வியாழன், 12 டிசம்பர், 2013


கோவை புத்தக கண்காட்சி- சில அனுபவங்கள்..

இளஞ்சேரல்

 

         வியாழக்கிழமை அலுவலகம் போனேன். கிழமைகளின் வரிசையில் அலுவல்கள் அறிந்துகொள்வதில் வித்யாசம் இருக்கவே இருக்கிறது. அருகில் புத்தக கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. தினமும் போய்வருகிறேன். மூன்றாம் ஆண்டாக நடத்துகிறார்கள். அசாத்தியமான முயற்சி. பாபாசி போன்ற பெரிய நிறுவனங்களின் பதிப்பகங்கள் ஆதரவாக இல்லையென்றாலும் கூட தங்களால் முடிந்தளவு திரட்டி நடத்துகிறார்கள். பாபாசி சில வருடங்களுக்கு முன்பு நடத்திப்பார்த்துவிட்டு என்ன பிரச்சனையோ தெரியவில்லை. நடத்த முன்வரவில்லை. எனினும் ஆங்காங்கு தனியார் நிறுவனங்களின் புத்தக பதிப்பக அமைப்புகள் சாராதவர்கள் நடத்திக் கொண்டுதான வருகிறார்கள். நமக்கு ஒருங்கிணப்பு என்பதுதான் சிரமமாயிற்றே.. கடைசியாக வந்த தகவலின் படி அரங்கு அரசியல்களிலும் ஏடிஎம்கே டிஎம்கே கபடி இந்த தொழிலிலும் நடக்கிறது என்பதுதான். எப்படியோ நல்லது நடந்தால் சரி. புத்தக கண்காட்சி தோல்வியில் முடிந்து விட்டதாக அரங்க அமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால் வரவுக்கும் செலவுக்கும் அல்லது செலவுக்கே தேரவில்லையென்பதுதான். பொதுவாக தினமும் மாலையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்வார்கள் அது இல்லை. பொதுவாக புத்தக கண்காட்சிகளின நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிற ஆளுமைகள் முடிந்த வரை தங்கள் செலவில் வந்து கூட்டங்களில் பேசிவிட்டு செல்லவேண்டும்.

அரசாங்கம் கண்காட்சிகளுக்கு இடம்,மின்சாரம், தண்ணீர் வசதி, மாணவ மாணவிகள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். முடிந்தளவு கல்லூரிகளின் வாயிலில் கோடானுகோடி ஈட்டும் கல்லூரிகள் தங்கள் செலவில் விளம்பரம் வைக்க வேண்டும். உள்ளுர் சானலில் விளம்பரம் குறைந்த கட்டணத்தில் செய்யவேண்டும்.

               நேற்று முன்தினம் நண்பர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இரா.பூபாலன் என்னைச் சந்தித்தார். புத்தக கண்காட்சியின் வாயிலில் சந்தித்த தம்பான் தோது விமர்சனக் கூட்டத்தின் அழைப்பிதழ்களைத் தந்தார். பிறகு தொகுப்பு குறித்துப் பேசியவர் பிழைகள் நிறைய இருப்பதாகச் சொன்னார். அம்சப்ரியா நூல் குறித்துப் பேசுவது மகிழ்ச்சி என்றேன். நீங்கள் என்னிடம் தந்திருந்தால் சரிபார்த்துத்தந்திருப்பேன் என்றார் உரிமையுடன். திருத்த முடியாத பிழைகள் என்றேன்.

         அலுவலகத்தில் மிகவும் சோர்வாக இருந்தேன். எப்பொழுது நமக்கு முடியவில்லையோ அன்றுதான் பணி அதிகமாக இருக்கும். வானமும் சரியாக வெளுப்பாக இல்லை. வெளிச்சமும் மந்தம். மழைக்குரிய மேகமூட்டம் காரணமாகவும் இருக்கலாம். உடலில் அலர்ஜி அதிகமாகி தும்மிக் கொண்டும் சளியின் தொந்தரவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த உடல் களைப்பாகவே இருக்கிறது. இளவேனில் அதிகநேரம் பேசினார். தற்கால நாவல்கள் குறித்தும் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகிற புதிய நூல்கள் நாவல்கள் பற்றியும் பேசினோம்.

விஜியும் மறுபடியும் அதிகமாக அலைய ஆரம்பித்திருக்கிறீர்கள். எலும்புகள் தெரிகிறது. கொண்டு போகும் சாப்பாடு மீதி வருகிறது. இரவில் தூங்குவது குறைவாக இருக்கிறது கவனியுங்கள் என்றாள். ஒரு ஆள் வருமானம். சரிந்தால் அவர்கள் எப்படித்தாங்குவார்கள். தம்பான் தோது அளித்த நம்பிக்கை மேலும் சில சிறுகதைகளைப் பதிப்பிக்க ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. எப்படித்தேற்றினாலும் புத்தக மூட்டைகளிலிருந்து இருபது நூல்கள் தயாராகி வரலாம். எல்லாம் எடுத்துக் கோர்க்க வேண்டும். அதுவரையிலும் அலைச்சல் இப்படித்தான் இருக்கும் பொறுத்துக் கொள் என்றேன். பணம்..என்றாள். ஐந்தாறு விதவிதமான நகைக்கடன் அட்டைகளைக் காட்டினேன். நான் புத்திசாலி..வேறு வேறு வங்கிகளில்  பிரித்துப் பிரித்து பத்தாயிரம் பாஞ்சாயிரம் என்றுதான் வைப்பேன். சௌகரியமாக இருக்கும். மொத்தமாக வைத்தால் செலவாகிவிடும். பழைய புளி குழம்புக்கு நல்லது போல பழைய தங்கம் நல்ல விலைக்கு அடமானம் போகிறது.

பொன் இளவேனில் குறிப்பாகத் தான் எழுதவிருக்கிற நாவல் குறித்துப் பேசினார். உரையாடல் கடந்த நூறாண்டுகளின் நாவல்களின் தன்மை குறித்துப் பேசினோம். அலைபேசியில் பேசிய நாங்கள் அதிகமான ஒரு மணிநேரம் பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாவல்களில் இரண்டு முக்கிய நாவல்களாக அஞ்ஞாடியும் காவல் கோட்டமும் ஏற்படுத்திய பாதிப்புகளின் பின்னணியைப் பற்றிப் பேசினோம். இரண்டு நாவல்களில் வலியுறுத்தப்படும் விசயங்களின் தாக்கம் எழுதப்படுகிற நாவல்களில் இருக்கும் பட்சத்தில்தான் அந்த நாவல் அதிகம் பேசப்படுமே தவிர மற்ற நாவல்கள் வெறும் நாவல்கள் என்னும் வரிசையில்தான் அமையும் என்றேன். அவரும் அப்படியானால் அது போன்ற நாவல்களுக்கு எப்படி அடித்தளம் இடுவது என்றார்.

          குறிப்பாக இன்று பரபரப்பாகப் பேசப்படுகிற இரண்டு நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களில் கையாளும் உத்திகள் குறித்துப் பேசினோம். இரண்டு பேரும் தகவல்களை அடுக்குவதிலும் சேகரித்த வரலாற்றுப் படிமங்களை மட்டும் இணைத்து எழுதுகிறார்கள். அனுபவப்புர்வமான எழுத்து பதிவாவது இல்லை. கழிந்த பெரும் வரலாற்றின் பின்னணியிலும் அனுபவத்தின் அலைக்கழிப்புமாக இருந்தால் மட்டுமே நாவல் முக்கியமானதாகிறது என்றேன். அவரைத் திருப்திப்படுத்த முடியவில்லை. எழுதி எழுதி வருகிறபொழுதுதான் எழுத்தின் வலிமையும் சீரான வேகமும் வரும் என்றென். அதற்கு அவர் மறுபடியும் முதலிலிருந்து பேச ஆரம்பித்தார்.

            மதிய உணவு வெளியில் சாப்பிட்டேன். கசப்பாக இருக்கிறது. சம்பளக்கார ர்களின் மதிய உணவு என்றுமே சுவராசியமாக இருப்பதில்லை. அது வெறும் சக்கைதான். முன் சக்கை. இரண்டு புரோட்டாக்களும் சால்னாவும் வெள்ளரிப்பிஞ்சுகளும் வைத்தார்கள். வெங்காய விலை காரணமாக. இரண்டு நாட்களாக இரவில் இரண்டு பெக் மேன்சன் ஹவுஸ் பிராண்டி சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது நம்ப முடியவில்லை. கீழ் அடுக்கின் பணியக வளாக நண்பர் ஒருவர் தன் மன அழுத்தம் பணிச் சுமை காரணமாக இரவில் தினமும் குடிக்கிற பழக்கம் உள்ளவர். அதற்காகவே எப்பொழுதும் தன் சாப்பாட்டுப்பையிலேயே முழு பாட்டிலை வைத்துக் கொண்டு அவ்வப்ப்பொழுது வீட்டிற்குக்கிளம்பும் முன்பாக அருந்திக் கொள்வது வழக்கம். மருத்துவர்களிடம் போனால் காத்திருப்பது. பணம செலவாவது, அதனால் மேலும் மனஉளைச்சல். குடும்பத்தில் பிரச்சனை. இதற்குத்தான் இப்படியான தீர்வு. போட்டிகோவில் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தவரை நான் என்ன செய்கிறீர்கள் என்றேன். குடிக்கிறீர்களா என்றார். நானும் சில நாட்களாக அருமைத் தம்பிகளின் எதிர்பாராத பாராட்டுதல்களின் நனைந்து கொண்டிருந்த எனக்குக் குடித்தால் என்ன எனத் தோன்றியது. குடிப்பதற்கு இப்படியான அற்புதமான வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மேன்சன் ஹவுஸ் பிராண்டி மிகவும் பாப்புலர் பிராண்ட். அந்தப் பாட்டிலின் அழகும் அதன் அழகான மூடியும் என்னை என் உறுதியை கலைத்துப் போட்டது. முழு பாட்டில். சொட்டும் சத்தம் இந்துஸ்தானி இசைப்பது போலிருக்கிறது. அதன் தங்க வண்ணம் அட்டைகளை ஞாபகப்படுத்துகிறது அவர் களைத்திருந்தார். துவண்டு போயிருந்தார். தனக்கு மிகுந்த மனச் சோர்வும் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத பாவியாக இருப்பதாகச் சொன்னார். தன்னைச்சார்ந்தவர்கள் தனக்குத் தருகிற நெருக்கடிகளை இப்படித்தான் சமாளிப்பதாகச் சொன்னார். முதலில் அவர் குடிக்கவில்லை. ஆயத்தப்பணிகளில் இருந்தார்.

           தான் இரண்டு ரவுண்ட்கள் அடித்துக் கொண்டு பிறகு மூடிவைத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட உள்ளேன் என்ன சொல்கிறாய் என்றார். சரி என்றேன். சாப்பிட என்ன வைத்திருக்கிறீர்கள் என்ற போது பிரிட்டாணியா குட்டே இருக்கிறது. மழை தூறத் துவங்குகிறது. அவர் முகம் மலர்ச்சியாகிறது. கண்கள் உருண்டு திரள்கிறது. ஆர்வம் பொங்குகிறது. மற்ற மனிதர்கள் தென்பட்டவர்கள் என்ஜாய் என்கிறார்கள். எனக்கு ஒசியில் குடிக்கிறோமே எனும் பரிகசிப்பு எழுகிறது. அவரே உற்றினார். அதிகமாகவிடும் என்பதால் நான் வாங்கி ஊற்றிக்கொண்டேன். ஒரு உலர் திராட்சையை விழுங்கியது போன்று இருக்கிறது. கொஞ்சம் துவர்ப்பு. நாக்கில் ஊறுகிற தித்திப்பு பிஸ்கட்டுகளை மென்றேன். அவர் பேசினார். நான் உச் கொட்டினேன். நான் பேசினேன் அவர் உச் கொட்டினார். முதல் ரவுண்ட் மேன்சன் ஹவுஸ் தனது விசுவாசத்தைக் காட்டியது.

துவைக்கப்பட்டுக் கொடியில் காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கிற சீலைகளுக்கு இடையில் சிறுவனாக இருந்த பொழுது ஓடியோடி விளையாடியபோது எப்படியொரு நெகுநெகுப்பும் குளிர்ச்சியும் எற்பட்டதோ அப்படியான ஒரு குளிர்ச்சி. அந்த சுகத்தை அனுபவித்தேன். நான் என் மனைவியின் மீது குற்றங்களை அடுக்கினேன். அவர் மனைவிகள் மீது குற்றங்களை அடுக்கினார். நாம் ஏன் குடித்த பிறகு பெண்கள் குறித்துப் பேசி வருகிறோம். வேறு ஏதாவது பேசலாமே. என்றார் அவர் அதுவும் சரிதான். அவருக்கு முகம் மேலும் பிரகாசமானது. தடம் மாறிப் பயணிக்கிற் ஒரு பெண்ணை மட்டும் பேசிக்கொண்டு வேறு பிரச்சனைக்குப் போகலாம் என்றார் அவர். ஆமாம். குடித்தால் கொஞ்ச நேரமாவது பெண்களைப் பற்றிப் பேச வேண்டும். இல்லையென்றால் குடிப்பதற்கு அர்த்தமேயில்லை என்றார். ஆமாம் பெண்களைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். பெண்களுக்கு ஏன் நம் சிரமங்கள் புரிய மாட்டேன் என்கிறது என்றார் அவர். பிஸ்கட்டுகளை என்னிடம் தள்ளினார். எனக்கு பிஸ்கட் பிடிக்காது. காரம் இருந்தால் அவசியம் என்றேன். இப்படித்தான் ஒரு முறை சேலத்தில் நண்பர்களுடன் குடித்த போது பொரி கடலை மிக்சர் ஒரு பெரிய விரிப்பில் கொட்டி வைத்துக் கொண்டு விடிய விடிய குடித்த நாட்களை நாங்கள் நினைவு படுத்திக் கொண்டோம். பேச்சு பெண்களிடமிருந்து குடியை நோக்கிச் சென்றது. அவர் அடுத்த ரவுண்ட் ஊற்றிக் குடித்தார். அவருக்கு சில அழைப்புகள் வருகிறது.

  அதில் பேசியது அவர் மகன். ஐந்தாவது படிக்கிறான். சிலப்பதிகாரத்தை எழுதியது யார் ராமண்ணா என்றார் என்னிடம். அவர் என்னை ராமண்ணா என்று தான் அழைப்பார். புகழ்பெற்ற தமிழ்ப்பட இயக்குநர் பெயர் அது. எனக்கு திரைப்பட இயக்குநர் ஆசையிருப்பது அவருக்குத்தெரியும். என்னை அவர் இருபது வருடங்களாக அறிவார். அவருக்கு நான் திரைப்படமாக்க விருக்கும் கதைகளைச் சுமார் ஒரு நூறு சொல்லியிருப்பேன். அட போ ராமண்ணா சொல்லிட்டுத்தான் இருக்கற ஆனா செய்யமாட்டிறே என்பார். அவருக்கு “ங்க“ என்பது வராது. அது உச்சரிக்கிற பொழுது அழகாக இருக்கும். நான் இளங்கோவடிகள் என்றேன். பிறகு தன் மகனுக்குச் சொன்னார். பிறகு கேள்விகள் தொடர மறுமுனையில் என்னைக் கேட்டு பதில் சொல்கிறார். சில கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. அடுத்த ரவுண்ட் ஊற்றினேன். அவர் ஆச்சர்யப்பட்டார். மேன்சன் ஹவுசில் முக்கால் வாசி இருக்கிறது. ஒரு சிலம்பு போல் எனக்குக் காட்சியளிக்கிறது. பிஸ்கட் தீர்கிறது. அவர் என்ன நினைத்த மாதிரியே எடுத்து பேப்பர்கள் சுற்றி பத்திரப்படுத்தினார். பிற்பாடு தனது சாப்பாட்டுக் கூடைக்குள் வைத்துக் கொள்கிறார். பிராந்தி மறைக்கபட்டு பாதுகாப்பான இடத்திற்குப் போனது. எனக்கு இரண்டு ரவுண்ட் இறங்கியது. பிஸ்கட் தீர்ந்த காலியான பேப்பர்களுக்குள் இருந்த கோதுமைத்துவையலை தம்பானும் முருகனும் சாப்பிடுவது மாதிரி எடுத்து வாயில் கொட்டிக்கொண்டுப் புறப்படத்துவங்கினேன். அவர் எனக்குஅறிவுறுத்தினார். வெளியில இந்த பாட்டில் நானூற்றி ஐம்பது ருபாய். நான் மிலிட்ரி கேண்டிலில் வாங்கினேன். ஒரிஜினல் பார்த்தாயா எப்படியிருக்கிறது என்றார். வேண்டுமென்றால் சொல் நான் வாங்கித்தருகிறேன் வீட்டில் வைத்துக் கொள். தினமும் இரண்டு ரவுண்ட் அடி. டாக்டர் செலவு மிச்சம் என்றார்.

            அவர் புறப்பட்டார். எச்சில் ஊற அவர் போவதையே வேடிக்கை பார்த்தேன் இரவும் மழைத்தூற்றலும் நிற்கவில்லை. இளவேனில் அழைத்தார். புத்தக கண்காட்சிக்குப் போகலாமா என்றார். சரியென்றேன். மறுபடியும் கண்காட்சிக்குப் போவதில் இன்பம். சரிதான். நாமும் போகவில்லையென்றால் யார்தான் போவார்கள். அவர் குடிக்கப் போகலாமா என்று கேட்டிருக்கலாம். சில நிமிடங்களில் வந்தார். களைப்பாக இருந்தார். தன்னுடைய மதிப்புரை எழுமதிய நோட்டிஸ் தயாராகவில்லையென்று வருத்தம் கொண்டார். தம்பான் தோது நூலுக்கு அவர் எழுதிய அறிமுக உரையை பிரிண்ட் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால் குறித்த நேரத்தில் முடியவில்லை. வண்டி கண்காட்சி மைதானத்திற்குள் நுழைகிறது. மழை பெய்து நீராடிய அரங்க கூரையிலிருந்து நீர் இன்னும் சொட்டிக்கொண்டிருக்கிறது. சில அரங்குகளில் பெண்கள் நீரை ஒற்றியெடுத்து வெளியில் கொட்டுகிறார்கள். வானம் நல்ல விசயம் கண்டால் தன் ஆசீர்வாதங்ளை அளித்துவிடும். அது அப்படித்தான் எப்பொழுது அன்பு பொழியும். எப்பொழுது காயும் என்று தெரியாது. வானம் அன்பு மிக்க பலகை அதில் நாமும் சில விருப்பங்களை எழுதிக் கொள்ளலாம். நீண்ட நெடிய சாலையில் கண்காட்சி நடந்தமையாலோ என்ன வோ வெறிச்சோடியது. மக்கள் புத்திசாலிகள். இலவசங்களும் தருவதாக விளம்பரங்கள் செய்திருக்க வேண்டும்.

தனக்கு மிகவும் பசிப்பதாகச சொல்கிறார். அவர் என்னைச் சந்தித்ததும் பேசும் முதல் வசனம் நான் இன்னும் தேநீர் அருந்த வில்லை. மயக்கமாக இருக்கிறது என்பதுதான். பசி தாள முடியாது. எப்படி பசியை அறிவித்து விட முடிகிறது அவரால் என்று யோசிப்பேன். தன் பசியை வெளிப்படையாக அறிவிப்பது எனக்குப் புதுமையாகவே தோன்றும். நான் எப்பொழுதும் கொஞசம் பசியை மிச்சம் வைத்துக் கொள்வது இயல்பான பழக்கம். கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் உணவு,கொஞ்சம் காலியான வயிறு இது என் வழக்கம். சர்வ சத்தியமாக காலியான வயிறு எனக்கு வேண்டும். வயிற்றைப் பேணுவதுதான் ஒரு உயிரியின் சாசுவதமான செயல் என்பதை நான் திருமூலரிடமிருந்தும் ஆழ்வார்களிடமிருந்தும் சிவணடியார்களிடமிருந்து கற்றுக் கொண்டது. பசியைக் கையாளத்தெரிந்தவனே உலகைக் காக்கவும் உலகை வெல்லுபவனாகவும் ஆகிறான் என்கிறார் கிருத்து. பசியைக் கையாள்வது என்பதை விடவும் பல்லாண்டுகள் காலியாக இருந்து பழகிய வயிறு..

பசியைத்தீர்த்துக் கொள்வது என்பது முடிந்து போய்விடுகிற செயல் என்பதை எனக்கு நானே அறிவித்துக் கொண்டிருக்கிறேன். அது இரண்டு ரவுண்டில் முடிகிற பிராந்தியானாலும் சரிதான். பசி என்பது வேலையைப் போலத்தான். அது தீராத ஒன்று. தீர்த்துவிடமுடியாத ஒன்று. அடுத்த வேளை அதிகமாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம். என நம்மை ஆசுவாசம் கொள்ள வைப்பது. அரங்குகளுக்குள் நுழைந்தோம். குறைந்த அரங்குகள். ஆனால் அதிகமான புத்தகங்கள். ஆனந்த விகடன் ஸ்டாலில் ஜெயமோகனின் சங்க சித்திரங்கள் கேட்டார் இளவேனில். அவர்கள் இல்லையென்றார்கள். பிறகு அழுத்திக் கேட்டபோது நாங்கள் பதிக்கவே இல்லையென்று சத்தியம் செய்தார்கள். அந்த ஸ்டாலில் ஓரத்தில் விஜயா பதிப்பகத்தின் ஸ்டால் இருந்தது. பிறகு ஒவ்வொரு ஸ்டாலாகச் சென்றோம். அவர் தல்ஸ்தோய்,தாஸ்தாவெஸ்கி, துர்கனேவ்,செகாவ், சார்த்தார். மொழிபெயர்ப்புகளாகத் தேடினார். நான் நூல் அச்சு கட்டமைப்புகள் பைண்டிங்க் கிராபிக் தொழில் நுட்பம் பற்றிய ஆசையில் நூல்களின் அச்சாக்கத்தை வியந்து கவனிக்கிறேன்.

        குறிப்பாக கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடுகள் பிரமிப்பாக இருக்கிறது. நவீன இலக்கிய அரங்குகளான உயிர்மை,காலச்சுவடு, தமிழினி, எதிர், கிழக்கு, அடையாளம், தமிழோசை போன்ற அரங்குகளில் அதிகம் செலவிட்டோம். பள்ளிக் குழந்தைகளுக்கான நூல்கள்,சிடிகள், டிக்க்ஷனரிகள், கலைக்களஞ்சிய நூல்கள், இஸ்லாமிய அரங்குகள் என்று அரங்குகளில் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். பொது மக்களின் வரத்து குறைவாகவே இருக்கிறது. சில நூல்களை வாங்கினோம். சாகித்ய அகாடமி ஸ்டால்களில் தள்ளுபடியில் சில நூல்கள் வைத்திருந்தார்கள். அந்த விலைக்கு பஜ்ஜி கூட கிடைக்காது. உண்மையில பாராட்டப்படவேண்டும். அந்த நூல்கள் இந்திய இலக்கியச் சிற்பிகள் பற்றியது. எல்லாம் பத்து ருபாய்க்கு இருக்கிறது. மகிழ்ச்சி. நன்றாக ஆய்ந்தும் அனுபவித்தும் சுற்றினோம். நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் நூல்கள் வாங்க வேண்டும். பக்தி இலக்கிய வகைமைகள் வாங்க வேண்டும் எனப் பேசிக்கொள்கிறோம். நான் சமீபத்தில் வானதி வெளியிட்ட சிலப்பதிகாரம் சிலம்பொலி செல்லப்பன் மூலமும் உரையும் எழுதி வெளிவந்த நூலைத் தேடினேன். மகாபாரத் தின் எல்லா வெளியீடுகளையும் எஸ் ராமகிருஷ்ணன் சேகரித்து வருவது போல நாம் ஏன் சிலப்பதிகாரத்தின் வெளியீடுகளைச் சேமிக்க கூடாது என்று விநோதமாகத் தோன்றியது. மனப்பாடம் செய்யமுடியாத அருஞ்செய்யுள்களைக் கைகளால் எழுதிப் பிறகு பேசினாலும் தங்க மறுக்கிற ஆழம். இளவேனில் சொன்னது பெரிய பெரிய பாடலாக எழுதி மனப்பாடம் செய் என்றார். தங்கவேல் சரவணனால் எப்படி சரளமாகப் பேச முடிகிறது என்றார். அது போன்ற ஒரு செய்யுள் மனப்பாடத்திற்கு எடுத்திருக்கிறேன். மனசிற்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது. பிராந்தி குடித்துப் பேச்சைத் துவக்கி வைத்த அவர் போய் வீடு சேர்ந்திருப்பார். பெண்கள் பிரச்சனை தொடர்ந்து மனசுக்குள் அலைக்கழிக்க ஆரம்பித்தது. நண்பர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர் அடிக்கடி பேசும்போது “பவுன் என்ன விலை விக்குது பார்த்தியா ராமு என்பார்எரிச்சலாக இருக்கும். ஒரு சூழலில் யோவ் அது விற்கத்தான செய்யும் உன்னால போட முடிஞ்சதைப் போடு..எனக் கடிந்திருக்கிறேன். அவருடைய பொழுது போக்கே தினமும் கிராமின் விலையென்ன எனப் பார்ப்பதுதான். நல்லவேளை அவர் சிலப்பதிகாரம் வாசிக்க வில்லை.

        சிலப்பதிகாரத்தில் மாதவி எவ்வாறு தன்னை அணிசெய்து கொண்டாள் என்பதை இளங்கோ பாடுகிறார். (சிலம்பு-கடல்-82-108)

அலந்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி

நலத்தகு மெல்விரல் நல் அணி செறீஇப்

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து

 

குறங்கு செறிதிரள் குரத்தினிற் செறித்து

பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்

நிறம்கிளர் பூந்துலகில் நீர்மையின் உடீஇ

காமர் கண்டிகை தன்னொடு பின்னிய

 

தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து

மத்தக மணியோடு வயிரம் கட்டிய

சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை

பரியகம்ட வால்வளை பவழப் பல்வளை

 

     அரிமயிர் முன்கைக்கு அமைவுற மோதிரம்

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்

வாங்குவில் வயிரத்து மரகதத்தாள் செறி

காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து

 

சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை

அம்கழுத்து அகவையின் ஆரமொடு அணிந்து

கயிற்கடை ஒழுகிய காமர்தூமணி

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து ஆங்கு

 

இந்திர நீலத்து இடைஇடை திரண்ட

சந்திரபாணி தகைபெறு கடிப்பு இணை

அம்காது அகவையின் அழகுற அணிந்து

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு அணி

மெஓர் ஓதிக்கு மாண்புற அணிந்து....

இனி என்ன என்ன நகைகள் என்பதைப் பார்க்கலாம்.

 

அழகிய மென் விரல்களில்,நல்ல மோதிரங்கள்

காலில் பரியகம்,பாடகம்,சதங்கை,கிண்கிணி, சிலம்பு

தொடையில் குறங்குசெறி என்னும் அணி.

இடையில் முப்பத்திரண்டு முத்துக்களைக் கொண்டு செய்த விரிசிகை என்னும் அணியிணைத் தனது ஆடையின் மீது மேகலையாக உடுத்துவது

தோளில், அழகிய கண்டிகை என்னும் அணியோடு சேர்த்துக் கட்டிய முத்து வளைகளைச் சாற்றுவது

கை முகப்பில் மாணிக்கமும் வயிரமும் வைத்து  இழைத்த அழகிய வேலைப்பாடமைந்த கைக்கடகமும்,செம்பொன்னால் செய்த கைவளையும் கைச்சரியும் சங்கு வளையல்களும் பல்வகைப் பவழத்தாலான வளைகளும்

விரல் வாளை மீனின் திறந்த வாய்போல் அமைத்த முடக்கு மோதிரம் ஒளி உமிழும் செந்நிறக் கதிர்  வீசும் மாணிக்க மோதிரம் தாள்செறி என்னும் வளைந்த மரகதம் பதித்த மோதிரம்

கழுத்து, வீரச்சங்கிலி, நுண்ணிய சங்கிலி, சரடு,சரப்பளி,

காது, இந்திரநீலக்கல்லோடு இடை இடையே பெரிய வயிரம் சேர்த்துக் கட்டிய குதம்பை என்னும் அணியை அழகிய காதிலே அணிந்து

தலைஅணி-வலம்புரிச்சங்கு,தொய்யகம்,புல்லகம்

         

இப்படியாக எத்தனை விதமாக நகைகள்..எங்கு போயிற்று என்று மக்கள் அரசுகள் அமைந்த பிறகாவது தேடிப்பார்த்தார்களா தெரியவில்லை..

 

    நான் இந்த நகைப்பட்டியலை அவரிடம் காட்ட வேண்டும். ஒரு சாதாரண குறுநிலத்தின் மக்களிடம் இருந்த பொன் நகைகள் வைடுரியங்கள் எல்லாம் எங்குதான் போய் ஒளிந்து கொண்டிருக்கிறது. மனப்பாடக் காகிதம் பத்திரமாக்கிக் கொண்டு பிறகு மீண்ட அரங்குகளில் சுற்றிவிட்டு வெளியே வந்தோம். எனக்குப் பசிக்கிறது. உணவு அரங்குகளில் பாணிபூரி பேல் பூரி போண்டா பஜ்ஜி சாப்பிடலாம். ஒரு புறத்தில் அரங்கு நிர்வாகம் பற்றிய பயிற்சி நடக்கிறது. முழுக்க மாணவர்கள். எந்த இடத்திலும் மாணவர்கள்தான் ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆச்சர்யமாக மகிழச்சியாக இருக்கிறது. நல்ல முயற்சி. பேல்பூரி வாங்கி சாப்பிட்டோம். அவர் கலக்கித் தந்த விதமே வாந்தி வருவது போலானது. தொழிலுக்குப் புதிது போல. திங்கிற ஆசையே போனது. ஒழுங்கு செய்யப்படாத உணவு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு சாப்பிடத்துவங்கியது. உப்பு அள்ளிக் கொட்டப்பட்டிருக்கிறது. இளவேனில் சுவராசியமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதய வீசிட்டு வேற வாங்கிக்க என்றார். சாப்பிட்டேன். முடியவில்லை. பாதியில் எழுந்து கொண்டேன். பிற்பாடு ஆமாம் உப்பு என்றார் அவர் பிறகு. வண்டியை எடுக்கப் போகும் போது கடைக்காரரிடம் சென்றேன். உப்பு ஓவரா இருக்கு..சரி பண்ணுங்க..கண்காட்சிக்கு வர்றவங்க முதல்ல சாப்பிட்டாங்கன்னா உள்ள போகாம ஓடிருவாங்க..இதுல எதவாது திட்டம் வெச்சிருக்கீங்களா என்றேன்.. அவர் பதறிப்போய்..பாத்துக்கறங்க..என்றார். பொதுவாக தேநீர் சிறப்பாகப் போடுகிறேன் என்கிற நிலையில் சக்கரையை அள்ளிக்கொட்டுதல், உணவு சிறப்பாகச் செய்கிறேன் என்கிற நிலையில் உப்பை அள்ளிக் கொட்டுதல் நடக்கிறதுதான். ஆயிரந்தான சொன்னாலும் சக்கரை கம்மி என்றாலும் அப்படியே போட்டுத்தருதல் நடக்கத்தான் செய்கிறது. வண்டிகளை எடுத்துக் கொண்டு கிழக்கு நோக்கி ஊருக்குப் புறப்பட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக