திங்கள், 24 பிப்ரவரி, 2014

கோவை இலக்கியச் சந்திப்பு- 39 ஆம் நிகழ்வின் பதிவுகள்கோவை இலக்கியச் சந்திப்பு-39- ஆம் நிகழ்வின் பதிவுகள்.
ஞாயிறு காலை-10.30 மணி முதல் மதியம்-2.30 மணி வரை
சே.ப.நரசிம்மலுநாயுடு உயர்நிலைப் பள்ளி..  கோவை-23.2.2014


இலக்கியச் சந்திப்புக்குத் தேவையான தளவாடச் சேகரிப்பு என்பதே மகா யக்ஞ கும்பாபிசேகத்து மராமத்துதான். எப்படிம் ஒன்று மறந்து விடும். காமிரா ஓரிடத்தில் வாங்க வேண்டும். பேனர் ஓரிடத்தில்வாங்க வேண்டும். சாவிக் கொத்து, துடைப்பம், தண்ணீர் அண்டா, மறக்காமல் துண்டுச் சீட்டுகளில் எழுத வேண்டும். பிறகு அதைத் தேடுவதும் நடக்கும்.
நகரமெங்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது சில ரத்தத்தின் ரத்தங்கள் இன்றே கொண்டாடத் துவங்கிருந்தார்கள். தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட சாந்தன் ,பேரறிவாளன். முருகன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்வதற்கு அம்மா முயற்சியெடுத் தமைக்கு பொது அமைப்புகள்கூட இந்தப் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தவண்ணமிருக்கிறார்கள். ஒரு வேளை அம்மா பிறந்த நாளுக்கு அவர்கள் விடுதலையாகிற வாய்ப்பைத்தான் சோனியாவும் ராகுலும் தடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது ஒருவேளை பிறந்த நாள் வராமல் இருந்திருந்தால் அவர்கள் அனுமதி தந்திருக்கலாம்.
      
கோவை எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். ஆனால் பாதாள சாக்கடைகளுக்குத் தோண்டித் தோண்டி சாலைகளில் கிராமிய மணத்தைத் தந்திருக்கிறது மாநகராட்சி. பழங்காலத்தில் கழுதைகள், பன்றிகள். நாய்கள், ஆடுகள் மாடுகள் மேய்த்துக் கொண்டு போவது போலத்தான் இருசக்கர வாகனங்களை இழுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. இந்த மேம்பாலங்கள் முடியும் போது பாதி சனம்  மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அப்பால் ஓடிவிடுவார்கள் என்று நினைக்கிறோம்.
இளவேனிலும் நானும் ஒரே வண்டியில் அரங்கம் வந்தபோது சோ.இரவீந்திரனும் வந்துசேர்ந்தார். ஒலிபெருக்கியைச் சரிசெய்யும் போது மின் அதிர்வால் இளவேனில் அதிர்ச்சியடைந்தார். பிறகு ஒலிபெருக்கி சில நிமிடத்தில் வேலை செய்யவில்லை. மைதானத்தில் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மைக் வேலை செய்ய வில்லையென்றதும் சத்தம் போடாமல் விளையாடியபடியே சன்னல்களின் வழியாக நிகழ்வுகளைக் கவனித்துக் கேட்கிறார்கள்.


முனைவர் ஜே. மஞ்சுளாதேவி தொகுத்த வானம்பாடிகளின் கவிதைகள்“ சுமார் நானூறு பக்கங்களுக்கும் மேலான நூல் காவ்யா வெளியீடு. இந்தப் பெட்டகத்தில் பொதிந்த கவிதைகள் குறித்த அனுமானங்கள். மதிப்பீடுகள். ரசனைகள், பாதிப்பு, காலக் கிரமம், கவிஞர்களிடையே நட்பும், சமூகத்தின் அகம்- புறம் பற்றிய அழகான வெளிப்பாட்டு முறையில் கவிஞரும் சிறந்த வாசிப்பாளருமான அகிலா அவர்களின் உரையும் ஆய்வும் அமைந்த ஒன்று.

கவிஞரும் கோவை பதிவர் குழுமத்தின் செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறவர். அவர் இன்றைய அரங்கிற்கு வந்திருந்த வானம்பாடி கவிஞர்களின் அத்தனை கவிதைகளின் சாரத்தையும் எடுத்துரைக்க கவிஞர்களுக்கு மகிழ்ச்சி. தங்கள் கவிதைகளை நான்காம் தலைமுறையினரின் வாசிப்பு ரசனையின் வழியாக எப்படி உணர்ந்து கொள்ளப்படுகிறது என்பதை நேரிலும் கண்கூடாக அறிகிறார்கள். கவிஞர் அகிலா எடுத்துரைத்த சொற்கள் அனைத்தும் வானம்பாடிகளின் அழகியல், கோப, உக்கிரமான, எள்ளல் கூறுகளை மென்மையாக அமைந்து வருவதை மூத்த வானம்பாடி அக்னிபுத்தின் வெகு ஆர்வமாக கவனித்தார். இளமுருகு, மு.மேத்தா, கவிதைகளை மேற்கோள் காட்டினார்கள். ஆங்கிலம் கலந்த கவிதைகளில் உள்ள எள்ளல்களைக் குறிப்பிட்டார். குறிப்பாக வியட்நாம் பற்றிய கவிதை இப்பொழுதும் நமக்கு பிரமிப்பாக உள்ளது.
       
விவாதங்களில் வானம்பாடி கவிஞர்கள், நித்திலன், அறிவன், சி.ஆர். இரவீந்திரன் பங்கு கொண்டார்கள். விவாதங்களில் பங்கு கொண்டு பேசி அக்னிபுத்திரன் வானம்பாடிகளின் காலத்தை நினைவு கூர்ந்தார். நாற்பதாண்டுகளுக்குப் பிறகு தாங்கள் வாழும் காலத்திலேயே தங்கள் கவிதைகள் பற்றிப் பேசுகிற நிகழ்வுகளை மிகுந்த வாஞ்சையுடன் நினைவுப் படுத்திப் பேசிய சி.ஆர். இரவீந்திரன் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். வானம்பாடிகளின் முதல் படியை கவிஞர் புவியரசும் சிற்பியும் ஆசையுடன் பறவையைத் தடவுவதுபோல தடவிப்பார்த்து மகிழ்ந்தார்களாம்.
           
முதல் பத்து இதழ்கள் கவிஞர் அக்னிபுத்திரனும் அடுத்த பனிரெண்டு இதழ்கள் சிற்பி அவர்களின் பொறுப்பிலும் வந்த காலத்தை நினைவுப் படுத்தினார் சி.ஆர். மூன்று நிலைகள், ஒன்று கு.வெ.கி ஆசான்  போன்ற ஆளுமைகள், ஒன்று முல்லை ஆதவன், புலவர் ஆதி, சிற்பி, புவியரசு போன்ற ஆளுமைகள் என்பதாக இயங்கினாலும் அனைவரும் புதிய உலகைச் சமைப்பதற்குப் பாடுபட்டார்கள் என்றார். நெருக்கடி நிலை காலத்தின் பொழுது நிலவிய நாடெங்கிலும் எழுத்தாளர்கள்,கலைஞர்கள், இதழாளர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளுக்கு எதிராக இயங்கியும் எழுதினார்கள். மு.மேத்தா, கங்கை கொண்டான் போன்ற முக்கியமான ஆளுமைகளின் வளர்ச்சி, தேக்கம். மிக இளைய வயதில் தன்னை இழந்த கங்கை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சமீபத்தில் கலாப்ரியாகூட கங்கை கொண்டானை நினைவுப்படுத்தியதைக் குறிப்பிட்டார்கள்.
      
 விவாத்த்தில் பங்கு கொண்டு பட்டையைக் கிளப்பிய மூத்த வானம்பாடி அக்னிபுத்திரன் தனது கவிதைளை பல பதிவு செய்ய வில்லை யென்பதை குற்றச்சாட்டாக வைக்க ஜே.மஞ்சுளா தேவி தங்களின் பதிமூன்று கவிதைகளைப்பிரசுரம் செய்திருப்பதாகச் சொல்ல அதற்கு அவர் செம்மலரில் பரிசு பெற்ற கவிதையை நீங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருக்கி றீர்கள். அதுமட்டுமல்ல நீங்கள் அனைவருமே எனக்கு எதிராக செயல்படுகிறீர்கள் ஏன் அக்னிபுத்திரனே இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருப் பதாக அறிகிறேன் என்றதும் ஒரு கணம் அரங்கு சட்டமன்றமாக மாறி பலத்த ஆரவாரமும் உற்சாகத்தில் கைதட்டலும் பறந்தது.
       
ஏற்புரையில் மஞ்சுளாதேவி தன் ஆசான்கள் என கோவை ஞானியையும் சி.ஆர்.இரவீந்திரன், சிற்பி அவர்களைக் குறிப்பிட்டார்கள். தன் ஆய்வுக்குப் போனபோது வானம்பாடிகள் அளித்த ஆதரவையும் வரவேற்பும் விருந்தோம்பலும் ஒத்துழைப்பும் மறக்க முடியாது என்றார். சி.ஆர் தான் தனக்கு வானம்பாடிகளின் 22 இதழ்களையும் தந்துதவினார்கள். இந்த நூலை உருவாக்கப் பெரிதும் உதவியவர்கள் ஞானிதான். அவருடைய பெயர்தான் வந்திருக்கவேண்டும் ஆனால் ஞானி நீதானம்மா உழைத்துச் சேகரித்து உள்ளாய். உன்பெயர்தான் வரவேண்டும் என்று கட்டயமாக்க நான் என்பெயரைச் சேர்த்திருக்கிறேன் என்றார். வாய்ப்பிருந்தால் மேலும் ஒரு தொகை நூல் வானம்பாடிகள் குறித்துக் கொண்டு வருவேன் என்றும் உறுதி யளித்தார். நமது இலக்கியச் சந்திப்பு நண்பர்களுக்கு எப்படித்தான் புதிய நூல்களைக் கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை. நாம் அறியாத புதிய நூல்களைக் கண்டுபிடித்து அவர்களை நமது கோவைக்கு அழைத்து அறிமுகம் செய்கிற பணியை பாராட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த நூல்களுக்கு விருதுகளும் கிடைத்து விடுவது கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு தவறாமல் குறுஞ்செய்திகள் வரும். நான் உடுமலைப் பேட்டையிலிருந்து வரவேண்டியிருப்பதால் கொஞ்சம் சிரம மாக இருக்கும் இருந்தாலும் நான் வருவதற்கு முயற்சிகள் எடுப்பேன்.

நமது மதிப்பிற்குரிய சிற்பி  அவர்கள் சாகித்ய அகாடமியின் பொறுப்பு ஏற்ற பிறகு நிகழ்ந்த இலக்கிய வளர்ச்சி மேம்பட்டதை தெளிவுற நினைவு கூர்ந்த மஞ்சுளாதேவி தமிழ்ப்படைப்புச் சூழலுக்கு சிற்பி ஆற்றிய மகத்தான பணியைப் பாராட்டினார். அவர் குறித்து நான் எழுதிய விமர்சனங்களைக் கூட வாசித்து விட்டு சரி சரி என்று தலையாட்டி விட்டு மேற்கொண்டு படித்துப்பார்த்து விட்டு ஊக்கப் படுத்தினார் என்றார். இன்று நடைபெறும் சாகித்ய அகாடமியின் மாற்றங்கள் எல்லாம் சிற்பியின் முயற்சிகள்தான். அதற்கு முன்பு ஒரு சடங்குகளாக நடைபெற்று வந்த அமைப்பு நிரல்களை அவர்தான் ஒழுங்கு செய்து பல படைப்புகள் உள்ளே வருவதற்கும் முயற்சிகள் செய்தார். தமிழ்ப்படைப்புகள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயப்புகளாகிச் செல்லும் போதுதான் உரிய மரியாதை கிடைக்கும். அது அவசியம் என்று மற்ற மொழிப் படைப்பாளர்களுக்கு தெரிந்து இருக்கிறது நாம் தான் அறியாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.
            
 என்னைப்பொருத்தவரை வானம்பாடிக் கவிஞர்களுக்குள் கருத்து முரண்பாடுகள், விவாதங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் நட்பு பாராட்டுபவர்கள். அற்புதமான மனிதர்கள். அவர்களுடைய ஆக்கங்கள், அவர்களின் உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்பதால் என் முனைவர் பட்ட ஆய்விற்கும் வானம்பாடிகளைத் தேர்ந்தெடுத்தேன். இப்பொழுது கவிதைகளைத் தொகுத்து இருக்கிறேன். என்றார்.

இன்றைய சூழலில் கவிதையியக்கத்தைப் பற்றிப் பேசும் போதும் எழுதும் போதும் ஒன்று வானம்பாடி இயக்கத்தை எதிர்த்து எழுத வேண்டும் அல்லது ஆதரித்து எழுதவேண்டும் எப்படியானாலும் வானம்பாடிகளைத் தவிர்த்து கவிதையை அணுக முடியாத அளவு எண்ணற்ற சாதனைகளை அந்த அற்புதமான மனிதர்கள் செய்திருக்கிறார்கள்.
         
 வானம்பாடி கவிதைகளைத் தொகுத்து ஆவணமாக்கிய முனைவர் வே.மஞ்சுளாதேவி அவர்களுக்கு கவிஞர் நறுமுகை தேவி சிறப்பு செய்தார்.

கவிஞர்,பத்திரிக்கையாளர், சிறுகதையாசிரியர். ஆங்கரை பைரவியின் கவிதை நூலான “விரல் தொட்ட வானம்“ பற்றி கவிஞர் வைகறை தனது கட்டுரையை வாசித்தார். மிக நேர்த்தியான கட்டமைப்பு, எளிமை, சமகாலத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள். நெடிய வாழ்வின் அனுபவம் கொண்ட கவிதைகள் எளிமை கொண்டதாகவே இருக்கும் என்பதற்கு உதாரணம் ஆங்கரை பைரவியின் கவிதைகள். வைகறையின் கட்டுரை முழுமையான கவிதைகளையும் எடுத்துச் சொல்லாமல் நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்வதற்கு ஏதுவாக சில மௌனங்களையும் இடைவெளியையும் விட்டுச் சென்றார். இது கவிதைகள் பரவல் காலம். திருச்சி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகபட்டினம், பெரம்பலூர், என்று முந்தைய ஒன்றிணைந்த தஞ்சை மண்ணின் நிலங்களும் மக்களும் வேளாண்மையும் நீர்வளமும் சடங்குகளும் இவரது கவிதைகளில் காண முடிந்த ஒன்று. தமிழும் தமிழ்க்கவிதையின் நிலங்கள் ஆங்கரை பைரவி போன்ற நண்பர்களின், கவிஞர்களின் வழியாக சமகாலத்திலும் புழங்கி வருவதும் மரபு தொடர்ச்சி நீள்வதும் நம்பிக்கையளிப்பதே...

ஏற்புரையாற்றிய ஆங்கரை பைரவி தன் எழுத்துக்குத் துணையாக இருக்கிற ஆளுமைகளை நினைவு கூர்ந்தார். கோணங்கி. நஞ்சுண்டன், சுதீர் செந்தில் தனது கதைகளைப் பிரசுரம் செய்த நண்பர்கள் இங்கு நான் காண்கிற நண்பர்கள் சுப்ரபாரதி மணியன், மயுரா ரத்தினசாமி, வைகறை, யாழி, பாட்டாளி, உள்பட நண்பர்கள் மறக்க முடியாதவர்கள். எளிய அளவில் தன் ஏற்புரையை நிகழ்த்தினார். ஆங்கரை பைரவி மிகச்சிறந்த விழா தொகுப்பாளர். ஒரு சமயம் தகிதா நூல் வெளியீட்டு விழாவில் இடையிடையே புகழ்பெற்ற கவிதைகளைக் கூறி நிகழ்ச்சிகளை தொய்வடையாமல் நகர்த்துவதில் பெயர் பெற்றவர். நிகழ்வுகளின் தன்மை கருதி தனது ஏற்புரையை எளிதாக்கிக் கொண்டார் எனச் சொல்லவேண்டும்.. தான் முதலில் கரும்பலகையில் பார்த்தேன் நிகழ்வு 39 என்றிருக்கிறது. கிழே பாருங்கள் 100 சதவிகித தேர்ச்சி என்றிருக்கிறது என்று எங்களுக்கு ஊக்கம் தந்த ஆங்கரை பைரவிக்கு நன்றி...
நண்பர் கவிஞர் ஆங்கரை பைரவிக்கு தேவமகள் இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் வானம்பாடி கவிஞர் நித்திலன் சிறப்பு செய்தார்          
கனவு இலக்கிய இதழை இருபத்தி ஏழாம் ஆண்டாக நடத்தி வருபவர், ஏறக்குறைய ஐம்பது நூல்களை நெருங்கியிருப்பவர், தமிழின் முக்கியமான படைப்பாளர்,படைப்பிலக்கியம், இதழியல் செயல்பாடு, திரைப்படம், குறும்படங்கள், ஆவணப்படங்கள், சர்வதேச திரைப்படங்கள், சூழலியல் படைப்புகள். தனது ஓயாத பயணங்கள் என்பதாக தனது சிந்தனை முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற சுப்ரபாரதி மணியன் அவர்களின் பதினோராவது நாவலான “சப்பரம்வெளியிடப்பட்டது. இந்த நாவலை மொழிபெயர்ப்பாளர் சுப்பிரமணியம்,வெளியிட மொழிபெயர்ப்பாளர் ஸ்டேன்லி பெற்றுக் கொண்டார். மற்றும் “நிழல்“ திருநாவுக்கரசு, சி,ஆர். இரவீந்திரன், சுரேஷ்வரன், பெற்றுக் கொண்டார்கள். இந்த நாவலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது..
                    
ஏற்புரையாற்றிய சுப்ரபாரதி மணியன் இந்த நாவலின் தன்மை குறித்து சில விளக்கங்கள் தந்தார். தனது சாயத்திரை நாவல் திரைப்படமாக எடுப்பதற்கு அருள் மொழி அவர்கள் முயற்சி செய்த போது சினிமாவிற்கு என்று சில மாற்றங்கள் செய்து திரைக்கதை எழுதித்தந்தேன். பிற்பாடு அந்த முயற்சி நின்று போனது. அந்த நிலையில் காஞ்சிவரம் என்னும் திரைப்படம் வெளிவந்த போது நான் எழுதிக் கொடுத்த திரைக்கதை மற்றும் காட்சிகள் கொஞ்சம் மாற்றி மாற்றி படமாக வந்திருந்ததை கவனித்தேன். அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இருந்தாலும் திரை உலகில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணமானதுதான்.  அந்த  திரைக்கதை எழுத்துகள் வீணாக்க விரும்பவில்லை. இப்பொழுது நாவல் வடிவத்தில் வெளியிட்டிருக்கிறேன். நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு காஞ்சிவரம் படம் ஞாபகம் வரலாம். அதற்காக முன் கூட்டியே இந்தச் செய்தி என்றார். பொதுவாக எந்த திரைப்படமாக இருந்தாலும் அதில் மிகச்சிறந்த படைப்புகளை அவர்கள் சுட்டுக் கொள்வது சினிமா வந்து நூறாண்டுகளாக நடக்கும் பிரச்சனைதான். ஒரு சில இயக்குநர்கள் நேர்மையாக படைப்பாளியின் உரிமை பெற்று பெயர் பதிந்து வெளியிடுகிறார்கள். தற்காலத்தில் வெளியாகிற சினிமாக்களுக்கான கதைவிவாதங்களில் பங்கெடுக்கிற நவீன இலக்கிய நண்பர்களில் சிலர் தங்கள் சினிமா வாழ்க்கை சுகத்திற்காக படைப்புத்திருட்டுக்களில் காட்சித்திருட்டுகளில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ஆனால் கவனிக்கும் போதே நாம் அறிந்து கொள்ள முடிகிறது இது சுட்ட கதை, காட்சி என்பதை..சரி வாழ்க வளமுடன் என விட்டு விடுவதைத் தவிர வேறொன்றுமில்லை. நாம் கேட்டால் நீயும் திருடு..உன்னை யார் வேண்டாம் என்று சொன்னார்கள். உனக்கு அதற்குத் திறமையில்லை அதற்கு எங்களை ஏன் வருந்திக் கொள்கிறாய் என்பார்கள்..
          
முனைவர் ஜே.மஞ்சுளா தேவி தனது ஏற்புரைக்கு முன்னதாக கவிஞர் சிற்பி மொழிபெயர்த்த சூழலியல் நாவலான “என் மகஜெ“ குறித்த கட்டுரை வாசித்தார். என் மகஜெ என்பது ஒரு கிராமத்தின் பெயர். அந்தக் கிராமத்தில் என்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பால் அங்கு மக்களின் வாழ்நிலையும் உடல் உறுப்புகளின் சிதைவைக்குறித்து அந்த நாவல் பேசுகிறது. குறைப் பிரசவங்கள் அதிகமாகி விடுகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிப்பதன் மூலமாக விவசாய நிலங்கள் மட்டுமல்ல சுற்றுப் புறச்சூழல் மட்டுமல்ல உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மனித சமூகமே குறைபாடுள்ளதாக பிறப்பதற்கு வழிசெய்கிறது. பன்னாட்டுப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் நமது பாரம்பரியமிக்க இயற்கை வேளாண்மை அளிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மண்வளத்தை அளிக்க முயற்சி செய்கிற பன்னாட்டுக் கம்பெனிகளின் சதியை முறியடிக்க வேண்டும் என்று அந்த நிகழ்வில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். சிற்பியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வந்துள்ள நாவல் முக்கியமானது. ஒரு பெண் குழந்தைக்கு நாக்கு முகத்திற்கு வெளியே இருக்கிறது. காதுகள் நீண்டுள்ளது. கைகால்கள் குட்டையாகவும் உடல்கள் பருமனாகவும் அந்த கிராமத்தில் மக்கள் பிறந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தைக் கண்முன் நிறுத்துகிறார்.
         
சுரேஷ்வரனின் புதிய நூல் “நடிப்புக்கலை“ அகம்-புறம் பற்றிய அறிமுகம். கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர். கறுக்கல் இதழ், கறுக்கல் திரைப்பட இயக்கம், மற்றும் கருத்தரங்குகள். அமர்வுகள் என பல்லாண்டுகளாக இயங்கி வருபவர். நாடகப் பயிற்சிகள், நடிப்புக் கலை பயிற்சி, உடல் மொழி,பாவனை மேம்பாடு உள்ளிட்ட நடிப்புக் கலையின் பரிமாணங்களைக் கற்றுத்தருபவராக இயங்குபவர். அவருடைய முதல் நூலை “நிழல்“ வெளியிட்டுள்ளது. இந்த நூல் பற்றிய உரையை முனைவர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், சமீபத்தில் மூன்று குறுநாவல்கள், மொழிபெயர்ப்பு என்று தனித்துவத்துடன் எழுதி வருவதோடு நவீன இலக்கியத் துறையில் முக்கியமான பேச்சாளராகவும் உள்ள சு.வேணுகோபால் பேசி நடித்து உணர்வுகளுடன் ஒன்றி உரையாற்றினார்.
                
அரங்கம் ஒரு வழியாக நிகழ்வுகளை முடிக்க வேண்டிய சூழலில் நெருக்கடியான நேரத்தில் பேசத்துவங்கிய போது சூழலை மறக்கடித்தார். வாழ்வில் நடிப்பு என்பதை மனித  சமூகம் கற்றுக் கொண்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக முதலில் குட்டி ஈண்ற நாய்க்குட்டியின் கதையைச் சொல்லி பிறகு காளைகள், அடிமாட்டுச் சந்தை, (ஒட்டன் சத்திரம்- அத்திக் கோம்பை) என்றும் தனக்குப் பிடித்த டிஸ்கவரி சேனலில் புலியின் உறுமலை, பாய்ச்சலில் உள்ள அங்க பாவனைகளையெல்லாம் அறிமுகம் செய்தார். சுரேஷ்வரனுக்கும் தனக்குமான நட்பு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அவர் கல்லூரிகளில் எல்லாம் பயிற்சி  நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார். இந்த நூலில் அவர் மிகச் சிறப்பாக நடிப்பு பற்றி விவரிக்கிறார். வடிவேலுவின் உடல்மொழி பாவனைகள் எல்லாம் சாதாரணமாகவே மதுரை பக்கம் இப் பொழுதும் இளைஞர்களிடம் வழக்கத்திலிலுள்ள பாவனைகளை அப்படியே உரித்துக் காட்டியவர் வடிவேலு.
            
 நடிப்புக் கலை பற்றிய குறிப்புகளில் தொல்காப்பியத்தில் உள்ள பதிவுகளை நினைவு கூர்ந்தார். விலங்குகளின் அசைவுகளிலிலிருந்து கற்றுக் கொண்டு வருகிறோம். பறவைகளின் உடல் மொழியும் நடிப்புக்கு உதவுகிறது. தாய்க் கோழியிடமிருந்து சற்றுத்தொலைவு பிரிந்து செல்கிற குஞ்சைக் கொத்தும். பிறகு அது தன் தாயைக் கோபத்துடன் பார்க்க அங்கெங்கே போகிறாய் வா இந்தப் பக்கம் என்னும். ஆகாயத்தைப் பார்த்து எச்சரிக்கும். நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற விலங்கினங்களின் அசைவுகள் அதன் நுட்பமான புரிதல்கள் நமக்கும் உதவுகிறது. இதன் வழியாக நாடகங்கள் அதன் வளர்ச்சியாக வீதி நாடகம் வரை வளர்ந்த நடிப்புக்கலை பற்றிய விவரங்களை சுரேஷ்வரன் தனது நூலில் வைத்திருக்கிறார். மேடை நாடகங்களின் அமைப்பு மூன்று புறமும் பார்வையாளர்களைக் காண்பதற்கு வடிவமைத்திருப்பார்கள். நடிப்பவர்கள் மக்களின் முன்பாக எடுத்த குரலில் பேசி நடிப்பார்கள். சுற்றிச் சுற்றி நடிப்பார்கள். குறிப்பாக கட்டியங்காரன் கதாபாத்திரம் முக்கியமானது. முதலில் வணக்கம் சொல்லிப்பாட ஆரம்பித்து எல்லா கதாபாத்திரங்களையும் உள்வாங்கிக்கொண்டு நடிக்க வராத நடிகர்களின் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கிற உன்னதமான கலைஞனாக கட்டியங்காரன் இருப்பார். சில சமயம் பெண் வேடங்களிலும் நடிப்பதுண்டு. ஆண்கள் பெண் வேடங்கட்டும் போது வித்யாசம் தெரியவருவதற்கு கைகளை ஒரு வாறாக விரித்துக் கொண்டு வீசியபடி நடக்கிற பாவனை இங்கிருந்துதான் துவங்கியது.
       
 சு.வேணுகோபால் உண்மையில் நடிப்பும் பேச்சுமாக அசத்தினார். நடிப்புக்கலை என்பதால் என்னவோ நடிப்பின் உடல்பாவங்களில் அற்புதமாக இருந்தது. யாருமே எதிர்பாராத உணர்ச்சிகள் பேசியது. குறிப்பாக நறுமுகை தேவி, மயுரா ரத்தினசாமி தங்கள் முகநூல் பதிவுகளில் குறிப்பிட்டது போல யதார்த்தமான உரையாகவே அமைந்தது. முன்னதாக அவர் சி.ஆர் இரவீந்திரன் அவர்களை நாவல் எழுதவைக்க முயற்சி செய்து வருகிறேன் என்றார். அவரை நாவல் எழுத வைத்து பிறகு நாம் அனைவரும் அது நாவலே இல்லையென்று கார்னர் செய்யலாம் என்று வெளிப்படையாகச் சொல்லி அதன் மூலமாக நாம் அது நாவல்தான் என உறுதிப்படுத்தலாம் என்றார். சி.ஆர் இரவீந்திரன் உரையாடலின் பொழுது அளிக்கும் தகவல்கள் தல வரலாற்று நிகழ்வுகள்,தரவுகள் சேகரிப்பு முக்கியமானது ஆனால் எழுத முயற்சிப்பதில்லை.
      
 ஏற்புரையாற்றிய சுரேஷ்வரன் இலக்கியம் இதழியல் பங்களிப்புகளில் நண்பர்களின் உதவியதைக் குறிப்பிட்டார். நடிப்புக் கலைபற்றிய நூல்கள் மிக குறைவாக உள்ளது. ஆனால் நடிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ள சமூகம் நம்முடையது. வெறுமனே நாம் நடித்துவிட முடியாது. அதற்கென மொழி இருக்கிறது. உடைகள், குரல் வளம், இசைக்குத் தகுந்த மாதிரி நடித்தல். ஒளியமைப்புகளுக்கு ஏற்ப நடித்தல் என்பதாக கற்பதற்குத் தகுந்த செய்திகளை இதில் தந்துள்ளேன். நாடகம், கூத்து, வீதி நாடகம், சினிமா போன்ற துறைகளில் கையாளப்படவேண்டிய நடிப்பு, வசனம், உடல் மொழியை வெளிப்படுத்துவது உள்பட பல நுட்பங்களை தற்போது ஆர்வமுள்ள தலைமுறையினருக்கு அறியப்படுத்தியிருக்கிறேன். இது போன்ற விரிவான அமர்வை விமர்சன களமொன்றும் ஏற்பாடு செய்தால் மேலும் பல உதாரணங்களை விளக்க முடியும் என்றார்.

“நிழல்“ திருநாவுக்கரசு பேசும் போது நிழல் வெளியீடுகளில் திரைப்படம் சார்ந்த பல தொழிற்நுட்ப நூல்கள், துறை சார்ந்த நூல்களில் முதல் முறையாக நடிப்புக் கலை பற்றிய நூலைக் கொண்டு வந்திருக்கிறோம். சுரேஷ்வரன் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் மட்டுமல்ல திறமையான கலைஞரும் கூட. கூத்துப்பட்டறை அனுபவங்கள் இந்த நூலை எழுத உதவியிருக்கிறது. அவருடைய பயிற்சிப் பட்டறைகள், கள அனுபவங்களை இதில் பகிர்ந்திருக்கிறார். இந்த நூல் நிச்சயமாக நடிப்பு பற்றிய ஆர்வமுள்ளவர்கள் கையிலிருக்க வேண்டிய கையேடு என்றார். சுரேஷ்வரனுக்கு வழக்கறிஞர் கரீம் சிறப்பு செய்தார்.

 இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு நிகழ்வை நடத்திக் கொடுத்த ஆளுமைகள் பூம்புனல் இலக்கியன், மயுரா ரத்தினசாமி, எம். செல்வராஜ், ப.முத்துச்சாமி, இளங்கோ கிருஷ்ணன், சி.சண்முக சுந்தரம், பா.து,மணியன், இரா.கி.ஜெயப்பிரகாஷ், சோழநிலா,ப.செந்தில்குமார் (யோகா) மருத்துவர் கோபி, எல்.ஜி. சிவக்குமார் நா.கலைமதிராஜன், களம்  கோ. ஆறுமுகம், வெ.தமிழ்மாணிக்கம், ந.முத்து. எஸ்.எஸ்.கே.ராஜன்,செந்தமிழ்த்தேனீ, ஐ.மைக்கேல் ராஜ், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் நெருஞ்சி இலக்கிய முற்றம் பா.மீனாட்சி சுந்தரம், தென்பாண்டியன், கவியன்பன் கே.ஆர்.பாபு, ஸ்டான்லி, ஆல் இந்தியா ரேடியோ நிகழ்வு தொகுப்பாளர் ஸ்டாலின், கவிஞர் மின்னல் ராஜேந்திரன் உள்பட பல நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை நடத்திக் கொடுத்தார்கள்..
பொன் இளவேனில், சோ. இரவீந்திரன். யோகா செந்தில்குமார் நிரல்களை ஒருங்கிணைத்தார்கள்
நிகழ்வின் இறுதியில் பங்கு கொண்டு சிறப்பித்த படைப்பாளர்கள், பங்கேற்பாளர்களுக்கு கவிஞர் இரா. பூபாலன் நன்றி கூறி நிறைவு செய்தார்..
வெயிலற்ற மதியத்தின் நிழலில் நண்பர்கள் உரையாடல்கள் அளவளாவி உறங்கும் சாலைகளில் கரையத்துவங்கினோம். முப்பது நாட்களுக்குள்ளான ஒரு பிரிவின் இடைவெளி ஒர் சருகு போலாகிறது.........

திங்கள், 17 பிப்ரவரி, 2014

வேல்கண்ணன் கவிதை நூல் ”இசைக்காத இசைக்குறிப்பு” குறித்துபாலு மகேந்திராவும் வேல் கண்ணனும்   
வேல் கண்ண்னின் இசைக்காத இசைக்குறிப்புகவிதை நூல் குறித்து-
இளஞ்சேரல்

         சமீபத்தில் தொடர்ச்சியாக கவிதைகளாகவே வாசித்து வருவதும் அதற்கான குறிப்புகள் மையக் கருத்துகளுடன் பொருந்திப் போகிற கவித்துவங்களுடன் உரையாடுதல் என்பதாகவே சிந்தை நகர்ந்து கொண்டிருக்க, நண்பர் கவிஞர் வேல் கண்ணனின் கவிதைகளுக்குள் வாசித்தும் வசித்தும் வந்தேன்.  முதல் தொகுப்பின் சொற்கள் வெட்கத்திலிருப்பதை உணர்ந்தேன். ரசனை யெனும் கரையின் எந்த மையத்திலிருந்து துவங்குவது? ஒரு கட்டுரைக்காக இடைக்காலத்தில் நாவல் எழுச்சி“ எனும் கட்டுரைக்காக காவல் கோட்டம், அஞ்ஞாடி, கொற்கை, உப பாண்டவம்,பஞ்சும் பசியும், கபாடபுரம், காதுகள். மணல் கடிகை, சங்கம் போன்ற நாவல்களுடனான மறுவாசிப்பு என்று பொழுது தீர்ந்து கொண்டிருக்கிறது. எழுத எழுத பிரச்சனைகளும் கையிருப்புகளும் தீர்ந்து போகும் என நான் நினைத்தது முட்டாள்தனம்தான். (கட்டுரை எத்தனை பக்கம் எனக் கேட்கக் கூடாது)

எழுதுவதற்கு முன்பாக அகம் பிடிபடாத குழப்பம் மேலிடுகிறது. எழுதி வருகிற பல ஆக்கங்களின் களங்களும் கதாபாத்திரங்களும் உரையாடல்களின் தொந்தரவு வேறு. இடைவிடாத அலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளுமாக பொழுது கழிய யாவற்றையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஐந்து முக விளக்குப் பொருத்தி இருட்டறையில் தியானத்திற்குள் நுழைவதைப் போன்று வேல்கண்ணனின் தொகுப்பின் வழியாக கவிதைகளுக்குள் பயணித்தேன். இதுவும் ஒரு விடுவித்தல். குளுகோஸ் ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்ட கைகளுடன் வாழ்வது போலத்தான் இருக்கிறது எழுத்து வாழ்வு.. வலித்தால் எடுத்து மூக்கில் பொருத்திக்கொள்ளலாம்.. வேறு வழியில்லை.. வாயிலில் மகாசிவராத்திரி பள்ளயம் எடுக்க படிவிளையாட்டு ஆடிவருகிற பெரியதனம் கருப்பண முதலியார் வம்சத்தின் பங்காளிகள் திருவாபரண கூடைகளுடன் மக்களை இந்த ராத்திரிகளில் சந்தித்து வருகிறார்கள். நான் ஓர் ஆட்டம் பார்த்துவிட்டு விரல்களிலிருந்த ஊசிகளைக் கழட்டினேன்..பிரிட்ஜிலிருந்து வேல்கண்ணனின் கவிதைகளை எடுத்தேன்..
           
கவிதைகள் உள்ளுக்குள் விரும்பி அருந்தும் தேநீர் போல மென் சூட்டில் இறங்குகிறது. விரும்பி நீண்ட நாள் அணிகிற புதுத் துணி போல படிந்து கொள்கிறது. பிடித்த பலகாரங்கள் தீரத்தீர அருந்தி விட்டு காலியான பாத்திரத்தைப் பார்ப்பது போல நம் அகத்தைப் பார்க்கிறோம். நம் இறைச்சல் சமூகத்தில் நாம் அமைதியாக வாழ முடியாது. ஒரு வகையில் நாம் அந்த இறைச்சல் எல்லாம் இசை என்பதாக இசைஞானியைப் போன்று கருதிக் கொள்கிற பட்சத்தில்தான் வாழமுடியும். உறவு கொள்ள முடியும்.
வேல் கண்ணனின் ஒரு கவிதையுடன் பாலுமகேந்திராவின் நினைவுகளுக்குள் நுழைவோம். பாலுமகேந்திரா பற்றிய குறிப்புகளும் செய்திகளும் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் தலைமுறை வண்ணப்பட ரசிகர்களிலிருந்து டால்பி ஸ்டிரியோ ரசிகர்கள் வரையிலும் பாதித்த ஒரே கலைஞனாக பாலுமகேந்திரா மாறியிருக்கிறார். இந்த தலைமுறை இடைவெளி நமக்கு நிரந்தரம் என்பதை பாலு நிருபித்திருக்கிறார். பாலு அளித்துப் போன பிலிம்ரோல்களை முக்கால்வாசி தூர்ந்து போய்விட்டது. அந்த வண்ணங்கள் மஞ்சக்கரி பிடித்தாகி விட்டது. ஒரு நேர் காணலில் தனது புகழ்பெற்ற படத்தின் பிலிம் ரோல்கள் அநாதியாக அழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்றார்.
  
சில நாட்களுக்கு முன்பு அவருடைய  சமீபத்திய படமான “தலைமுறைகள்“ பாக்ஸ் திரையரங்குகளில் ஆயிரம் ருபாய் டிக்கட் என்பதாக சில காட்சிகள் ஓடியது. சில மனிதர்களும் நாற்காலிகளும் பார்த்து மகிழ்ந்தது. மெதுவாக ஊறும் படங்களை எடுப்பவர் என்னும் பெயர் பெற்றவர். இருதயம் மெதுவாக ஓடினால்தான் நாம் உயிர் வாழமுடியும். நம் ரசனானுபவத்திற்கு எது மெதுவானது. எது சத்தமானது என்பது தெரியாது.
இந்தக் கவிதை காதலர் தினத்தின் காதலிக்காகவும் இசைஞானிக்காகவும் பாலுமகேந்திராவிற்காகவும் நமக்காகவும் வாசகர்களுக்குரிய சமநிலை அக மனதிற்குமாக நின்று அருள்பாலிக்கிற கவிதையாக உள்ளது நீங்கள் வாசிக்கலாம். ஒரு சந்தப்பாடலுக்கும் மோன லயத்திற்குமாக எழுதப்படுகிற தன்ணுணர்வு மிக்க ஒளிபொருந்திய கவிதை.. வேல்கண்ணனின் கவிதைகளில் இந்த மெதுவான தன்மை இருக்கிறது. ஒலி மெதுவான சந்தம். கண்ணின் கருவிழியின் உட்படலத்தின் தன்மைதான் குவி ஆடிகள் உருவாகவும் காமிராக்கள் உருவாகவும் வித்திட்டது என்பதை நாம் மறப்போமா. மனிதனின் குரல்தான் மிகச்சிறந்த இசைக்கருவி என்றார் இசை மேதை செம்மங்குடி சீனிவாசய்யர். மிகச்சிறந்த காமிரா கண்கள்தான். வேல் கண்ணனின் கவிதைகள் சிலவற்றைக் குறித்து பேசுவது அவசியம் காதுகள் கொண்ட கண்கள் உலகில் வசிக்கிறது. கேட்கட்டும் பார்க்கட்டும்..

நிதர்சன ஒளி
உன் வாசல் நெளி
கோலங்களிலிருந்து வண்ணங்களாக
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன
அவைகளிலிருந்து மீறியெழும் வாசனையொன்று
மகரந்தகளை மலரவைக்கிறது

உன் கைகளில் உருளும்
தாயக்கட்டைகளிலிருந்து
தொடர்ச்சியாக
தாயங்கள் விழுகின்றன
தாயங்களிலிருந்து மீறியெழும் புள்ளியொன்று
ஒளிச் சுழலை உறையவைக்கிறது

உன் கேசத்திலிருந்து உதிரும்
இழையொன்று இரவைக்
கவிழ்கிறது
இரவிலிருந்து மீறியெழும் கனவொன்று
நினைவுகளை நிலைக்க வைக்கிறது

உன் தூரிகையிலிருந்து வடியும்
ரகசியமொன்று கதையாக
உலவுகிறது
கதையிலிருந்து மீறியெழும்
சொல்லொன்று புதிரொன்றை விடுவிக்க வைக்கிறது- பக்-29

        பாலுமகேந்திராவின் வாழ்வு கூட இந்தக் கவிதையில் வருகிறது. இழப்பு ஈடு செய்ய முடியாத முக்கால் நூற்றாண்டு வாழ்வை எண்ணற்ற மனித உணர்வுகளை பிலிம் சுருள்களில் வைத்த மாதிரிதான் இந்தக் கவிதையும் பதிவாகியிருக்கிறது. எழுத்தில் வடியும்  சோகம் ஏன் பேசப்படுகிறது. ஒரு நாள் கழிந்தது என்பார் புதுமைப் பித்தன். அந்த நாள் வெறுமனேவா கழிந்து போகிறது. எத்தனை சித்திரங்கள் எத்தனை காட்சிகள் எத்தனை மனிதர்கள் எத்தனை வெளிச்சத்தில். எத்தனை புகை. எத்தனை ஓலம், எத்தனை பொலிவு. இந்தக் கண் பிலிம் ரோல்களில் உருண்டு படிந்து போகிற காட்சிகள்தான் எத்தனை. நம்மை விட்டு கழிந்து போகிற நாளை ஒரு எளிய காகித த்தைக் கிழித்து எறிவது போல எறிந்து விடுகிறோம். அதன் சோகம்தான் எழுத்து. கலைஞர்களின் வாழ்வும் அப்படித்தான். கலைஞனின் காதலும் கலைஞனின் காதலியின் வாழ்வும் மிகவும் துயரமானது. எப்படி கவிதை அகத்தின் ஆழத்தில் மிதக்கின்ற உணர்வைப் பேசுகிறதோ அப்படியாக பாலுமகேந்திரா ஒளியின் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தியவர். நடுத்தரக் குடும்பங்களின் முகங்களாக அவர் மாந்தர்கள் உலவினார்கள்.  குறிப்பாக பெண்கள் நமது ஊர்க்காரப் பெண்களைப் போன்ற நிறத்திலிருந் தார்கள். எண்ணைச்சிக்குத் தலையும் காட்டன் மிக்ஸிங்க் புடவையில் நகம் கடித்தார்கள். ஏமாற்றுகிறவர்களுக்குத் துணையாக வாழ்ந்தார்கள். உலகம் அவர்களுக்கு எதிராகவே சுழன்றது. தோல்வி வெற்றி சமகால வாழ்க்கையில் உழல்தல் என்பதாக அல்லாமல் ஒரு செடியாக மலராக ஒரு கிணறாக ஒரு குண்டு குழியுமான சாலைகளாக உடைந்த சைக்கிளாக பழைய பஜாஜ் ஸ்கூட்டராக வாழ்வார்கள். ஒரு சமூக உயிரிக்கான அந்தஸ்த்தை பாலுமகேந்திரா தன் கதை மாந்தர்களுக்கு அளித்தார். ஏறக்குறைய மகத்தான நவீன கவிஞனின் தலையாய பணியாகவே அமைந்தது. மிக வெளிப்படையான வாழ்க்கை. வேல்கண்ணனின் கவிதைகளும் அது போன்ற உணர்வைத்தான் தந்து கொண்டிருக்கிறது எனலாம்.
        நவீன கவிதைகளில் இந்த மூன்றாண்டுகளுக்குள்ளாக இறைநிலைக கவதை வடிவங்கள் உருவாகியிருப்பதைக் காணலாம். இறைஞ்சுதல் மனோபாவம் என்பது ஏறக்குறைய தன்னைக் கண்டடைதல் என்பதுதான் தம் அகத்தைப் பரிசோதிப்பது போன்றதுதான். நவீன கவிதைகளில் சுயமும் அகமும் பிரழ்வு நிலையில் உரையாடுதல் என்பதும் கூட இறைநிலையின் வடிவம்தான். கண்ணுக்குத்தெரியாத பலம் கொண்டமட்டில் சுத்தும் ஒரு சக்தி அது வேறொன்றுமில்லை அகம்தான். அகம் குறித்து நவீன கவிதை மட்டுமே பேசும். கவியரங்க கவிதைகள் பேசாது. புறம் பேசுகிற கவிதையில் இறைநிலையைக் காணமுடியாது. வேல்கண்ணனின் உருவகங்கள் உயிர்ச் சொட்டாய் அகக் குளத்தில் சொட்டி இறைநிலை வளையங்களை கரு செய்கிறது.

தலைப்பில்  வாசிக்க நேர்ந்த அனுபவங்ளை நாம் பேசும் போது இசைக்காத இசைக்குறிப்பின்  கவிதையிலிருந்து சில வரிகள்

மாமழையையே அள்ளிப் பருகிய பின்னும்
அடங்காத தாகம்
மரணத்திற்கு இறைஞ்சி நிற்கும் சிரஞ்சீவி
தனிச் சொர்க்கத்தை உதறித்தள்ளும் திரிசங்கு- பக்-7

இந்தக் கவிதை நமக்கு இசை சம்பந்தமான பழம்பெரும் காவிய நிலைகளை நினைவுட்டிச் செல்கிறது.
சில ஆத்மார்த்தமான செய்திகளை நாம் பார்க்கலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் இசை சம்பந்தமான இறைநிலை செய்திகள் உள்ளது. இசைத்தமிழ் பயில்தல் என்பது அரியதாய் மாறியிருக்கிறது. இசைக்குறிப்புகளுடன் இசைக்கருவிகளை இசைத்துக் கொள்ளுதல் என்பது சுலபம். அல்லது அதுவே போதுமானது என நினைத்துக் கொண்டதும் காரணமாகிறது. அதுவும் இறைநிலையின்பம்தான். இந்த தொகுப்பில் இசைக்குறிப்புகள் இசைக்காத காலத்தைப் பேசுகிறது. திருவையாற்றில் ஒரு கணம் தியாகராஜ சுவாமிகள் தோடி ராகத்தை மட்டுமே நாற்பத்தியெட்டு நாள் ஆலாபனை செய்து பாடி இறைவனுக்கு நேர்த்தி செய்திருப்பதாகச் சொல்வார்கள். ராக தாள லய சுத்தம் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒரு பாட்டுக்கும் நான்கு நீதிபதிகளுக்கு மட்டும் பாடினால் போதும் என்றாகி யிருக்கிறது.

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென  மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்- என்று நுன்மரபு நூலும்- 33 இசையின் அகத்தைப் பேசுகிறது.

துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப் பொருள் கிளவி என்மனார் புலவர்- உயிரியல்-62
துறையமை நல்யாழ்த் துணைமையேர் இயல்பு-  களவியல்-1
மறங்கடை கூட்டிய துடிநிலை- என்று –புறத்திணையும்
வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க- புறத்திணையும் பாடிக் களித்திருக்கிறது.
  
இசையொடு சிவணிய நரம்பு என்பது யாழ் எனும் இசைக்கருவியாகும் நரம்பின் மறை என்பது நரம்பிசைக் கலைகளைப் பற்றிச் சொல்லும் நூல்களாகும். “மறைய“ எனப்பன்மையில் விளித்திருப்பதால் அந்தக் காலங்களில் நரம்பிசை சம்பந்தமான பல நூல்கள் இருந்திருப்பதாக அறிய நேர்கிறது.  மறை என்பது மறைத்தல். மறை முதனிலைத் தொழிலாகு பெயராய் நூலுக்கு ஆயிற்று. ஒரு இயற்றமிழ் நூலைத் தாமே பயின்று பொருள் கொண்டு அந்நூலின் பொருளை வழக்கத்திற்குக் கொண்டு வருதல் போல இசைத்தமிழ் நூலைத் தாமே பயின்று வழக்கத்திற்குக் கொண்டு வரவே முடியாது. இசையிலக்கண நூல்களையும் நாம அப்படியே பயில முடியாது. ஆசிரியரொருவர் பயிற்றுத் தர நாம் பயில முடியும் என்பதை இசைத்தமிழ் நூல் இலக்கண வகைகள் கூறுகிறது. இசைத்தமிழ் நூல்களான பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம் முதலான தொன்னூல்களை நாம் பெற்றிருக்கிறொம். நாம் சில செய்திகளைத் தெரியாது ஒப்புக் கொள்வதின் மூலமாக நமக்கு நாதே சாபவிமோசனம் அளித்துக் கொள்கிறோம்.

சீரியாழ் செல்வழி பண்ணி யாழ் நின்
காரெதிர் கானம் பாடினேம் ஆக- என்று புறநானூறு 144 பாடல் பேசுகிறது.
           மேலும் மறை நூல் ஒன்று அன்பில் கோடல் அந்தணர் மறைந்து- பிறப்பியல்-20 பேசுகிறது. இங்கு மறை என்பது எழுத்துக்களின் பிறப்பிலக்கணத்தையும் வாழ்நிலை நூலான ஐந்திறம் இலக்கணங்கள் முழுவதையும் குறிக்கும். எவை எவை நுண் மரபு இலக்கியங்கள் செவ்வியல் பிரதிகள் நம்மால் பயின்று கொள்ளமுடியாமல் பிரிதொரு ஆசிரியர்களால்  பயிற்று வித்து பயின்று கொள்கிற நுண்கலை மரபுகள் யாவும் மறை நூல்கள் என்கிறது தொல்காப்பியமும் ஐந்திறமும்.
       துவைத்தல், சிலைத்தல்,இயம்பல், இரங்கல் என்பனயாவும் இசைகளோடு சொல்வதற்கும் பேசுவுதற்குமான பொதுமொழிகள். இசைக்குறிப்புகள் இதன் வடிவே உருவாகிறது. பண், பாட்டு. பாணன், பறவை என்பதன் அடையாளக் குறியீடுகளை பழம்பெரும் பாணர்கள் உருவாக்கினார்கள். நம் தலைமுறைக்கு தெரியுமா..தெரியவில்லை. 

துவைத்தல், சிலைத்தல், இயம்பலும் இரங்கலும் முறையே ஒலித்தல், சொல்ல்ல், இரங்கல் என்னும் பொருளில் வருகின்றன. இம்மொழிகளை வழக்கமாகப் பேசுவது போலன்றி இசையோடு பேசுவதில்லை. துவைத்தல், சிலைத்தல் முதலியன ஐந்திறம் தொல்காப்பிய காலத்தில் இசையோடுதான் பேசியிருக்கிறார்கள். வழக்குப் பேச்சே இசைமொழிகளோடுதான் நடந்திருக்கிறது. பாராயண வகைகளை தமிழ்ப் பண்டிதர்கள் உருவாக்கினார். சைவ, வைணவ வேளாண் குடிகளில் இலக்கிய மரபுகள் இந்த இசைமொழிகளுடன்தான் தோன்றுகிறது. இதை நாம் சொல்கிற போது நம்மைப் பைத்தியகாரன் என்கிறார்கள்..

வேல் கண்ணனின் இனி ஓர் அற்புதமான கவிதையை வாசிக்கலாம்.
நிம்மி

இரவுப்பாடலில் நிலைத்தேயிருக்கும்
துயரமாய்
மதியப் பொழுது

நிராகரிப்பு என்னும் ஆயுதம் ஒன்றுதான்
கையாளும் முறைகள் தான் வெவ்வெறானவை

நிம்மி
தூக்கிக்கிட்டுக் கொண்டதிலும்
இன்றைய என் ஆடையிலும்
மயில்கண் இருப்பது தற்செயலானது
          
         அக வெளிச்சத்தின் வழியாக வாசித்து உணரக் கிடைத்த கவிதையிது. வேல்கண்ணனின் இந்தக் கவிதையை வாசித்த பொழுது அதிர்ச்சியில் தள்ளப்பட்டேன் எனலாம். சார்லஸ் ப்யுவோவ்ஸ்கியின் கவிதை ஞாபகம் வருகிறது.

Long walks at night
That’s  what good for the soul;
Peeking into windows
Watching tired housewives
Trying to fight off
Their beer- maddened husbands. இதையொட்டிய இனியொரு கவிதையை நாம் வாசிக்கலாம்.
சுடர் வெம்மை

அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையைக் கடந்ததால்

அப்பொழுது நான் கடலுடன் பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்- பக்-24

எனக்கு இந்தக் கவிதை மாண்டி டக்ராக்-கின் புகழ்பெற்ற கவிதையை நினைவு படுத்தியது.


 Just because someone says they love you today
Does not mean they will love you forever
Feeling have ways of changing
Promises have ways of breaking
Just because someone kisses you passionately
Does not mean they wont kiss someone else
Kisses are not contracts of forever and ever
Caresses do not mean always together
Just because…………….
………………….
             அகவெளிச்சத்தின் வழியாக வாசிக்கப்படுகிற கவிதைகளாக வேல்கண்ணனின் கவிதைகள் உள்ளது. முதல் தொகுப்பின் கவிதைகளுக்குரிய இளமைப்பருவம் வசிக்கிறது. அகம் பற்றிப் பேசுகிற போது அகமாமணி திருமூலரை நினைக்காமல் இருக்க முடியாது.

அகலிடைத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடைத் தெம்மெய்யைப் போத விட்டானைப்
பகலிடத் தும் இர வும் பணிந்தேத்தி
இரவிடத் தேஇருள் நீங்கிநின் றேனே- திருமந்திரம்-141

இசைக்காத இசைக்குறிப்பு ஒரு சிறந்த பாடலுக்குரிய சங்கதிகள் உள்ளத்தில் பதிகிறது. பெரு நகர வாசிகளின் கல்வி மனமும் சமகாலத்தின் இலக்கிய மனமுமாக எழுதி வருகிற கவிஞர்களில் வேல்கண்ணனும் இணைந்திருக்கிறார். நம் பணியைக் கொஞ்சம் சிரமமேற்கொண்டு பகிர்ந்து கொள்ள முன் வந்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

வெளியீடு
ஆசிரியர்- வேல்கண்ணன்- அலைபேசி-9865887280
வம்சி பதிப்பகம்
டி.எம். சாரோண்
திருவண்ணாமலை-606 601
9445870995-04175-251468