிந்த நிலையில் அரங்கத்தில் யார்தான் சிறப்புப் பேச்சாளர்கள் ஒருவேளை தெளிவத்தை ஜோஸப் பட்டையெடுக்கப் போகிறாரா.

மேடையில் வழக்கம் போலவே இலக்கியப் பெண்கள் யாருக்கும் விழாவில் பேச வாய்ப்பு தரப்பட்டிருக்கவில்லை. அதுமட்டுமின்றி கோவையில் வாழ்கிற படைப்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் இழிவையும் தாண்டி மொண்ணைத்தனத்தையும் தாண்டி இடது சாரிகள், மொழி உணர்வாளர்கள்,நவீன இலக்கியப் படைப்பாளர்கள், கோவையில் இயங்கும் தமிழ் அமைப்புகள், ஆன்மீக இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் என்று அரங்கில் குழுமியிருந்த காட்சி ஆச்சர்யப்படவே வைக்கிறது. உள்ளுர் இலக்கியவாதிகள் மேடையைத் தொண்ணாந்து பார்த்தபடியும் தொடர்ந்து இலக்கியப் பகுதிக்குள் பெண்களைப் புறக்கணிக்கிற பணியைச் செய்கிற விஷ்ணுபுரம் இலக்கிய மேடை குறித்து எழும் விமர்சனங்களை நான் தவிர்த்தேன். “எங்கிட்ட ஏன்யா கேட்கறீங்க உங்களுக்கு வாய் இல்லையா.. போலீசு நிக்குது.. பாருங்க.. தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் போட்டாலும் போட்ருவாங்க.. தமிழே பேசக்கூடாது இப்ப நீங்க பேச வேண்டியது புலம் பெயர் தமிழ் என்ன பெரிசு புரிஞ்சுதா.. நீங்களே போய்க் கேளுங்களே நானென்ன உங்களுக்கு பொணையா..அவிங்க கடிச்சா தின்றுவாங்க..

அவர்களோ.பதிலுக்கு இன்னக்கி கர்நாடக சங்கீதம் கேட்க வந்தம்னு நெனச்சிக்கறம்..வா உட்காரலாம்.. இந்த முறை நாங்கள் மேலும் இறுதியான  வரிசையில் அமர்ந்தோம். ந.முத்து தனது தோழர்களுடன் இணைந்து கொண்டார். ஜான்சுந்தர் எங்கள் வரிசைக்கு வந்தார். பின்னால் திரும்பிப்பார்த்தால் ஒரு பக்கம் சரஸ்வதி கையில் வீணையுடனான மிகப் பெரிய தத்ருபமான சிலை. வலது பக்கம் லட்சுமியின் சிலை. நடுவில் வெங்கடேசப் பெருமாள்சிலை. நாங்கள் மூன்று பேரும் மிகச்சரியாக அவர் நெஞ்சுக்கருகில் அமர்ந்து மேடையைப் பார்க்கவும் சரியான அளவான தொலைவு. அரே வெங்கடேசப் பிரதிப பிரதீப்ப் ப்ரியம் வெங்கடேசப் பெயர்ச்சப் பெயர்ச்ச..

      இந்திரா பார்த்தசாரதி பேச அழைக்கப்பட்டார். அரங்கிலிருந்த மக்களின ஐயப்பாட்டுடன் அவரும் ஒன்றிணைந்தமை அறிந்தோம். அதாவது இதுவரை தெளிவத்தை ஜோஸப்பின் எழுத்து எதையும் படித்ததில்லையென்றார். இளவேனில் அந்த ஸ்பிரைட் பாட்டிலக் காட்டு என்றார். நான் மறுத்தேன்.

இ.பா பேசினார். ஆனாலும் அவர் கதைகள் குறித்து இங்கிருப்பவர்கள் நண்பர்கள் பேசியதிலிருந்து மகத்தான எழுத்தாளராக அறியமுடிகிறது. ஆங்கில இந்திய எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதையும் தமிழில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை பற்றிப் பேசினார். மிக அளவான வாழ்த்துரை. பத்மஸ்ரீ விருது பெற்ற நவீன எழுத்துக்குச் சொந்தக்காரர். தனது முதுமையைக் காரணம் காட்டி வராமல் தவிர்க்காமல் வந்திருந்து வாழ்த்திய அவருக்கு நன்றியறிதலைத் தெரிவிக்கிறார் தெளிவத்தை..

அரங்கு குளிருட்டப்படாமலே இளைய இரவின் குளிரில் நனையத் துவங்கியபோது ரவிசுப்பிரமணியன் பாட அழைக்கப்பட்டார். முதலில் கொஞ்சம் பேசினார். நிகழ்விற்கு வரவிருந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கவிதைகளை ஜெயமோகன அனுப்பிவைத்து நீங்கள் பாடலாகப் பாடவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். பிறகு அந்த நீள் கவிதைகளைச் சுருக்கி சிறுசிறுபாடல்களாக கோர்வை செய்திருக்கிறேன். என பாட ஆரம்பித்தார். தார,மத்ய, உச்ச என மூன்று ஸ்தாயிகளினாலும் சொல் பிசகாமல் நுட்பமான சங்கதிகளுடன் பாடி ஆச்சர்யப்படவைத்தார். இந்த அரங்கில் டிசம்பர் சீசனில் சங்கீதக் கச்சேரிகளை நான் கேட்க வில்லை. அந்தக் குறையை அவர்  ஆரபி,இந்தோளம், நாட்டைக்குறிஞ்சி என பல ராகங்களில் பாடியது சிலிர்க்க வைக்கிறது.  அந்தக் கவிதையின் பொருளும் சொற்களும் உணர்ச்சிகரமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் காமராஜர் காலமானபோது தமிழ்நாடெங்கும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் சில பாடல்கள் இந்த ராகத்தில்தான் ஒலித்தது. எங்கள் ஜின்னிங்பாக்டரி சாலை வீதியானது ஜனதாக் கட்சிக்காரர்கள் நிறைந்த பகுதி. எழுபத்தி நான்கு வருடம் என நினைவு. அதுமட்டுமல்ல எந்த விழாவிலும் இருகூரில் பாடுகிற மைக் செட் காமராஜர் குறித்த பாடல்கள் ஒலித்த காலம். எனக்கு ரவியின் குரல்வளம் இந்தச் சம்பவங்களை நினைவுட்டியது. இளவேனில் சிதம்பரம் ஜெயராமன், கோவை சௌந்தர ராஜன் குரலிலும் பாட்டின் எடுப்பு இருக்கிறது என்றார். அரங்கம் ரவியின் கட்டுப்பாட்டில் வருகிறது. சில வரிகளை அவர் கடல் அலைபோலவும் ரயில் பூச்சியின் நெளிவு சுளிவுடன் பாடிக் கிறங்க வைத்தார். குறிப்பாக அவருக்கு “மசங்கதிகள் அற்புதமாக வந்து பேசியது என்று சொல்லலாம். அவருடைய பல ஆக்கங்களை நான் பார்த்துக் கேட்டிருந்தாலும் இந்த நிகழ்வில் அவர் பாடியது ரசிக்கத்தக்கவகையில் அமைந்தது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு இருந்து கேட்க்க கொடுத்துவைக்கவில்லை. அடுத்ததாக சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டார்.

            தெளிவத்தையின் சிறுகதைகள் நான்கு குறித்துப் பேசினார். தமிழர்களின் பழம் பெரும் புலம் பெயர்தல், அலைக்கழித்த வாழ்க்கை குறித்த ஆய்வு சிறப்பாகவும் துயர மிகுதியாகவும் இருக்கிறது. குறிப்பாக அம்மா எனும் கதை பற்றிய உருவகம் சிறப்பாக இருந்தது. ஏற்கெனவே இலக்கியவாதிகள் அறிந்து வைத்திருக்கும் புதுமைப்பித்தனின் சிற்பியின் நகரம் கதையுடன் இந்தக் கதையை ஒப்பிட்டுப் பேசினாலும் ஒப்புமை சரியாகவே இருந்தது. மரணத்தின் வாயிலில் இன்று மரித்துவிடுவார் என்று மூன்று முறை காத்திருந்தும் மரணிக்காத அம்மா ஏமாற்றுவதைச் சொல்வதாக கதை இருந்தாலும் இறுதி வரியில் இந்த முறை அம்மா ஏமாற்றமாட்டாள் என்பதாக கதை முடிகிறது. தொகுப்பில் இருக்கிற மற்ற கதைகளை அறிமுகம் செய்தாலும் இந்தக் கதையின் விரிவைச் சொல்லி அவருடைய நாவலான குடைநிழல் குறித்தும் பேசினார். மலையகத் தமிழர்களின் வாழ்வு, அவர்கள் பத்திரப்படுத்திவைக்காத ஆவணங்கள் இல்லாமையால் சுமார் பத்துலட்சம் மக்கள் தங்கள் தாயகம் நோக்கித்திரும்பி வந்து பிறகு ரீபேட்ரியாட் என்று தாயகம் திரும்பியோர் என்று வகைமைப்படுத்திய விவரங்கள் பற்றியெல்லாம் சு.இந்திரஜித் விரிவாக ஆய்வில் விளக்கினார். யாழ்ப்பாணத்தமிழர்கள் மற்றும் வடகிழக்கு மாகாணத்தமிழர்கள் மலையகத்தமிழர்கள் என்று பலவேறுபாடுகளின் பின்னணி. தேயிலைத்தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்களின் பின்னணி. தமிழகம் உள்பட பல தென்னிந்திய நிலங்களில் ஏற்பட்ட பஞ்சம். இதன் காரணமாக நடந்த புலம் பெயர்தல் குறித்தெல்லாம் தெளிவத்தையின் படைப்புகளில் ஊடாடி வருவதைச் சிறப்பாக அவர் உருவகம் செய்தார். 68 களிலிருந்து இலங்கையின் இறுதிப் போர்வரை மலையகமக்களின் வாழ்நிலை பற்றிய செய்திகள் அறிய முடிகிறது என்கிறார். பிறகு அவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். இலங்கை தேசம் பத்துலட்சம் மக்களைத் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டபோது நடந்த கொடுரமான சாவுகள். புலம் பெயரும் போது ஏற்பட்ட சிக்கல்களில் அலைக்கழிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இவரின் படைப்புகளில் எதிரொலிக்கிறது என்றார். சு.இந்திரஜித் பேசிய பிறகுதான் அரங்கம் யார் இந்த தெளிவத்தை ஜோஸப் என்பதை அறிந்து கொண்டார்கள். அரங்கின் பங்கேற்பாளர் உள்பட பலருக்கு புலம் பெயர்ந்த எழுத்து குறித்து அறிய நேர்கிறது. நல்ல அறிமுகத்தை வழங்கியவருக்கு அரங்கு கைதட்டலைத் தருகிறது.

நமது வாழ்த்தை துயரமான நிகழ்வாக இருந்தாலும கைதட்டிதான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. துன்பம் குறித்தும துயரம் குறித்தும் பேசுபவர்கள் இலக்கியவாதிகள் என்று பொதுமையான ரசனையாளர்கள் வருவதில்லை. ஆனால் ஒப்பாரியையே கலையாக்கி அ டிமைப்படுத்திக் கொள்கிற பிரசங்கங்களுக்கு மக்கள் சென்று தேம்பித்தேம்பி அழுவதை குடும்பம் குடும்பமாகச் சென்று அழுதுவருகிறார்கள். வேறு வழியில்லை. இந்த இரவின் மதக்கப் பொழுதிலும் சரியான நேரத்தில் மேலும் வருகையாளர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். நான் ந.முத்து, இப்பொழுது ஜான் ஆகியோருடன் பேசியபடியே நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருந்தமையால் இளவேனில் காகிதத்திலும் வாங்கிய புத்தகங்களிலும் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார். யோவ் என்னய்யா பேசிட்டிருக்கறே..நான் உனக்கு வேண்டி நோட்ஸ் எடுத்திட்டிருக்கறேன்..என்ன கவனி என்கிறார்..நானோ அடப் போய்யா மாங்கு மாங்குனு எழுதினா ஒரு லைக் விழும். அந்தக் கருமத்துக்கு எழுதாமயே விட்டர்லாம் என்றேன்..யோவ் மண்ணு..எவன் லைக்கலைன்னா என்னய்யா நீ பார்த்ததை எழுது. இலக்கியத்துக்குள்ள இந்த லைக்குகளை நம்பியா வந்தோம்..என்றார். நான் நிமிர்ந்து உட்கார்ந்து சுரேஷ் பேசியதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவரும் என் சாதி. காரணம் பலகுரலிசைக்காரர். உலக இலக்கியங்களின் சிறந்த வாசிப்பாளர் என்றார்கள். அவரின் முதல் மேடை என்கிறார்கள். பலகுரலிசைக்காரருக்கு முதல் மேடை என்பதுதான் நெருடலாக இருக்கிறது. விகடகவிக்கு உலகமே மேடைதான். பார்வையாளர்கள் எல்லாரும் அப்பாவிகள். சுரேஷ் அப்பாவிகள் என்று பங்கேற்பாளர்களைக் கருதாமல் சிறப்பாகவே பேசினார்

           இந்திராபார்த்தசாரதி அவர்களின் எழுத்தைத்தான் முதலில்வாசித்ததாகப் பெருமை பொங்கச் சொன்னார். தான் ஒன்பதாவது படிக்கும்போது  துணைப்பாட நூலில் இ.பா வின் சிறுகதைகள்தான் தனக்கு இருந்தது. நீங்கள் கேட்கலாம். எப்படி ஒன்பதாம் வகுப்பில் இலக்கியம் வந்திருக்கும் என்று. நான் படித்தது சிபிஎஸ்சி சிலபஸ் என்பதால். அதற்காக இன்றைய காலத்தில் அந்தப் பிரிவில் ஏன் தமிழிலக்கியம் இல்லையென்று கேட்காமல் விழாவை கவனி என்றார் இளவேனில். என்னய்யா கேட்க கூடாதா என்ன..வரவர அவர் சாந்தசிவம் ஆகி என்னை கராத்தே மணியாக்கிவிடுகிறார். அவருடைய சிறுகதைகளை வாசிக்கத்துவங்கியதிலிருந்து தமிழ் நவீன இலக்கியங்களை வாசிப்பதற்கு அவருடைய படைப்புகள் உதவியது என்றார். பிறகு நண்பர் தியாகுவின் நூலகத்தில் அவருடைய எல்லாப்படைப்புகளையும் நான் தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அவருடன் இன்று எனது முதல் இலக்கிய விழாவில் அவருடனே அமர்ந்திருப்பது என் பாக்கியம் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு நன்றி.  இ.பா.வின் கிருஷ்ணா,கிருஷ்ணா நாவல் மிகச் சிறந்த நவீன இலக்கியப்படைப்பு இந்த நாவலை ஏறக்குறைய தொண்ணூறு பிரதிகள் வரை நண்பர் தியாகுவும் நானும் வாங்கித் தந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல நாம் அனைவரும் நமது வீட்டில் வைத்துக் கொண்டாட வேண்டிய படைப்பாக இந்த நாவல் இருக்கிறது என்றார். விஷ்ணுபுரம் விழா பல விருதுகளுக்கு அடித்தளம் இடும் விழாவாக அமைந்து வருகிறது. இதன் மூலம் நமது இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு ஞானபீடம் விருதும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார் சுரேஷ்.

அவருடைய குரல் வளம் சிறப்பாக இருந்தது. ஒரு சமயத்தில் கார்ட்டுன் படங்களுக்கும் அனிமேசன் படங்களுக்கு தமிழில் குரல் கொடுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சூழலியல் படங்களுக்கு தமிழில் பின்னணி பேசுவது போன்ற தொனியில் அவர் பேசியது ஒரு ஆவணப்படத்தைக் கண்டு களித்துக் கொண்டிருப்பதாகவே உணர்வு 

          நான் ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் வாட்ச் பார்ப்பதும் பிறகு மேடையில் மேலும் பேச வேண்டியவர்களின் வரிசையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது அடுத்ததாக ஜெயமோகன் தவிர யாருமில்லை. பிறகு தெளிவத்தை ஜோசப். எதிர்பார்த்தது போலவே பேச வந்தார். விழாவிற்கு வந்திருக்கிற தனது ஆசான்கள் நெடுநாளைய நண்பர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன் இந்த விழாவை கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக கலந்துரையாடல், படைப்பாளர்களுடன் நேர்காணல், சிறப்பு சந்திப்பு இப்பொழுது இந்த விருது வழங்கு விழா இப்படியாக சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிற நண்பர்களை நெஞ்சாரத்தழுவிக் கொள்கிறேன் அவர்களுக்கு நன்றி. இங்கு வந்திருக்கிற நண்பர்கள் தனது சக படைப்பாளர்களைப் பெயர்களுடன் வரவேற்று மகிழ்ந்தார். அதீதமான அறிவுடைய இலக்கிய வாதிகளுக்குள்ளாக இருக்கிற முரண்பாடுகளை பாலா சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் முதலில் ஒரு கதையுடன் ஆரம்பித்தார். பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதைகளில் ஒரு வாக்கியம் வரும் கொலச் சோறு என்பது. அதாவது மரணத்தின் விளிம்பில் இருக்கிற ஒரு கைதிக்கு அல்லது ஒரு உயிருக்கு இறுதியாக சாப்பிடக் கேட்பதைத்தருவார்கள். அதில் எல்லாவித பலகாரங்களும் உணவும் இருக்கும். அவன் விரும்பி உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பெயர்தான் கொலச்சோறு. அவன் மறுபடியும் சாப்பிடப்போவதில்லை. அவன் சாவிற்கு அளிக்கப்படுகிற சோறாக இருப்பதால் அந்தப் பெயர். ஒருவகையில் இலக்கியவாதிகளும் கொலைச் சோறு சாப்பிடுகிறவர்கள்தான். மலையாளச்சிறுகதை ஒன்று உண்டு. ஊருண்ட நாராயணப் பிள்ளை எழுதிய ஒரு கதை. அதாவது யானையை கொல்வதற்கு முயற்சி செய்கிற கதை. அந்தப் பாகனின் தாத்தாவும் பாகன் தான் அவரையும் யானை ஒரு திருவிழாவில் கொன்றிருக்கிறது. அதுபோலவே தன் தந்தையையும் ஒரு திருவிழாவில் யானை கொன்றிருக்கிறது. ஒரு கணம் நான் என் தந்தைக்கு உணவு எடுத்துக் கொண்டு போயிருக்கிறேன். நான் போகும் சமயம் என் தந்தையை யானை இரண்டு முறை தலைக்கும் மேல் தூக்கி நிலத்தில் அடித்தது. பிறகு வயிற்றில் மிதித்துக் கொல்கிறது. அப்பாவின் குடல்கள் குதவழியாக வெளிவருகிறது. அந்தக்கதையில் பாகன் பேசுகிறான். நான் கொண்டு போன சோறு தெறித்து விழுகிறது. அப்பா என்னைப் பரிதாபமாகப் பார்த்து உயிரைவிடுகிறார். பிறகு அவன் அந்த அப்பா தாத்தா பிடித்த தொறட்டிக்குச்சியை எடுத்துக் கொண்டு நானும் பாகனாக மாறினேன் என்கிறான். அந்த அரண்மனையில் யானைக்குப் பாகனாகச் சேர்கிறான். அந்த யானைக்கு ஒருவாரத்தில் விஷம் வைத்துக் கொன்று பழிவாங்கப் போனவன் யானையுடன் பழகப்பழக சிநேகம் கொள்கிறான். பிறகு ஏன் யானையைக் கொல்லவில்லை என்று தன் உறவினர் கேட்டபோது நான் கொல்லத்தான் போனேன் ஆனால் நான் யானையுடன் சிநேகித்துப் போனேன் சாரே. சிநேகம் பண்ணிட்டா யாரையும் கொல்லமுடியாது என்கிறான். இப்படித்தான் இலக்கியத்தை சிநேகம் செய்யது விட்டால் விலகவே முடியாது. சண்டைகள் மறந்து போய் சிநேகம் வந்துவிடுகிறது என்றார். இந்த சமயத்தில் அரங்கில் பலத்த கைதட்டல்கள். ஒரு வரிசையில் மிக அதிகமான கைதட்டல் வந்த இடத்தைக் கவனித்தேன். அங்கு தேநீர் அடுமனையில் பார்த்த காதலர்கள் உற்சாகமாகக் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்..

      தெளிவத்தையின் எழுத்துகள் இப்படியான கதைகளைக் கொண்டது அவருடைய படைப்புலகம். அவருடன் நேர்காணலில் அடுக்குகிற செய்திகள் பிரமிப்பானது. எந்தக் கதை எப்பொழுது பிரசுரமானது என்பதை நினைவில் வைத்திருக்கிறார். இது தீபம், கணையாழி, மஞ்சரி, அமுதசுரபி என்று இலக்கியத்தைப் பற்றிய துல்லியமான பதிவுகளை வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல நாம் இப்பொழுது இவருக்கு விழா எடுப்பது போன்று புதுமைப்பித்தனுக்கு விழா எடுத்தவர் அவர். மலையகத்தமிழர்களின் வாழ்வு குறித்த பதிவுகள் நிறைய சேகரித்து வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் பல உலகநாடுகளுக்கு மக்களை வெளியேற வைத்தது. இப்பொழுதும் மக்கள் தங்கள் தாய்தேசத்தின் அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தாங்கள் எந்தப்புலம் சாதி பின்னணி தெரியாமல் வாழ்கிறார்கள். ஒரு முறை நியுயார்க் விமான நிலையத்தில் தமிழில் பேசிக்கொண்டிருந்த இளைஞர்களைப் போய் விசாரித்தபோது அவர்களின் பெயர்கள் தமிழ்ப்பெயர்கள். சாதிப்பெயர்களை வைத்திருக்கிறார்கள். நுட்பமாக ஆராய்ந்தால் நம்மால் விளங்க முடியும். படையாச்சி, செட்டியார், பெயர்கள் மாறியிருக்கிறது. ஒரு டீவர் என்றார். தேவர் என்பதைத்தான் அவர்கள் டீவர் என்று சுருக்கியிருக்கிறார்கள்.

        ஒரு கட்டுரையில குறிப்பு வருகிறது பஞ்ச காலத்தில் ஆயிரத்தி ஐநூறு அடிமைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் ஆஸ்திரேலியா செல்வதற்குப் பதிலாக நியுசிலாந்து சென்று விடுகிறது. அங்கு மைனஸ் பத்துடிகிரி செல்சியஸ் குளிர். சென்ற மக்களுக்கு கோவணம் மட்டும் இருந்திருக்கிறது. அங்கேயே மரணத்தைத் தழுவுகிறார்கள். இதுபோன்ற கொடுமைகளில் கொஞ்சம் பேர் தப்பிப்பிழைத்து ஆங்காங்கு வாழத் துவங்குகிறார்கள். இப்படியான அடிமைகளின் வாழ்வாக மலையகத்தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இருந்திருக்கிறது. இந்த மறைக்கப்பட்ட வாழ்வைத்தான் தெளிவத்தை ஜோசப் எழுதிவருகிறார். அவருடைய நான்கு சிறுகதைத் தொகுப்புகள். ஒரு நாவல் இதன் மையமாக துயரமான வாழ்வே பேசப்படுகிறது. அலெக்ஸ் ஹீலி கருப்பின அடிமைகள் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். ஒரு கப்பலில் அடிமைகள் கடத்திக் கொண்டு போகிறார்கள் கப்பலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எட்டுமாதங்கள் கழித்துதான் கைவிலங்குகள் அவிழ்க்கப்படுகிறது. அதற்கு  முன்பு வரையிலும் அதே நிலையில் மலஜலம் கழிப்பது எல்லாம் அங்குதான். கப்பலின் துவாரத்திலிருந்து வரும் வெளிச்சத்தின் வழியாக காலத்தை நேரத்தை அறிந்து கொள்கிறான். தனது இருப்பின் நாட்களை அறிய மலத்திலிருந்து துணுக்குகளை எடுத்து கப்பலில் நாட்கணக்கு குறிக்கிறான். அவனுக்கு உணவு மேலிருந்து எறியப்படுகிற பொழுது வாயால் கவ்வித்தான் உணவை சாப்பிடுகிறான். இப்படியான அடிமைகள் வாழ்வு போலவே தமிழர்களின் புலம் பெயர்வாழ்வும் இருந்த வரலாறுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தெளிவத்தை ஜோசப் எழுத்துக்கு அளிக்கப்படும் மரியாதை அவருடைய படைப்புகளின் வழியாக அறியமுடியாமல்போன மலையகத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அவருடைய முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த விழாவிற்கு வந்திருந்து உரையாற்றிய என் உறவினர் ரவி சுப்பிரமணியன். இந்திரா பார்த்தசாரதி, இருபத்தி ஐந்து ஆண்டுகளாக எழுதிவரும் நண்பர் சுரேஷ்குமார இந்திரஜித், நண்பர்கள் இயக்குநர் பாலா அவர்களுக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார்.

            வழக்கமான உரையிலிருந்து மாறுபட்டிருப்பதைக் கேட்க முடிந்தது. அவர் மேலும் அதிகமாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. உணர்ச்சிமயமிக்க உரை. புலம் பெயர்ந்து பல தேசங்களில் வாழ்கிற தனது நண்பர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின மனநிலையை, மனச்சுமையை அவர்கள் தங்கள் தேசங்கள் பற்றிய மறு ஆக்க கனவுகளுடன் வாழ்வதை குறிப்பிட்டுப் பேசியதாக அறிய முடிந்தது. பொதுவாக இன்று  அதிகமாக ஆக்கம் செய்யப்படும் அடிமை இலக்கிய வகைமைகளைக் குறிப்பதாக அமைந்தது. அது மட்டுமின்றி இன்று நிலவும் அடிமைகள் வாங்குதல், தொகுப்புக் கூலி அடிமை முறை, கேம்ப் கூலிகள் என்று இளம்பெண்களை மூன்றாண்டு ஐந்தாண்டுகள் ஒப்பந்தமுறைகளில் வேலைவாங்குதல். கல்குவாரிகளில், ரயில்வே பணிகளுக்கு அடிமைகள் வாங்குதல் என்று நடந்து கொண்டிருக்கிற கொடுமைகள் குறித்த பதிவுகள் இல்லை. ஒரு படைப்பாளியைத் தற்காலத்தைக கவனியுங்கள் என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். இலக்கியம் என்பதே நேற்று இன்று நாளை என்பதுதான். முதலாளியத்தைச் சாடுவதை விடுத்து மக்கள் முட்டாள்கள், அறிவற்றவர்கள். சூப்பர்வைசர்கள், கண்காணிகள்தான் மோசமானவர்கள். முதலாளிகள் மிகவும் நல்லவர்கள். என நிறுவுகிற இலக்கியங்களின் சமகாலப் போக்குகளையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருக்கலாம்.

      அடுத்தாற்போல விழா நாயகர் தெளிவத்தை ஜோஸப் பேச வந்தார். அவருடைய உரை ஆரம்பத்தில் நடிகர் ஐசரி வேலன் குரலாகவும் அவருடைய உடல் மொழியாகவும் அமைந்திருக்கிறது. அவர் அதிரடியாக இரண்டு பழமொழிகள் சொன்னார். ஒன்று பொண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. அதாவது தனக்கு விருது அளிப்பு குறித்த செய்தி வந்த கிழமை புதனாம். அதற்கு அந்தப் பழமொழி. பிறகு ஜெயமோகன் தன்னுடைய நாவலை எழுத்துப் பதிப்பகம் மூலமாக அலெக்ஸ்சிரில் வெளியிடுவதாகவும் அது போலவே அந்த நாவலுக்கு முன்னுரையை எழுதலாம் என்றிருக்கிறேன் எனக் கேட்டபோது நான் கரும்பு தின்னக் கூலியா என்றுக் கேட்டேன் என்றதும். பங்கேற்பாளர்கள் தங்கள் முகங்களைப்பார்த்துக் கொண்டார்கள். நான் எண்ணற்ற கூட்டங்கள் கேட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி கோவையில் இது போன்ற அரங்குகளுக்குச் சிறப்புப் பேச்சை முதல் வரியிலேயே அறிந்து கொள்கிற நாசியை உடையவர்கள் கோவையின் பல்சமய உறவுமக்கள் எத்தனை சிறப்புரைகளைக் கேட்டிருப்பார்கள். நாற்காலிகளை ஜோஸப் காலி செய்யத் துவங்கினார்.

       இந்திரா பார்த்தசாரதி அவர்களுடனான பழம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நா.பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழில் மிகச்சிறந்த படைப்புகள் வெளிவரும். அப்படியான பொழுதில் நண்பர் ஒருவர் பார்த்தசாரதி என்பவர் ஒருவர் எழுதிவருகிறார் வாசித்தாயா என்றார். நான் நா.பா வா என்றேன் இல்லை இவர் இந்திரா பார்த்தசாரதி என்றார். அந்தப் படைப்புதான் தந்திரபூமி அந்தப் படைப்புதான தனக்கு ஆதர்சம். இன்று அவருடனே அமர்ந்து விருது பெறுகிற வாய்ப்புக் கிட்டியதற்காக மிகவும் மகிழச்சியாக இருக்கிறது என்றார். எனக்கு மட்டுமல்ல மலையகச் சிறுகதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிற எம்என் எஸ் ராமையா அவர்கள் தொகுத்த சிறுகதைகளின் பாதிப்புதான் தான் எழுதவந்த நிலை என்றார். அவர் தொத்த சிறுகதைகளில் ஒன்றுதான் என்னுடைய மீன்கள் சிறுகதை. இந்தக் கதைக்கு அவர் எழுதிய குறிப்பு. இந்தக் கதை இதுவரையிலும் அறியப்படாத மலையக மக்களின் வாழ்க்கை குறித்து வெளியாகும் சிறுகதை எனறு. சு.இந்திரஜித் அவர்கள் மிகச்சரியாகவே மலையக மக்களின் வாழ்க்கைப் புலத்தை எடுத்துரைத்திருக்கிறார். தோட்டக்காட்டான் என்பதுதான் அவர்களின் அடைமொழி. பிறகு கள்ளத்தோணி என்பதாக மாறிய விதங்களை விவரித்தார்.

        நான் ஜெயமோகன், முருக பூபதி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த போதுதான் இலங்கையில் இறுதிக்கட்ட போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. என்போன்றவர்கள் செய்வதறியாது தத்தளித்தோம். அப்பொழுது நாங்கள் அடைந்த துயரங்களை நேரில் கண்டவர் ஜெயமோகன். மலையக மக்களை யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கவில்லை. சிரிமாவே பண்டாரநாயக ஒப்பந்த்தின் படியாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் அளவேயில்லை. இன்று சில மலையக மக்களின் எழுத்துகள் வெளியாகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குப் பல அச்சுறுத்தல்கள். நெருக்கடிகளையும் மீறித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. வனசாட்சி போன்ற நாவல்கள் வெளியாகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் எடுத்த விழாவின் மூலமாக மலையக மக்களின் வாழ்வையும் இலக்கியப்படைப்புகளையும் அறிந்து கொள்வதற்கு உதவியிருக்கிறது அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விழாவின் இறுதியில் செல்வேந்திரன் பங்கு கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில் பாலாவின் பாதுகாவலர்கள் ராகுல் காந்தியைவிடவும் பாதுகாப்பாக அழைத்துப் போனார்கள். அவருக்கு வழிவிட்டு மளமளவெனக் கலைந்து கொள்கிறார்கள். பிற்பாடு புகைப்படங்கள் மற்றொரு இலக்கியக் கூட்டமாக நண்பர்களின் உரையாடல் தொடர்கிறது.

விழா நடைபெறும் அரங்கிற்குக் காலையிலிருந்தே லாரிகளில் மூட்டை மூட்டையாக அறம், விடுதலையுணர்வு, நுட்பம், துல்லியம், உள்ளுணர்வு,ஸ்தூலம் போன்ற வஸ்துகள் வந்திறங்கிக் கொண்டிருந்தது. விழாவிற்கு வருபவர்களுக்கு அளிப்பதற்காக. மேலும் கிருஸ்துமஸ் தாத்தா உடைகள், விக் தாடிகள், சிங்கம்11 மீசைதாடி கெட்டப் முகமூடிகள் வாயிலில் நிரம்பக் கொண்டிருக்கிறது. செஞ்சிலுவை மன்றத்தைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் சிக்னலில் நின்ற வாகனங்களுக்கு முன்விளக்கு நடுமையத்தில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். நாங்கள் வந்த இளவேனில் வண்டிக்கும் ஒட்டினார்கள். சற்று நேரத்தில் அந்த மாணவர்கள் முகங்கள் மாறுகிறது. அந்த ஐந்து வழிச்சாலை விழாவின் அரங்கமாக மாறுகிறது. நிரம்பிய அரங்க இருக்கைகளில் உட்கார்ந்திருக்கிறவர்கள் முகங்களில் அந்த கருப்பு ஸ்டிக்கர் மினுக்குகிறது. ஒரு முறை கண் கண்ணாடியைச் சுத்தம் செய்து அணிந்து கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை ஸ்பிரைட் பாட்டிலில் கரைந்து வைத்திருந்த விஎஸ்ஓபி பீரியமியத்தின் மிடருகளை விழுங்கிக் கொள்ள எல்லாம் சரியானது. இளவேனில் கொஞ்சம் தண்ணி கொடு என்றார் நான் வேறொரு பாட்டிலிலிருந்த வெண் தண்ணீரை அவருக்கு அளித்தேன். அவர் என்னமோ உன்கிட்டருந்து வாசம் வருது என்றார் நானோ ஆரம்பிச்சிட்டியா என்றபடி என் தோள்பையைக் காட்டினேன். அவரும் விஷ்ணுபுரம் மற்ற விழாக்களுக்கு வந்த அதே பேக் கோட வந்திட்டிருக்கியே எப்படியா என்றார். நான் வேணும்னா ஒரு பேக் வாங்கிட்டு வந்தர்றேன் மாமாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடு என்றார். யோவ் இந்த பேக் ராசியான பேக்யா. இதவாங்கினதுல இருந்துதான்யா ஜெயமோகன் கோயமுத்தூர் வந்திட்டேயிருக்கார்..அதனால நான் மாத்தமாட்டேன் என்றேன்.

 

  வண்டியை ஒண்டிப்புதூரில் நிறுத்திவிட்டு பேல் பூரி சாப்பிட்டோம். நல்ல பசி. பத்துமணியை நெருங்கியிருக்கிறது. இரவின் சாலைகள் எங்கோ போய் அடிமைப்பராரிகளின் உறக்கத்திற்குள் நுழைகிறது. கடந்த விழாவில் நாஞ்சில் நாடன் கேட்டுக்கொண்டபடியே விருது தொகை ஒரு லட்சமாக உயர்த்தியிருக்கிறார்கள். சாகித்ய அகாடமியும் ஒரு லட்சம் தான் தருகிறது. அரசாங்கத்தின் தொகை மற்ற விருது அளிப்பவர்களின் தொகையை விடவும் குறைவாக இருப்பதை அரசு பரிசீலித்து ஐந்து லட்சமாக ஆக்கவேண்டும். ஒரு லட்சத்தை வட்டிக்குப் போட்டால் டிடிஎஸ போக ஐநூறு கிடைக்கும் புல்லுக்குக் கூட தேறாது. நாற்பது ஐம்பது வருடம் எழுதிவிட்டு சாகிற காலத்தில் அவுன் அவுன்சாகவா குடிக்க முடியும்.

    பேல் பூரி வருகிறது. எங்களுக்காக குருமாப் பாணியை நன்கு சூடாக்கித்தருகிறார்கள். வெங்காயம் வெட்டித்தூவினார்கள். உப்பு அதிகமாகவே சுவைத்தது. இளவேனில் யோவ் உப்புயா என்றார் பரவாயில்லய்யா..விழா முடிஞ்சிதான வருது..முன்னாடி வரலையல்ல அதே போதும்..“

      இரவு பத்தரை மணிக்கு விஜி தோசை ஊற்றினாள். கார்த்தி உறங்காமல் நெளிந்து கொண்டிருந்தான். யாரோ அழைப்பு மணியைக் கிள்ளியிருக்கிறார்கள். போய்ப்பார்க்கிறேன். முனைவர் வே. பரமேசுவரன் வந்திருந்தார். ஆச்சர்யத்துடன் முகமலர்ந்து வரவேற்றேன். நானும் அவரும் சில தோசைகளும் சிறு மீதி மிடறுகளும் அருந்திவிட்டு உறங்கப்போனோம்.

அரே வெங்கடேசப் பிரதீப பிரதீபப் ப்ரியம் வெங்கடேசப் பெயர்ச்சப் பெயர்ச்ச....

       

      

        

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதன், 18 டிசம்பர், 2013

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்- எட்டாம் நிகழ்வு பதிவுகள்...


 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நிகழ்வு-8  பதிவுகள்

சகோதர இலக்கியத்தின் அடுத்த கட்டம்..-

இளஞ்சேரல்

         

      கடந்த ஞாயிறு 15.02.2013 அன்று பொள்ளாச்சியில் இலக்கியச் சந்திப்பிற்காக நண்பர்கள் கூடினோம். இலக்கிய மனம் அறிந்து பழகிய முகங்கள்.நகர் மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் எட்டாம் நிகழ்வு சிறப்பாகத் துவங்கியது. நிகழ்வுக்குக் கிளம்பும் முன்பாக ஒரே வண்டியில் கிளம்பினோம். நானும் இளவேனிலும். யாழி வழியில் வந்து இணைந்து கொள்கிறேன் என்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொள்ளாச்சி-கோவை தனியார் பேருந்தில் பாடல்களைக் கேட்டுக் கொண்டு பயணிக்கலாம் என நினைத்திருந்தேன். அது ஒரு சொர்க்க உபவாசம். பாடல்கள் நின்று கொண்டிருப்பவர்களையும் உறங்கச் செய்து விடும். உயிர்பயம் தீர்ப்பது பாடல்கள்தான். பிசிறில்லாத டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்  வயலிகள் கீ போர்ட் புல்லாங்குழல் நோட்கள் அற்புதமாக இருக்கும்.

குறிப்பாக நாற்பது கிலோமீட்டர் பாதைகளுக்கு நகரத்திற்கும் கிராமங்களுக்குமாக விடப்படுகிற தனியார் லைசென்ஸ் பேருந்துகளின் நவீன வசதிகள். பேருந்து உடலெங்கும் டிஜிட்டல் ஓவியங்கள் நம்மை கவர்ந்திழுக்கும். பெயிண்டிங்க் நவீனத்துடன் வடிவமைக்கப்பட்ட பேருந்துகளின் சௌகரியம் மக்களை கவர்கிறது. மாணவ மாணவிகள் யுவன், யுவதிகளை, சகல வயது வித்தியாசக்கார மனிதர்களை வசீகரிக்கிறவை இந்தப் பேருந்துகள். எப்படியான அசுரத்தனமான வேகத்தில் போனாலும் அலுக்காத பயணம். உட்கார்ந்த மறுகணம் உறங்க வைத்துவிடுகிற பொள்ளாச்சி தென்னந்தோப்புகளின் காற்று. வளைந்து மேடும் பள்ளமுமாகப் போகும் பயணங்கள் அலாதியானது.

       மிக நெருக்கமான இருக்கை வசதிகள். புளி மூட்டைகள் ஏற்றுவது போல கிடைக்கும் சவாரிகளைகயெல்லாம் ஏற்றிக் கொள்வார்கள். டயர்களின் சத்தத்தை இளையராஜா மெட்டுகள் ஸ்வாகா செய்கிறது. பிறகு முன் பின் இரண்டு நடத்துனர்களும் உள்ள வா உள்றவா என்பார்கள். உடல்களை அந்த டப்பாவிற்குள் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போலவே திணறுவார்கள். மனிதர்களின் விதவிதமான ஊர்வாசம். மண்வாசம், ஒவ்வாரு மனிதர்களுடன் இயைந்து இயைந்து நகரும் அந்தப் பயணம் பாடல்களால் சாத்தியமாகிறது. மனித மனம் இந்த உடன்பாட்டை நவீன கால்தில் விரும்புகிறது.  நடத்துநர்கள் அவரும் இவருமாக நகரு நகரு எனச் சொல்லி நிற்பவர்களை ஒரு பாடலைக்கூட ஒழுங்காக கேட்கமுடியாமல் செய்வதுதான் நடத்துநர்களின் பணி.

ஆனாலும் இளையராஜாவின் இசை இந்த நெருக்கடிகளைப் பழக்கி வைத்திருக்கிறது. ஒரு மயிலறகு விசிறிதான் என்றால் மிகையில்லை. சுரேஷ், மோகன், ராஜ்கிரண், ராமராஜன் சிவகுமார் படங்களுக்கு இசையமைத்த விதம்தான் அவரை மகத்தான கலைஞனாக மாற்றியிருக்கிறது. சிறிய பட்ஜெட்,பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் அவர் இசைக்கும் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கோர்ப்புக்கும் அளித்த அர்ப்பணிப்புதான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்திருக்கிறது. இளையராஜாவைத்தவிர எந்த இசையமைப்பாளரும் பொதுமையுடன் இசையை அமைக்க வில்லை. பொதுவாக அவர் பொள்ளாச்சி சுச்சுவேசனுக்குப் போட்டிருந்த பல கிராமிய ராகங்கள் உலகின் மகத்தான இடங்களில் பாடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பேருந்துகளில் தற்பொழுது பாடல்களுக்குப் பதிலாகப் படம் ஒளிபரப்ப பட்டாலும் பின்னணியிசையில் ராஜாங்கம் நடத்திவருகிறார். பின்னணியிசையில் ருத்ரதாண்டவம் ஆடியதில் சேது, அமைதிப்படை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முக்கியமானவை. மிகவும் அதிவேகத்துடன் பறக்கிற பேருந்துகளுக்கு வசதியாக சாலையின் இருபுறங்களிலும் வீசும் பச்சயம். மேடு பள்ளங்களிலும் பசேலென்ற தோப்புகள். பேருந்தின் சன்னலோரங்களில் காணும் போது பொள்ளாச்சி சாலையின் ஓரங்களில் இருக்கிற கிராமங்களின் அழகைக் கண்டு செல்வதில் ஒவ்வொரு பயணிக்கும் மகிழச்சிதான். பொதுவாக பொள்ளாச்சியில் நடக்கிற விசேசங்களுக்கு யாரும் செல்லத்தயங்கி நான் கேள்விபட்டதில்லை. தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படும் போது தான் தவிர்ப்பார்கள். கிராமியத்தின் ஆன்மாவாக இருக்கிற கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் கிரிக்கெட் விளையாடும் நவநாகரிக உடைகளில் இளைஞர்கள். சில இடங்களில் யுவதிகளையும் காணமுடிகிறது.

          பேருந்தில் செல்லப்போகிற ஆசையில்தான் மேற்கொண்டு நிகழ்வு பயணக் குறிப்புகளுடன் யாழி, இளவேனிலிடம் பேசினேன். வண்டியிலேயே போகலாம் அதுதான் சௌகரியம். என்றார்கள். நானும் முகவாட்டத்துடன் சரியென்று ஒப்புக் கொண்டேன். இளையராஜாவின் இசை கனவுகளிலிருந்து சன்னமாகி அமைதியாகிறது. மார்கழிப்பனியின் மூட்டம் மனதில் குடிகொள்கிறது. காலையில் அம்சப்ரியா அழைத்திருந்தார். பேருந்து நிலையம் வந்தபிறகு சொல்லுங்கள். என்றார். நானோ வண்டியில்தான் வருகிறோம் நாங்கள் அரங்கிற்கு வந்துவிடுகிறோம் என்றேன். ஆகா அம்சப்ரியா பேசிவிட்டார். அவர் குரலில் குளிர்ச்சி.

         வழக்கம் போலவே கூட்டத்தில் பேசப் போகிற பதட்டம் வரத்துவங்கியது. எப்பொழுதும் வரும். என்னதான் தைரியம் இருந்தாலும் மேடையில் அமர்வது,பிறகு மைக்கில் பேசுவதும் எப்படிப்பட்டவர்களுக்கும் கூச்சம் வருவதைப் பார்த்திருக்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கிற எத்தனையோ மனிதர்களின் உடலசைவுகளைக் கண்டிருக்கிறேன். உயர் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் கூட ஒரு பயந்த பாவனையுடன் காமிராக்கார ஆசாமிகளை நோக்குவார்கள். அவர்களையும அறியாமல் அச்சத்துடனும் வெட்கத்துடனும் கூச்ச சுபாவத்துடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். மகா நடிகனும் தன் உணர்வுகளுக்குள்ளாக கூச்சத்தையும் வெட்கத்தையும் மறைக்க மறைக்க முயல்வதுதான் நடிப்பில் முதன்மையானதாக இருப்பதை அறிவேன். எழுதிய சிறுகதைகளை ரீவைண்டிங் செய்து கொள்கிறேன். விமர்சனங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கேட்டால் எப்படி சமாளிப்பது என்றெல்லாம் ஒத்திகை செய்யாமலில்லை. இளவேனில் சாதாரணமா சொல்வார். நான் மிரண்டு கொண்டிருப்பதை கண்டிப்பார். “நீ தேவையில்லாம சுத்தி சுத்தி வௌக்கம் கொடுக்கற.. என்னக் கேட்டா ஒரு வார்த்தயில சொல்லுருவேன் அப்படித்தான்யா..எங்க நீங்க எழுதுங்க பார்க்கலாம்.னு சொல்லுயா ஏன் பயந்துக்கற “ என்பார். என்னால் அப்படிச்சொல்ல முடியவில்லையென்பது என் பலவீனம் என்பார். அதுவும் சரிதான். சரி எப்படியாவது சமாளிப்போம். இதற்குப் பெயர்தான் எழுதிச்சுமப்பது...

           இளவேனிலின் வண்டியில் புறப்பட்டோம். இருகூர் இரயில்வே கேட் போடாமல் இருப்பது ஆச்சர்யம். ஞாயிறு காலையின்  சோம்பேறித்தனம் காணாமல் போய் விட்டது. கதைகளில் வருகிற நந்தவனம், நொய்யல் ஆறு, சுடுகாடு, இருகூர் பிரிவு தொட்டபோது ஆச்சர்யமாக இருக்கிறது. போ கண்ணு உங்கூட நாங்க பேச வர்றோம் என்பது போல உணர்வு வருகிறது. இந்த நிலம் பற்றித்தான் அம்சப்ரியாவும் பேசுகிறார்.

     மேம்பாலம் ஏற வாய்ப்பில்லை. புறவழிச்சாலையில் பெட்ரோல் போட்டோம். வண்டி பாயத்தயாரனபோது யாழியிடமிருந்து தகவல். அவர் ஒத்தக்கால் மண்டபத்தில் காத்திருக்கிறேன் வாருங்கள் என்றார். வேகம் பிடித்தோம். மார்கழிப் பனியின் குளிர் இதமாக இருக்கிறது. மோதிச்செல்லும் காற்றில் கொஞ்சம் கெட்டித்தன்மை சுவாசிக்கிற பொழுது நுரையீரலுக்குச் சிரமம் தருகிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் பேசமுடியாது என்பதால் தவிர்த்திருந்தேன். மிக நீளமான எல்அண்டி பைபாஸ் இங்கிருந்து பார்த்தாலே மதுக்கரை தெரிகிறது. சவுரி முடியைப் போல ஆங்காங்கு சாலைகளில் செயற்கையாய் மின்னுகிற இண்டிகேட்டர்கள் மிளர நடுவில் கிழிக்கப்பட்டிருக்கிற வெண்கோடு இருபுறமும் செல்கிற லாரிகளை,கண்டெய்னர் லாரிகளை, சரக்கு வாகனங்களை பிரித்து ஒழுங்கு படுத்துகிறது. உங்களால் இந்தச் சாலையில்தான் முப்பத்தியிரண்டு மகாமாக டயர்கள் கொண்ட லாரிகளைப் பார்க்க முடியும். இதன் டிரைவர்கள் உண்மையிலேயே ஓமக்குச்சி நரசிம்மன் போலத்தான் இருப்பார்கள். லாரிகள் ஒரு ரயில் பூச்சி போல அத்தனை சமத்தாகப் போய்க் கொண்டுருக்கும்.

    இந்திய மாநிலங்களின் லாரிகளைக்காண்கிற அபுர்வமான பாக்கியம். உண்மையில் தேசிய ஒருமைப்பாட்டை வலுயுறுத்துவது பேணுவது லாரி டிரைவர்களும் லாரிகளும்தான். லாரி டிரைவர்களும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். அவர்கள் இந்தியப்பெண்கள் குறித்து மிக விபரமாக அறிவார்கள். நியாயமாகப் பார்த்தால் லாரி,கண்டெய்னர் டிரைவர்கள் தான் தேசிய அரசியலுக்குத் தோதானவர்கள். அவர்களால் இந்தியாவைச் சிறப்பாக வழிநடத்த முடியும். முடிந்தால் மூன்றாம் அணி அமைப்பதற்குப் பதிலாக லாரி டிரைவர்களை வைத்து தேசிய அரசியல் கட்சியை பிரகாஷ் காரட், முலாயம் சிங், நிதிஷ்குமார் ஆகியோர் முயற்சி செய்யலாம். இந்தக் கருத்து அவர்களின் காதுகளுக்கு உடனடியாக எட்டவேண்டும்.

          லாரிகளை இளவேனில் ஓவர் டேக் செய்கிறார். லாரிகளின் டயர்களுக்கு அருகில் மிக அருகில் எங்கள் வண்டி போகிறது. அந்த சத்தம் இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்ப்பு போல் கேட்கிறது. லாரிகளின் சத்தங்களை நான் துல்லியமாக கேட்டிருக்கிறேன். இதைப் பலகுரலிசையில் கொண்டு வருவேன். எங்கள் வீடு லாரி சத்தங்களால்தான் உறங்கப்பழகியிருக்கிறது. இந்த ஒலி நுறு பேஸ் கிடாரின் ஒலியை ஒத்திருக்கும். லாரியின் சக்கரங்களுக்கு அருகில் போவதும் திரும்புவதுமாக சுவராசியமாக இலக்கியம் பேசிக்கொண்டே செல்கிறோம். பயம் என்பதே அறியாத அசுரவேகம். அந்த நிலையிலும் லாரியின் ஸ்க்ரேகப்ட்சர் குதித்து ஏறியிறங்குவதைக் காண்கிறேன். டிரைவர்கள் நாங்கள் எங்கே உள்ளுக்குள் சென்றுவிடுவோமே எனப் பயம் கொள்கிறார்கள்.

எழுபது மைல் வேகம். பாவம் யாழி முன்னமே வந்து காத்திருக்கிறார். பேரூர் செட்டி பாளையம் பைக் ரேசில் பறக்கிறவன் கூட இந்த வேகத்தில் சென்றிருக்கமாட்டான். பற்த்தலினூடாக தம்பான் தோது குறித்து ஐயா ஞானி பேசிய பாராட்டுரைகள் மற்றும் சில விமர்சனங்கள் குறித்தும் பேசிக் கொண்டே செல்கிறோம். வழக்கமாக நாங்கள் பேசினால் நாலு ஊர் கேட்கும். லாரி டிரைவர்கள் மற்ற எதிர் கார்கார ஓட்டிகள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். இந்த லட்சணத்தில் விவாதம் வேறு. வண்டி பெண்ட் ஆகி ஆடி பிறகு நேராகிப் போகிறது. மற்ற கனரக வண்டிக்காரர்கள் மெதுவாகப் போனார்கள். ஒரு வேளை  வண்டி ஈச்சனாரி தாண்டிவிட்டதோ என்று இளவேனில் சந்தேகப்பட்டார். நான் இல்லையென்றேன். கற்பகம் யுனிர்வர்சிடி வருகிறது. அடையாளம் காட்டி பிறகு பொள்ளாச்சி சாலையில் கலந்தோம். அடிவயிறு கிள்ளியது. பசியாகிறது சாப்பிடவில்லை. முதலில் சாப்பிட வேண்டும் என்றார். என்னடா இது அவர் பேசவேண்டிய வசனம் இன்னும் வரவில்லையே என யோசித்தது சரிதான்.

சரி முதலில் கால்கடுக்க காத்திருக்கிற யாழியைச் சந்திப்போம். யாழியின் அலைபேசியில் பிடித்தோம். அவர் எந்தச் சூழ்நிலையிலும் அழைப்பைத் துண்டித்து விட்டு அவர்தான் அழைப்பார். எங்கள் அவசரம் புரியாமல் கட் செய்து பிறகு அழைத்தார். எங்கிருக்கீறீர்கள் என்றார் நாங்கள் கற்பகம் வந்தாயிற்று..பேசியபடியே வண்டி ஒத்தக்கால் மண்டபத்தைத் தாண்டினோம். யாழி ஒளிப்பதிவாளர் காமிராவுடன் பின்தொடர்வது போல எங்களைக் கிராஸ் செய்ய ஆச்சர்யமாக கவனிக்க அவரோ நீங்க ஒத்தக்கால் மண்டபம் தாண்டிட்டிங்க என்றார். அருகில் காத்திருந்து பார்த்திருக்கிறார். நாங்கள் நிற்காமல் போவதைப் பார்த்து அவரே பின்தொடர்ந்து வந்து அதிசயம் நிகழ்ந்த மாதிரியிருக்கிறது.

          திருச்சியிலிருந்து இரவு பணிரெண்டு மணிக்கு வந்த யாழி மறுபடியும் காலையில் பொள்ளாச்சி வருகிறார். சாப்பிட்டிர்களா..இல்லையென்றார். வண்டி சைவ உணவு விடுதியில் நிற்கிறது. எதிரில் ஜைன மதக் கோயில் ஒன்று. காக்க வைத்தது மட்டுமின்றி அவரைத் தவிர்த்தும் பயணிக்க நிணைத்த போது சிரிப்பாக இருந்தது. இட்லி சொன்னோம். நான் ஆம்லெட் சொன்னேன். நான் வெங்காயம் அதிகமாக என்பது வழக்கம். சொன்னேன். அது போலவே உப்பும் அதிமாகப் போட்டு வந்தது. சுவரில் வண்ணக்காகிதங்களில் பறவைகள், குத்துவிளக்கு, விநாயகர், மயில், உட்புறமாக அழகழகாக வெட்டி ஒட்டியிருப்பதை ரசிக்கிறேன். ஐயப்பசாமிகள் அங்கும் நிறைந்திருக்கிறார்கள். யாழி தன்னுடைய தோள்பையை பேருந்தில் யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் அதில் சில நூல்கள் சில உடைகள் எல்லாம் தவறியிருந்த செய்தியைச் சொன்னபோது அதிர்ச்சியானது. அது லேப்டாப் பேக் போன்று இருப்பதால் யாராவது எடுத்துச் சென்றிருக்கலாம் என்றார். சோகம் சூழ்கிறது. உணவு ருசிக்கவில்லை. வாசலில் வநது மறுபடியும் நாங்கள் சென்றிருக்க வேண்டிய நவீன வண்ணப்பேருந்துகள் பறக்கிறது. சில பாடல்கள் சிந்திப்போகிறது.

வெயில் சுள்ளென்று அடிப்பது உணர்கிறோம். மணி ஒன்பதரையைத் தாண்டியிருக்கிறது. இரு வண்டிகளும் அவசரசிகிச்சைப் பிரிவில் இருப்பவர்க்கு  உயிர்காக்கும் மருந்து கொண்டு செல்வது போல பறக்கிறது. யாழியும் வேகமாக ஓட்டுபவர். சரியாக பத்தே காலுக்கு நகர் மன்ற ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் வளாகத்தினுள் நுழைந்தோம். பொள்ளாச்சி இலக்கிய நண்பர்கள், நெடுநாளைய நண்பர்களின் மகிழ்ச்சியான வரவேற்பு. அந்தப்பிரமாண்டமான பள்ளியின் முகப்பை பல தமிழ்த் திரைப்படங்களில் கண்டிருக்கிறேன். கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மேடான பகுதி. சுற்றுச்சூழல் பேணப்படுகிற பள்ளியாகத் தன்னை அறிவிக்கிறது. அமைதியான சூழல். மழைக்காதலன், வைகறை, சோழநிலா, இரவீந்திரன், அம்சப்ரியா, பூபாலன் உள்ளிட்ட நண்பர்கள் நலம் விசாரிப்பு. பயணம். சிற்றுண்டி சாப்பிடலாமா என்றார்கள்.

     அரங்கு தயாரானது. செங்காந்தள் சிற்றிதழின் ஆசிரியரும் கவிஞருமான  பூர்ணாவும் யாழியும் நானும் மேடைக்கு அழைக்கப்பட்டோம்.

           அம்சப்ரியாவின் வரவேற்புரையுடன் துவங்கியது. பொள்ளாச்சி நசன் அறிமுகவுரை நிகழ்த்தினார். சோலை மாயவன் உள்பட நண்பர்கள் ஒருங்கிணைப்புடன் நிகழ்வு துவங்கியது. நிகழ்வில் புதியதாய் படித்ததில் பிடித்ததுஎன்கிற தலைப்பில் பங்கு கொண்டவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் வாசித்த புத்தகம் கேட்ட செய்திகள் தன்னை பாதித்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிற நிகழ்வு. இதில் பலர் தங்கள் அனுபவங்களைப் பேசினார்கள். பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். வழக்கறிஞர் ஒருவர் மிகச்சிறப்பாகப் பேசினார். வானொலியில் கேட்டதில் பிடித்த நிகழ்ச்சி பற்றிக் கூறினார். அந்த நிகழ்வு நிறுத்தப்பட்ட சோகத்தைப பகிர்ந்து கொண்டார்.

தன்னால் நிகழ்விற்கு வரமுடியாத கவிஞர் இசை தனது கட்டுரையை அனுப்பியிருக்கிறார். கட்டுரையை வாசித்தவர் அம்சப்ரியா. அந்தக் கட்டுரை சூடாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செய்திமடலில் வெளியாகியிருக்கிறது. தனது கவிதையாக்கம் குறித்த வாசக அனுபவத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அந்தக்கட்டுரை இருக்கிறது. தேவதச்சனுடனான உரையாடலின் பொழுது அவர் கூறியதாக ஒரு வாசகம் வருகிறது. நூறு கவிதைகள் எழுதிய ஒருவருக்கு அடுத்த கவிதை எழுதும் போது அந்த நுறு கவிதைகளின் அனுபவம் உதவப்போவதில்லை. என்பதுதான் அது. நெருடலான ஒன்று. கட்டுரை உணர்வின் அடிப்படையில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

    அடுத்த நிகழ்வாக கவிஞர் பூர்ணாவின் மூன்றாவது கவிதை நூலான முளை கட்டிய சொற்கள்“ குறித்த உரையை யாழி வழங்கினார். இந்த நூலுக்கு கவிஞர் சக்திஜோதி முன்னுரை வழங்கியருந்தார். கையடக்க ஐபேட் அளவிலான தொகுப்பு. அதே சமயம் அந்த விஞ்ஞானம் தருகிற பிரமிப்பு அந்தக்கவிதைகளில் மொழியாக்கத்தில் சிறப்பாக இருப்பதை ஞாபகப்படுத்துகிறார். இது அவருடைய மூன்றாவது தொகுப்பு. எளிமையான சொற்களின் சித்திரங்கள். காட்சிகளாகவும் இளம் கவிஞர் ஒருவரால் கவனிக்கப்படுகிற உலகமாகவும் கவிதைகள் இருப்பதைச் சுட்டினார். தனக்கு உவப்பான இரண்டு கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார் யாழி. அவர் அதிக காலத்தை எடுத்துக் கொள்வதில்லை. ரத்தினச்சுருக்கமாக குறிப்பிட்டார்.

        பிற்பாடு ஏற்புரையாற்றிய பூர்ணா தன் கவிதைகள் மூலமாக தான் அடையும் உணர்வுகளின் வெளிப்பாடாகவே என் மொழி இருக்கிறது என்றார். இது வரையிலும் இந்த நிகழ்வில் உள்ள நண்பர்களை சந்தித்ததே இல்லை. இருப்பினும் என் நூலுக்கு அறிமுகம் தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பேச வேண்டிய செய்திகளை எழுதுகிறேன் என்றார். தான் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிற செங்காந்தள் இதழ் குறித்து சில செய்திகள் பகிரந்து கொண்டார். இந்த இதழ் நடத்துவதே நமது செவ்விலக்கியங்களில் உள்ள மலர்கள் குறித்த பதிவுகளை முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்தப் பதிவுகள் சமகாலத்தின் இலக்கிய உலகிற்கேற்ப  கட்டுரைகள் எழுதப்படுகிறது என்றார்.

           அடுத்த நிகழ்வில் க.அம்சப்ரியா “தம்பான் தோதுசிறுகதை நூல் பற்றிய அறிமுகம்  செய்தார். எளிய மக்களின் கதைகளாக இந்தக்கதைகள் இருக்கிறது. பொதுவாக சிறுகதைகள் என்றால் ஐந்துபக்கம் நிரப்புதல் மட்டுமின்றி கடைசிநேரத்தில் பக்கங்கள் மிச்சமிருந்தால் ஒரு கதையை நுழைக்கிற பணி நடக்கிறது. பெரும்பாலும் கதைகளில் ஒரு ஆரம்பம், இடையில் சிறு திருப்பம்,முடிவில் சுபம் கொஞ்சம் சுவராசியம் என்பதாகவே இருக்கும். ஆனால் இந்தக் கதைகளில் வாசகர்கள் அது போன்ற எதிர்பார்ப்புடன் நுழைபவர்களுக்கு ஏமாற்றம் தரும். மிக இயல்பாக காட்சிகளும் உரையாடல்களும் வந்து போகிறது. ஒரு கதையில் போகிற போக்கில் ஒரு சிறுகதைக்கான காட்சியை ஒரு வரியில் சொல்லிக் கொண்டு போகிறார். பறந்து போகிற விமானத்தைக் கல் எடுத்து எறிந்து விட்டு “இந்தச் சனியனுக்குத்தான் எங்கள் காடு பறிக்கப்பட்டது..“ என்கிற ஒரு வரியே கதையாக மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுபோன்ற பல இடங்களில் பல கதைகளில் ஒரு வரி சாதாரணமாக கடந்து போகிறது. சிறுவர்களின் பால்ய கால விளையாட்டுகள், திருடுதல், அவர்கள் செய்கிற சேட்டைகள் எல்லாம் நமது பால்யகாலத்தை நினைவுட்டுகிறது. நாமும் அது போல நடந்திருக்கிற வாய்ப்புகள் இருக்கும். நாற்பது வயது கடந்தவர்களுக்கு இது நிச்சயமாக சாத்தியம். குறிப்பாக வண்டிகளில் போகும் சர்க்கரை.நிலக்கடலை மூட்டைகளை குத்தி ஓட்டையிட்டு அதிலிருந்து ஒழுகும் பொருட்களைக் களவு செய்வதும் பிறகு அவர் சாட்டையால் வீசுவதும் கண்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் பல காட்சிகள் வருகிறது.

           குறிப்பாக சினிமாத் தியேட்டர் களமாக இருக்கிற தனசீலி குணசீலி கதை முக்கியமானது. சினிமா திரையரங்குகள் இன்று இடிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியை அலசுகிறது. இப்பொழுதும் செயல்படாத தியேட்டர்களைக் காண்கிற பொழுது நம் கழிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. சாதி மத சமூக வித்யாசம் காணாமல் சமரசம் உலாவிய இடமாக தியேட்டர்கள் இருந்த காலம் அது. சினிமாவிற்கு செல்கிற பயணங்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக டிக்கட் எடுக்க நண்பர்களுடன் நாம் மேற்கொள்கிற யத்தனங்கள் அலாதியானவை. இந்தக் கதையை வாசிக்கிற பொழுது நமக்கு பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. சினிமாத் தியேட்டர்களை மையமாக வைத்து பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம் வெயில் போன்ற படங்கள் இருந்தாலும் இந்தக் கதை தருகிற அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது. இப்படியாக பல கதைகளும் பல உணர்வுகளை அனுபவத்தைத் தருகிறது. முழுமையான எல்லாக் கதைகளைப பற்றிக் கூறிவிடுவது சரியானதல்ல ஆகையால் நீங்கள் தொகுப்பை வாசிக்கும் பொழுது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். நானும் நூறு சிறுகதைகளுக்கும் மேல் எழுதியிருந்தாலும் இந்த நூல் சிறுகதைகளின் தன்மையிலிருந்து விலகி குறுநாவல் வடிவம் போலிருக்கிறது.

வாசிப்பனுபவத்திலிருந்தும் கதைகளுக்குள் நிலவும் ஏராளமான விபரங்களின் அடிப்படையில்  சில விளக்கங்களை அவர் ஏற்புரையின் போது கூறவேண்டும் என்று கேள்விகளை முன்வைத்தார். நிறைய சம்பவங்களைச் சேர்க்க வேண்டும் என்று கதைகளுக்குள் திணிக்கப்பட்டது போன்ற காட்சிகள் உள்ளது. கொங்கு மொழியை மிகவும் இயல்பாகவும லாவகமாகவும் பயண்படுத்தியிருக்கிறார்.

மேலும் இதில் இருபது நாவல்களுக்குரிய சம்பவங்கள் பொதிந்துள்ளது. இந்த நூல் வந்த பொழுது கனகராஜன் தினமும் வாசித்துவிட்டீர்களா என்று கேட்பார். நான் பேசியதை விடவும் அவர் பேசியிருந்தால் நன்றாக இருக்கும். அவர்தான் ஒவ்வொரு கதைகளை வாசித்துவிட்டு மிகவும் ஆர்வத்துடன் என்னை சீக்கரம் படியுங்கள் என்றார். அவரே வெளியிட்டிருக்கிறார். எப்படி பொருளாதாரம் மற்றும் விற்பனையை மனதில் வைத்து செய்தார் எனத்தெரியவில்லை. இன்னும் பரவலாக செல்ல வேண்டிய தொகுப்பு ஏன் பதிப்பகம் மூலமாக வெளியிடவில்லை. இந்த நூலில் உள்ள மீன் வாகு கதையில் உடலிலிருந்து வெளிவரும் வாசம் என்பது அது குறிப்பிட்ட சாதி மக்களின் உடல் வாசனையைக் குறிக்கிறதா என்பதை அவர் கூறவேண்டும் என்றார்.

         அம்சப்ரியாவின் உரை ஒரு படைப்பை நாகரீகமிக்க சொற்களால் பாராட்டப்பட்டதாகவே உணர்ந்தேன். கதைகளுக்குள் ஓடும் ஜீவ உணர்வுகளை அவர் குறிப்பிட்டுப் பேசியது படைப்பாளிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. என் சிறுகதைகள் குறித்துப் பொதுவில் பேசியவர்கள் சுரேஷ்மான்யா இப்பொழுது க.அம்சப்ரியா இரண்டு பேரும் சிற்றிதழ் ஆசிரியர்கள். சிற்றிதழ் மனோபாவம் உள்ள மனதிற்கு என் கதைகள் உளப்புர்வமாக மகிழ்வு தந்திருக்கிறது என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அடுத்து நான் ஏற்புரைக்கு முன்பாக கவிதைகள் வாசிப்பு நிகழ்வு. எனக்கு அவர் பேசியதற்கு பதில் சொல்லவும் பிறகு நான் பேசுவதே இறுதியாகவும் அமையப்போகிறது என்பதை யோசிக்கும் போது மறுபடியும் அச்சம் சூழ்கிறது. இரா. பூபாலன், தலைமையில் கவிதைகள் வாசிக்கப்பட்டது.

கவிதை வாசித்தல்- சோலை மாயவன், தனபாலன், செந்தில் பாலாஜி,இரா. பூபாலன், சோ. இரவீந்திரன், யாழி, மணிமேகலை, உள்பட மேலும் பலர் கவிதைகள் வாசித்தார்கள். இந்த நிகழ்வில் அருள்நிதி ஐயா வாசித்த கவிதை மரபுக் கவிதையைச் சார்கிறது. மற்ற கவிதைகள் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. சமகாலத்தில் பொதுவாக கவியரங்கங்களில் எப்படியும் நவீன கவிதைகள் இடம்பெற்றுவிடுகிறது. உணர்வெழுச்சி கவிதைகள் தன்னளவில் ஏற்படுத்தும் கிளர்ச்சியை அரங்கம் முற்றிலுமாக நிராகரிக்கத் துவங்கியிருக்கிறது. திமுக கவிஞர்கள் எல்லாருக்கும் வயது எழுபதுக்கும் மேல் ஆகிவிட்டதாலும் போதிய அளவு தலைமையை தலைவரைப் பாடிவிட்டதாலும் கவியரங்க கவிதைகள் தனது மின்னலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை உணர்வு தமிழ் உணர்வு சார்ந்த கவிதைகளில் இயல்பாகவே உணர்ச்சி அதிகமாகவே தலைப்படும். அது அவசியமும் கூட அந்த உணர்ச்சி மேலோங்க மேலோங்கத்தான் அவர்கள் நவீன காலத்தின் மொழிக்குத் திரும்புவார்கள் என்பதை இந்த கவிதை வாசிப்பு உணர்த்தியது. குறிப்பாக யாழி ,செந்தில் பாலாஜி, சோலை மாயவன், யாழி, இரா. பூபாலன், வாழைகுமார் கவிதைகளில் அவர்களின் அனுபவம் சிறப்பாக வெளிப்படுகிறது.  கேட்டவர்களின் ஆழ்மனம் நிச்சயம் கைதட்டி வரவேற்றுக் கொண்டிருக்கும்.

         ஏற்புரையில் தொடக்கத்தில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளுக்கு கோவையில் நடந்து வரும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகள் தான் முன்னோடி என்று அம்சப்ரியா தெரிவித்து இருந்தார். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னோடியாகவே பொள்ளாச்சி திகழ்கிறது. புன்னகை கவிஞர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் எந்த தயாரிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன். என் கதைகள் குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை ஆர்வத்துடன் கேட்க வந்திருக்கிறேன். புன்னகையின் வசீகரமிக்க கவிதைச்செயல்பாடு எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கி யிருக்கிறது. அதில் நானும் நண்பர்கள் பலரும் எழுதியிருக்கிறோம். அதன் பிறகு கறுக்கல், கருந்துளை, உள்பட பல சிற்றிதழ்களைத் தொடர்ந்து தருகிற களமாக பொள்ளாச்சி இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தன்னாலான பணிகளை தமிழ் இலக்கியத்திற்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி நசன் போன்றவர்களின் பணி மகத்தானது. அவருடைய சிற்றிதழ் சேகரிப்புப் பணி மற்றும் அவர் சிறந்த இலக்கியக் கலைக்களஞ்சியத் தொகுப்பு ஆய்வாளராகவும் உள்ளார்.

         பொள்ளாச்சிக்கு கோவையில் சினிமாவிற்கு டிக்கட் கிடைக்கவில்லை யென்றால் இங்கு வந்தால் கிடைக்கும் என்று வந்த காலம் உண்டு. இங்கும் கிடைக்காமல் நண்பர் வீட்டில் தங்கி இரவுக்காட்சி பார்த்துவிட்டு காலையில் ஊர் போனதுமுண்டு. அந்த சினிமா நாட்கள் நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் ரோஜா படம் பார்த்தேன். அந்தப்படம் ஓடத்துவங்கியதிலிருந்து பிரமிப்பு ஏற்பட்டது. ஏ.ஆர் ரகுமான் இசை, ஒளிப்பதிவு. காட்சிகள். ஆனால் மக்கள் அரங்கிலிருந்து வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள். மக்கள் ரசனைக்கு எதிராகவே இருக்கிறது. அந்த ரசனை நம் தேசிய ரசனையைக் கேள்வி கேட்ட காலம். முழுமையாக யாரும் படம் பார்த்தபாடில்லை.

திருட்டுக்கும் குறிப்பாக திருட்டுத்தொழிலைக் கொண்டிருக்கிற சமூகம் பற்றிய விபரங்கள் காவல் கோட்டம் நாவலில் பிறகு அரவான் படத்திலும் நாம் பார்க்கலாம். துப்புக்கூலி என்கிற வழக்கு நம் சமூகத்திலிருந்த ஒன்று. திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுக்குச் செலவான உழைப்பிற்கு கூலியைப் பெற்றுக்கொண்டு திரும்பத்தருதல் இருந்தது. இந்த சமூக வழக்கு எம்ஜிஆர் ஆட்சி வரை நீடித்த ஒன்று. பிறகு டிஜிபி ஜாங்கிட் போன்றவர்கள் அந்த மக்களிடம் உத்தரவு எழுதி வாங்கி அவர்களை  யதார்த்தமான வாழ்விற்கும் சமூகப்பணிக்குத் திருப்பிவிட்டது நிகழ்ந்தது. தங்கள் விவசாயம் பொய்த்த காலத்தில் குன்றுகளிலிருந்து கீழிறங்கிய மனதின் விவசாயத்தையும் திருட்டையும் கற்றுக்கொள்கிறான். எஸ்.ராமகிருஷ்ணன் தனக்கு இருந்த புத்தக ஆர்வம் காரணமாக துவக்கத்தில் சிறு நூலையாவது எடுத்துவருவது வழக்கமாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த கட்டுரை ஒன்று உள்ளது. சமூகத்தில் திருட்டுக்கு இன்றும் இருக்கிற சரிசமமான நடவடிக்கைகள் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. திருடப்படுகிற உணவுப்பொருட்களின் ருசி பற்றிய தகவல்கள் நம் இலக்கியங்களில் உள்ளது.

சற்று முன்பு உங்களிடம் அளிக்கப்பட்ட பொன் இளவேனில் கட்டுரையாக எழுதி நோட்டிசாக விநியோகிக்கப்பட்டது. தம்பான்தோதுசிறுகதை நூல் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரை அது. இதுநாள்வரையிலும் தமிழ் விமர்சன உலகம் கொண்டிருக்கும் ஒருசார்பான ரகசியமான ஒரவஞ்சனையைக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழின் மூத்த படைப்பாளர்கள் என்று சொல்லப்படுகிற பலர் தங்களின் அடுத்த தலைமுறை யினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இழைத்து வருகிற பிரச்சனைகளைப் பேசுகிறது. தங்கள் உருவாக்கிப் பத்தரமாகப் பேணிவரும் பீடங்களைப் பற்றியது. அறிவுதளத்தில் செயல்படுகிறவர்களுக்கு மத்தியிலும் நிலவும் அதிகார பீடம் பற்றிய நிலைகளைப் பேசுகிறது. இன்றளவும் நிகழ்ந்து வரும் இலக்கிய நேர்மைக்கு அளிக்கப்படுகிற தீங்கு குறித்து பேசுகிறது. நீங்கள் வெறும் அறிவிப்பு நோட்டிஸாகப் பார்க்காமல் அதில் உள்ள ஆதங்கத்திற்கு நமது தமிழ்ச்சூழலில் கிடைத்துக் கொண்டிருக்கிற மரியாதைகளையும் கவனிக்கலாம்.

என் கதைகளை பங்கேற்பாளர்கள் பலரும்  நீங்களும்  வாசித்திருக்க வாய்ப்பில்லை யென்பதால் இரண்டு கதைகள் வழியாக என் கதை உலகம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முதல் கதை

 மாமன் மச்சினன் இருவருக்கும் இருக்கும் பகையை மறந்து வாழ்கிறார்கள். கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் விபரீதம் அவர்களுக்குள்ளாக பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது. தங்கள் குலமும் சாதிக்காக தங்கை திருமணத்தில் கலந்து கொள்கிறார் மச்சினன். ஒரு வார ஏற்பாடுகளில் சிறப்பாக தன் பங்களிப்பை முடித்து விட்டு தன் ஊருக்குப் போகிறான். ஒரு வார திருமண சடங்குகள், விருந்து, பந்தி, பதில் மரியாதை, விருந்து, கறிவிருந்து இப்படியாக நடந்து முடிந்த களைப்போடு ஒய்விலிருக்கிறார்கள். தன் கணவனான  மாமனுடன் இரவு உரையாடலில் தன் அண்ணன் குறித்து மனைவி பேசுகிறாள். என் அண்ணன் ஒரு வாய் கூட திருமணத்தில் சாப்பிடவில்லை மட்டுமின்றி நம் வீட்டில்  ஒருவாராமாகச் சாப்பிடவில்லை என்கிறாள். அவன் அவளை உதைத்துத் தள்ளுகிறான் ஆவேசப்படுகிறான். தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்கிறான். எனக்கே இப்பொழுதுதான் தெரியவருகிறது என்கிறாள். காரணம் கேட்டபோது வீட்டிற்கு வந்தபோது தன்னை நீங்கள்  வரவேற்காமைதான் காரணம் என்கிறாள். அந்த நிலையை யோசிக்கிற போது பிடிபடவில்லை. நாம் எதாவது வேலையிலிருந்திருப்பொம். அவனுக்கு அது தவறென்று படுகிறது. உடனடியாக யோசனை தோன்ற காரியத்தில் சடுதியில் ஈடுபடுகிறான்.

இந்த ஒருவாரத்தில் செய்யப்பட்ட விருந்து வகைகளைத்திரும்பவும் செய்யச் சொல்கிறான். வகைவகையான விருந்துச் சாப்பாடு. பலகாரங்கள், பட்சணங்கள் தயாராகிறது.  மறுபடியும் அந்தக் கல்யாண வீட்டில் செய்யப்படுகிறது. தனது மச்சினன் குடும்பத்திற்கென்று  மட்டும் தனியாக.  அவன் ஊருக்க வண்டிகள் கட்டிக் கொண்டு புறப்படுகிறான். என்பதாக கதை முடிகிறது. இந்தக் கதை தற்போது பதினைந்து நிமிட திருமணங்களை விமர்சனம் செய்கிறது. இன்றைய நவீன உலகில் தனது தங்கை, சகோதரன் திருமணங்களுக்குக் கூட வராமல் நடக்கிற திருமண குடும்ப வைபவங்களைப் பார்க்கிறோம். அந்த முறையை நடுத்தர மக்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

             இந்தியக் குடும்ப முறைகளும் சொத்துப் பாதுகாப்பு முறைகளும் மேலைநாடுகளுக்கு ஆச்சர்யத்தை தருகிறது.  சில நாடுகள் பின்பற்றவும் முயற்சிக்கிறார்கள். சிலர் விநோதமாக குடும்ப அமைப்பே சுரண்டல் முறைதான் என்று அதிர்ச்சயளிக்கிறார்கள். இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை  விதித்தபோது நம் பொருளாதாரம் வீழ்ந்துவிடவில்லை. காரணம் சொத்துப்பாதுகாப்பு மற்றும் சேமிப்பு. நீண்ட கால சேமிப்பு முறைகளில நாம் கொண்டிருக்கிற அக்கறை. அமெரிக்கா,ஐரோப்பிய யுனியன்கள் தள்ளாடியிருக்கிறது. தற்போது கூட பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது நினைவிருக்கலாம். சம்பளம் தரக்கூடப் பணமில்லை. நாம் கூட தந்து உதவியிருக்கிறோம். இந்த அதிசயம் மீது ஏகாதிபத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தக்குடும்ப அமைப்பு முறையை சிதைக்க வேண்டும். சொத்து நகைகள் மீது கொண்டிருக்கிற ஆர்வத்தைக் குறைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. மொழிச்சிதைவை ஊக்கப்படுத்துகிறது.

            மற்றொரு சிறுகதையின் வடிவம்.

காலையில் ஒரு துக்கநிகழ்வுக்குப் போயிருந்தேன். கழகத்தொண்டர் அவர். அவர் தனது எழுபத்திஏழாவது வயதில் காலமாகிவிட்டார். அவர் குறித்த நினைவுகளை இனியோரு தொண்டர் பகிர்கிறார். அவருக்கு அவர் காலமானது இன்று காலையில்தான் தெரிகிறது. ஊரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை தன் நடைப்பயிற்சியின் போது காண்கிறார் அவர். சிறுவயதில் அண்ணாவின் கருத்துகளை நாடகங்களாக்கி நடித்தும் பாடியும் ஆடியும் நடித்து கட்சி வளர்க்கப்பாடுபட்டவர் அவர். அவரைப்போன்ற பலரை ஞாபகப் படுத்துகிறார். குறிப்பாக அங்காளம்மன் திருவிழா ஒரு வாரம் நடக்கும். நாங்கள்  மூன்றுமாதங்களுக்கு முன்பே நாங்கள் காட்சிகள் எழுதுதல். ஒப்பனை, உடையலங்காரம், நடிப்பு வசனப் பயிற்சி, அரங்க அமைப்பு சீன் செட்டிங்க் போன்றவற்றில் ஈடுபட்டு  செயல்படுவோம். சமூக முற்போக்குக் கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள் பொதிந்த வசனங்களைச் சேர்த்து நடிப்பதில் காலமான நண்பர் திறமைசாலி என்றார். இந்த நினைவலைகளைப் பகிர்ந்து கொணடிருந்த போது நடப்பு நகர செயலாளர் தன் பரிவாரங்களுடன் வருகிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் சொத்துகள் வண்டி வாகன வசதிகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த நண்பர் அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே எழுந்து விடைபெற்றுக் கொண்டு தனது நடைபயிற்சியைத் துவங்குகிறார். நண்பரின் உடலைக் காணாத ஏக்கத்தில் ஆங்காங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வணங்கிக் கொண்டே போகிறார் அவர். இந்தக் கதையில் முன்பு வந்த தொண்டர் தன் ஐந்து நிமிட உரையாடலில் ஒரு வாக்கியத்திலேயே திராவிட இயக்க வரலாற்றை அழகாகச் சொல்லி சென்றுவிட்டதை நாம கவனிக்க முடியும்.

          இதில் அதிகமான சம்பவங்களைத் திணிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அதன் காரணம் அம்சப்ரியா  கேட்டார். ஆற்றங்கரை மணலின் ஒரு குருணையைத்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் கோடாணுகோடி மக்களின் லட்சக்கணக்கான வாழ்வியல் கதைகள் அந்தக் கரைகளில் புதைந்து கிடக்கிறது. எழுத எழுத தீராத கதைகள். இதன் தொடர்ச்சியாகவே நான் தற்பொழுது மூன்று நாவல்களை எழுதிவருகிறேன். இந்தப் புதிய ஆண்டில் வெளியாகும். உங்கள் முன்பாக தெரிவிப்பதால் நிச்சயம் வெளியாகும். பதிப்பகங்களின் நெருக்கடிகள் என்னால் சமாளிக்க முடியாது. மறைமுகமாக அவர்களின் நிபந்தனைகளை எதிர்கொள்வதற்கு நாமே வெளியிட்டுக் கொள்ளலாம் என்பதால் வெளியிடுகிறேன். இங்கு வைகறை, மழைக்காதலன், பூர்ணா போன்ற நண்பர்கள் தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்து வந்திருந்து பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்கள். இப்படியான நண்பர்கள் இலக்கியத்திற்குள்ளாக பிரதிபலனின்றி உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பு போற்றப்பட வேண்டும். தங்கள் அதிகார பீடங்களிலிருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கிற மூத்த ஆளுமைகள் இப்படியான நிகழ்வுகள் குறித்தும் இளைய தலை முறை இலக்கிய முயற்சிகள் பற்றியெழுத வேண்டும்..

            தமிழ்நாட்டில் நல்ல விசயங்களுக்கு ஸ்பான்சர் கிடைக்காது. ஆன்மீகம், தியானம், மதவழிபாடுகள், கருத்தரங்க கூட்டங்கள், கோவில் கொடைகள் போன்றவற்றிற்குக் கொட்டப்பட்ட கோடாணு கோடி ரூபாய்கள் நல்ல விசயங்களுக்குத் தருவதில்லை. தெளிவு நிலை அறிவுசார் நிகழ்வுகளை எளிதில் மதயாணைகள் கண்டு பிடித்து விடுவார்கள். மாறாக அது போன்ற செய்திகள் நடப்பதையும் பரப்பாமலும் இருப்பார்கள். நன்மையான விசயங்களை நாம் போராடிப் போராடித்தான் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. சிலர் தவிர்ப்பார்கள். சிலர் குழப்புவார்கள். இப்படியெல்லாம் பேசலாமா என்பார்கள். எல்லாவற்றையும் தாண்டித்தான் சில நல்ல காரியங்களை நண்பர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் நீங்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். இது நிச்சயம் சாத்தியமாகிற ஒன்றுதான். காந்தியுகம் துவங்கும் முன்பே நம் முன்னோர்கள் நீதிக்கட்சி அமைச்சரவைகள் தமிழகத்தில் நடத்தி ஆட்சி செய்தவர்கள். வெள்ளயர்கள் ஆட்சிக்காலத்திலேயே அது சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் தமிழர்கள். இந்த அமைச்சரவையில் தமிழாய்ந்த முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள். முன்பு ஒதுக்கப்பட்ட ராச்ய சபா எம்பி பதவிகளைக் கூட கிரிக்கெட் காரர்களுக்குத் தாரை வார்த்துவிட்டார்கள்.

              நிகழ்வை ஒருங்கிணைத்து தம்பான் தோது நூலுக்கான அறிமுகமும் பூர்ணாவின் கவிதை நூலுக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றியைத் தெரிவித்து விடைபெற்றேன். பல ஆண்டுகளாக இலக்கியம், பதிப்பு, நூல் வெளியீடுகள், தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்கள், என்பதாக இயங்கி வருகிற நண்பர்களுக்கு  தோள் கொடுப்பதின் மூலம் மொழிக்கும் படைப்பிலக்கியத்திற்கும் உதவி செய்கிறோம்.

         நிகழ்வின் பேசியது எதிரொலியாக நண்பர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். மூத்த ஆளுமையும் இலக்கிய ஆவணக் காப்பாளருமான பொள்ளாச்சி நசன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நீங்க பேசப் பேச நான் பலப்பல நினைவுகளில் போய் மீண்டு வந்தேன் என்றார். அவர் செய்து வருகிற டிஜிட்டல் நூலாக்கப்பணிகளில் தமிழ் ஓலைச் சுவடிகளையும் அவர் பதிந்து வருகிறார். இதற்காக தனது சொந்த செலவில் பல கருவிகளை வாங்கி பயண்படுத்துவதை பகிர்ந்து கொண்டார். தம்பான் தோது நூலைத் தந்தால் உங்களுக்கு  பத்து நிமிடத்தில் டிஜிட்டல் புத்தகமாக்கித் தந்துவிடுவேன். நீங்கள் யாருக்கும் அனுப்பிக்கொள்ளலாம். என்றார். பிறகு ஒவ்வொரு நண்பர்களும் தங்கள் பாராட்டைத் தெரிவித்தார்கள். க.அம்சப்ரியாவிடம் “நான் ஏதாவது ஓவராகப் பேசி விட்டேனாஎன்றேன்.. இல்லை நீங்கள் சிறப்பாகவே பேசினீர்கள் என்றார். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சி நடத்தும் துக்கம் எனக்குத்தெரியும். சன்னலுக்கு அருகில் காவல் நிலையம் வேறு இருக்கிறது. நாம் வந்து விடுவோம் பிறகுதான் பிரச்சனை வரும். ஒரு தமிழ் உணர்வாளர் நீங்கள் பேசியதெல்லாம் சரிதான் ஆனால் அதிகமான ஆங்கில உச்சரிப்புகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். நல்லவேளையாக அவர் நூலின் அட்டையில் இந்திவாசகம் வேறு இருந்தது. அதற்கு எதாவது சொல்வாரோ என்கிற பயம் வந்தது. முன்னாள் தலைமை யாசிரியர் ஒருவர் ஏன் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்துவது தவிர்த்தீர்கள் என்றார். அம்சப்ரியா அஞ்சலி செலுத்துவது தவறில்லை. ஒரு நிமிடம என்கிறபோது தான் நமக்குப் பிரச்சனை. அவருடைய கருத்துக்களை நாம் ஒரு நிகழ்வு முழுவதுமாகப் பேசலாம் என்றார். பிற்பாடும் அவர் தன் கருத்தில் உறுதியாக நிற்க மண்டெலாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி முடிந்த பிறகு அந்த ஆசிரியர் தான் வேறொரு முக்கியமான பணிக்கு செல்லவேண்டுமென்று மேற் கொண்ட நிகழ்விலிருந்து வெளியேறினார். அவரைப் பொருத்தவரை நெல்சன் மண்டேலா ஒரு பாவபட்ட ஜீவன். அந்த தினங்களில் தமிழகத்திலும் இந்திய அளவிலும் தேவாலயங்களில் அஞ்சலி செலுத்தினார்களா தெரியவில்லை.

         சோழநிலா  மீண்டும் புதிய செம்பதிப்பாக “வேரில் விழுந்த துளிகள்தொகுப்பை மீண்டும் கொண்டுவரவிருப்பதாகச் சொன்னார். மேலும் சில புதிய இளம் கவிஞர்களின் கவிதைகளுடன் பதிப்பதாகப் பேசினார். தோழர் மணிமுத்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர் உழைக்கும் மக்கள் தமிழகம் எனும் கலாச்சார இதழை அளித்தார். அதில் அவர் இசைபிரியாவின் கொலையும் பெண்களின் போரட்டமும் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி சில முக்கியமான கட்டுரைகள் அதில் அடங்கியிருக்கிறது. எனக்கு இந்த தொகுப்பில் உள்ள மாநில தவம் கதை நினைவுக்கு வருகிறது.

சிறு கவிதை நூல்களுக்கு அச்சாரம் போட்டவர் தேவதேவன். தன் சொந்தப் பதிப்பில் அவர் பதித்த நூல்கள் தமிழ்க் கவிதைப் பதிப்புகளுக்கு நம்பிக்கை அளித்த காலம். அழகிய பெரியவன், குட்டி ரேவதி, சே.பிருந்தா.அ.வெண்ணிலா, சல்மா, தேவதேவன் தொகுப்புகள் கையடக்க அளவில் வெளிவந்து பெயர் பெற்ற காலத்தில் வந்த எளிய சிறிய நூல். நீண்ட வருடங்களுக்குப்பிறகு அவர் கைகளில் நான் பார்த்தேன். அது போலவே இன்று பேசப்பட்ட முளை கட்டிய சொற்கள் தொகுப்பும். நியு சென்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோழநிலா அவர் சகோதரர்கள் கோ. பாரதி மோகன் போன்ற நண்பர்கள் சகோதர சமேதமாக இலக்கியத்திற்கு உழைக்கிறார்கள். அரங்கில் இரா. பூபாலன் சகோதரர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். பொள்ளாச்சி எத்தனை உவமானங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. நண்பர்கள் சகோதரர்களை இலக்கியத்திற்குள் அனுமதிக்கிற பெற்றோர்கள் வணங்க கடமைப்பட்டவர்கள். விளையாட்டுகளில் இன்ன பிற துறைகளில் சகோதரர்கள் பணி ஆச்சர்யப்பட வைக்கும். என் எழுத்திற்குக் கடன் பட்டு உழைக்கிற சகோதரர்களையும் நன்றி பாராட்டுகிறேன்..

          மதிய விருந்து என்றுதான் சொல்ல வேண்டும். இலக்கியக் குடும்பமாக சாப்பிட்டோம். வெயில் சுள்ளென்று அடிக்கிறது. பிரத்யேகமான குளுருட்டப்பட்ட அரங்கில் சாப்பிடச்சொன்னார்கள். விருந்தோம்பல் முடிந்து நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டபோது மறக்காமல் அடுத்த நிகழ்வு பற்றிக் கேட்டோம். வைகறையும் யாழியும் புறப்பட்டார்கள். இளவேனில் வண்டி வேகமெடுக்கிறது. மறுபடியும் நிகழ்ச்சியின் சம்பவங்கள் காலையிலிருந்து ஒவ்வொரு காட்சிகளாக ரீவைண்ட் ஆகிறது. நான் என்னைத் தவிர்த்துப் போகிற வண்ணப் பேருந்துகளைக் கவனிக்கிறேன். கற்பகம் வந்து பைபாஸ் சாலையில் சரியான வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறபோது அலைபேசியிலிருந்து அழைப்பு. பதிவு செய்யப்படாத புதிய எண். மறுமுனையில் பொள்ளாச்சி நசன் அவர்கள் “ உங்க புத்தகத்த நான் டிஜிட்டல் புத்தகமாக்கிட்டேன் உங்களுக்கு இமெயில் அனுப்பியிருக்கிறேன்.. நீங்க எங்க யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கலாம்“ நான் நம்பிக்கையின் வழியைப் பிடித்து நிறுத்தி நம்பமுடியாமல் விக்கித்து நிற்கிறேன். இளவேனில் விபரம் கேட்டார். சொன்ன போது அவரும் நம்ப முடியவில்லை.“பரவாயில்லயே நமக்கும் நல்லது செய்யறதுக்கு மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க...“ என்றார். அது போலவே மழைக்காதலன் என்கிற நண்பர் சம்பத்குமார் இதெல்லாம் பெரிய அரங்குல பல நூறு பேர் மத்தியில பேசவேண்டியது. இங்க சாதாரணமா பேசிட்டிங்க நண்பா என்று தழுவினார். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற பொறுப்பு என் எதிர் வருகிற எழுத்தியக்கதிற்கு இருக்கிறது.

      இரயில்வே கேட் போட்டிருக்கிறது. கோவில் சுற்றுச்சுவர்களுக்கு அடிக்கிற காவிக்கலரும் கோபிக்கலரும் சிவப்புக்கலரையும் தண்டவாளப்பட்டைகளுக்கும் பாதுகாப்பு சிமெண்ட்தடுப்புகளுக்கும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலை விலிருந்த பார்த்தால் கோவில் பிரகாரம் போலத்தெரிகிறது கேட். புத்தாண்டு மற்றும் பொங்கல் கிருஸ்துமஸ் விழாக்களுக்காக அடிக்கிறார்களா அல்லது அடுத்த பிரதமர் யார் என்பதை தென்னக ரயில்வே முடிவு செய்துவிட்டதா என்றும் யோசித்தபடியே வண்டி பொன்னூரம்மன் கோவில் வழியாக ஊருக்குள் நுழைகிறது.