ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

“பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு“ இரா.பூபாலன் கவிதைகள்



“பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு“
இரா.பூபாலன் கவிதைகள்

இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கையில் தொலைக் காட்சியில் “ஆயிரம் மலர்களே மலருங்கள்..அமுத கீதம் பாடுங்கள்..“ பாடல் எங்கிருந்தோ வருகிறது. விஜயனும் ரதியும் அந்தப் பாடலுக்கு பொருந்திப் போகிறார்கள். எண்பதுகளின் ராகங்களும் இசையும் வாழ்வும் அற்புத மானது. இளமைப்பருவங்களில் பழைய காலத்தின் கதைகளை அருவெறுப்பாய் உணர்வதுண்டு. ஒவ்வொரு ஐம்பதாண்டுகளில் நிகழ்ந்து போய்விடுகிற அல்லது நினைவை விட்டு நீங்காதவைகளை நாம் நம்மை அறியாமல் சேகரம் செய்து கொண்டே வருகிறோம். அப்படியாகவே அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு நகர்த்துகிறோம். அப்படித்தான் கவிதையும் கவிஞனும். மிக அருகாமையில் உணர்ந்து கொள்ளக் கூடிய நறுமணம். அருகாமையிலிருந்து ஒர் நட்பு தற்சமயம்தான் வெகு தொலைவிற்கு வெளியேறிப் போயிருக்கிறது என்கிற உண்மையை அறிந்து கொள்ளுதல். அடுக்கிக் கொண்டே போகலாம்.
       தற்கால இளையதலைமுறையின் இளமைப் பருவம் முதிர்வுத்தன்மை கொண்டதாகவே உள்ளது. இவர்களுக்கான காலத்தை முந்தைய தலைமுறை தட்டையான ஒன்றை, கையில் பற்றிக்கொள்ளமுடியாத ஒரு அருவெறுப்பான காலத்தைத்தான் தந்திருக்கிறது என்று நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவை மிகையாக அறிந்து வைத்திருப்பவைகளின் மீது நமக்கு எழுந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்கள் முற்றிலும் மன்னிக்கவே முடியாதவையாகவே உள்ளது.
இரா.பூபாலனின் கவிதைகள் என்னுடன் மிக நெருக்கமாக இருக்கிற கவிஞர்களின் கவிதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கவிதைகளை தனக்கு மிகவும் பிடித்த உடைகளை அணிந்து கொள்கிற வண்ணக்கலைஞனின் மனம் போகிற போக்குகளை எழுதுகிறவர்களாகவும் உள்ளார்கள். அகப்பொருளை விதவிதமாக ஒப்பனை செய்து ரசித்துக கொள்கிற எழுத்தாகவும் எழுதுகிற நண்பர்கள் இருக்கிறார்கள். இரா.பூபாலன் கவிதைகளில் அப்படியொன்றுமில்லையே எனபதாகத்தான் தோன்றும். ஆனால் மெல்லமெல்ல அதன் போதை அதிகமாகி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். என்னைப் பொருத்த வரை உயர் ரக போதை திரவம். எந்தப் பிரச்சனையோ மெனக்கெடலோ இல்லாமல் அணில் தாவுவதைப் போலவும் பொலபொலவென சில கொத்து மலர்கள் உதிர்ந்து விடுவதைப் போலவும் சட்டென்று எங்கிருந்து வருகிறதோ இந்தச் சாமி எறும்புகள் போல மனதிற்குள் சேறு போல அப்பிக் கொள்கிறது. அப்படித்தான் சொல்ல நினைக்கிறது மனம்.
அறையெங்கும்
நிறைந்திருக்கிறது
மெழுகுவர்த்தி
வெளிச்சம்

ஒளிக்கு பயந்து விட்ட
இருள்
ஒளிந்து கொண்டுள்ளது

அறையிலுள்ள
பொருட்கள்
ஒவ்வொன்றின்
பின்னால்
அதனதன்
நிழல்களாக...- பக் 34

நகுலனின் மென்னியைத் திருகுகிற கவிதை. அறைகளும் வெளிச்சங்களும் தனிமையும் மூலையிலிருக்கிற ஓர் துவாரத்தில் கசிந்து போய்க் கொண்டிருக்கிறது. நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகளும் பூமா ஈஸ்வர மூர்த்தியின் கண்ணாடிகளும் ஞாபகங்களில் வருகிறது. என்னைப் பொறாமை கொள்ள வைக்கிற கவிதைகளை பலவற்றைக் கவிதைகள் உள்ளது. ஏதோவொன்றின் சாயலை உணர்கிற நிலை சமகாலத்தின் கவிதைளில் தவிர்க்க முடியாது. கடற்கரைச் சாலைகளின் அறைகளில் உள்ள மெழுகுவரத்தி வெளிச்சத்தின் குழுமை. மலைத்தொடர்களில் மலைத்தொடர்களின் மேல் சரிவுகளில் குழந்தைகள் தீப்பெட்டிகள் அடுக்கி விளையாடுவது போல் தெரிகிற வீடுகளின் அறைகளில் உள்ள வெளிச்சங்கள் இருளும் மெழுவர்த்தியின் தீ வண்ணமும் வேறு வேறு. இதே கவிதையை நியுஜெர்சி மாகாணத்தின் ஒரு அறைக்காக ஆங்கிலத்திலோ பிரஞ்சிலோ ஜெர்மன் மொழியாக்கம் செய்யப்பட்டால் அதன் தன்மை வேறு அறையின் வெளிச்சத்தின் தன்மையாக மாறிவிடும்.
கவிதைக்கும் கவிஞனுக்கும் எல்லாம் ஒரே அறைதான். நிழல்கள் எப்பொழுதாவது தன் நிறத்தை மாற்றிக் கொண்டிருக்கிறதா.
வெறைட்டி ஹால் ரோடு எங்க இருக்குங்க? என நாம் அதே இடத்தில் நின்று கொண்டு விசாரித்தோமானால் நமக்குக் கிடைக்கிற பத்து பதில்களில் இரண்டுதான் சரியானதாக இருக்கும். ஒரு முறை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றிருந்தேன். பணமில்லை. இயந்திரம் பழுது. அன்று ஏதோ சாட்டிலைட் கோளாறு வேறு. ஐம்பது இயந்திரங்களுக்கும் மேலாகச் சென்று சென்று திரும்பி வந்தேன். ஒவ்வொரு இயந்திரத்திற்கும் முன்னால் வெறுமனே திருமபி வந்தவர்கள் உண்மை நிலையை காத்திருந்த மக்களுக்கு எதுவும் யாருக்கும் சொல்லவில்லை. படித்தவர்கள். முதிரா பருவம் கொண்ட விடலை மாணவர்கள். முயற்சி செய்து தோல்வியடைந்தவர்கள் யாரிடமும் எதுவும் பேசாமலேயே திரும்பினார்கள். கவித்துவமற்ற சொற்களால் பின்னப்பட்ட வாக்கியங்களைக் கற்று இயல்பான வாழ்வின் பரிசீலனைகள் அறியாத அரைவேக்காடுகள். அறைகளின் வாழ்க்கை,ஹாஸ்டல் அறைகளின் வாழ்வில் ஒரு சாம்பார் பார்சல் போல, ஒரு கெட்ட ஆம்லெட் போன்ற ஜடம்தான் அவர்களின் ரசனை. தொண்ணூறு சதவிகிதம் இளைஞர்கள் யுவதிகள் இலக்கிய ரசனையற்றவர்களின் உலகத்தைத் திறக்கிறார் இரா.பூபாலன்
சதை முண்டங்களாக அந்த இளைஞர்களும் யுவதிகளும் காணப்பட்டார்கள். பொறுமையிழந்த நான் ஒரு இளைஞனை நிறுத்திக் கேட்டேன். அவனோ ஆம் எனக்கு என் கார்டுக்குப் பணம் வந்து நான் எடுத்தேன் என்று வரிசையில் நின்றவர்களைக் குழப்பினான். வாட்ச் மேன் ஒவ்வொரு இயந்திரத்திற்கும் முன்னால் அந்த இயந்திரம் போலவே நின்று கொண்டிருந்தவரும் எதுவும் சொல்ல வில்லை. மக்கள் வருகிறார்கள் போகிறார்கள். வாட்ச் மேனிடம் யாரும் எதுவும் கேட்கவில்லையா என்றேன். அவர் ஏன் வேலை செய்யவில்லையா..என்றார். காவலர்கள் எதற்கு இருக்கிறார்கள். வயதான காவலர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும். அதனால்தான் கள்வர்கள் திருட முனைகிற பொழுது அவர்களைக கொன்று விடுகிறார்கள். நான்காயிரம் சம்பளம் பணிரெண்டு மணி நேர கடமை. விடுமுறை என்பது இல்லை. இந்த தொழிலுக்குக் கிழவர்கள்தான் வருவார்கள் இன்னும் நம் சமூகத்தில் எந்தெந்த தொழில்களுக்கு யார் யார் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் இங்குதான் மனு இருந்துள்ளது.
மழை விட்ட பொழுதொன்றில்
மழையைச் சபித்தவாறே
சாக்கடையைத் தூர்
வாரிக் கொண்டிருந்தான்

நாப்கின்கள்
ஆணுறைகள்
நெகிழிப்பைகள்

அடைத்து வைத்துக்
கொண்டிருந்தன
நம்மின் குரூர நெடியை

மெள்ள வழியத்
துவங்கியபின்
கிளம்பும் போது
உதிர்த்துவிட்டுப் போனான்
பிறப்பு குறித்த-ஒரு
கெட்ட வார்த்தையை
மகாத்மாவின் பெயரால்...பக்- 48

         இரா.பூபாலனின் கவிதைகள் இருத்தலியம் சார் கவிதைகள். சமூகம் இப்படித்தான். பெருநகரத்தின் விதிகள் அப்படித்தான். ஒரு முறை அதிகப்படிப்புப் படித்த ஒருவன் முழுமை செய்ய வேண்டிய பாரத்தை வைத்துக் கொண்டு அச்சமுற்றபடி இருந்தான். அவன் பெயர் எழுத வேண்டிய கட்டங்களை மிரண்டு பார்த்தான். பிறகு அவன் வரவேற்பு  அறைசென்று விளக்கம் கேட்டான். கிளார்க் என்ன பெயர் எழுதுவதில் என்ன சந்தேகம் அதையாவது எழுதியிருக்க லாம் அல்லவா என்றார். படித்த இளம் தலைமுறை சாணப்பிண்டங்களாக ஒரு சுக்கும் தெரியாத மடச் சாம்பிராணிகளை இந்தக் கல்வி உருவாக்கி யிருக்கிறது. நான் பல பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் நடக்கிற பொதுஅறிவு விசயங்கள், நேர்காணல்கள். உள்பட பல இளையதலைமுறையினரின் நாட்டு நடப்பு அறிவு பற்றிய பல்வேறு ஆய்வுகளை நான் நடத்தியிருக் கிறேன். ஏறைக்குறைய அத்தனை பேருக்கும் நமது எம் எல் ஏவின் பெயரோ ஆட்சியரின் பெயரோ, முதல்வர் கவர்னர் பெயரோ ஏன் பிரதமர் ஜனாதிபதியின் பெயர் கூட தெரியவில்லை. அல்லது தெரிந்து கொள்ள விரும்பு வதில்லை.
யாரும் எதையும் யாரிடமும் கேட்பதில்லை. எந்தந்த இடங்களில் என்னென்ன அறியவேண்டும். எதன் பொருட்டு நாடு பிரச்சனைகளைச் சந்திக்கிறது. நமது வருமானம் ஏன் கூட அதிகமாக உயராமல் நிற்கிறது. கட்டிடங்கள் உயருகிறது. கோவணங்கள் காணா மலாகிறது. திருடர்கள் விளைகிறார்கள். காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகிறது. புதிய புதிய நீதிமன்றங்கள் பிறக்கிறது. சட்டங்கள் சமகாலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்படுவதில்லை. ஒரு பண்டத்திற்கான விலையை எப்படி வேண்டுமானாலும் நிர்மாணித்துக் கொள்ளலாம். மறுக்கிறது. நமது சூழல்கள் தற்காலிக மானதாகவே ஏன் தோன்றுகிறது என்பதெல்லாம் குறித்த அக்கறை இல்லை.கவிதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். கவிஞன் அறைக்குள் அமர்ந்து கொண்டு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னுடன் உறங்கும் தன் நிழலை மட்டும் பார்ப்பதில்லை. கவிஞனின் சொல் அரசியல்தான் அவன் விரும்பும் கனவு உலகத்தை சிருஷ்டிக்க தன் பிரகடனத்தை தெரிவிக்கிறது.
    நவீன கவிதைகள் முழுக்கவும் பெருநகர்சார் வாழ்வின் இருத்தல்களை உணர்த்தவேண்டும். அல்லது பெருநகர் சார் அழியும் கிராமங்களின் தொன்மங்கள் பற்றியும் அதன் மீறல்களுமாக இடம்பெறவேண்டும். கவிஞன் ஒரு பெருநகரத்திற்குரிய குடும்பத்தை பறவையைப் பார்த்து “போல செய்தல்ஆக்க நினைப்பவ னாகவே இருக்கிறான். உலகின் தொழிற்புரட்சியின் காலத்தின் இருத்தலியல் கவிதைகள் இதையே வலியுறுத்தின. மாசு படாத நகர்கள் அவசியம் என்று கவிதைகள் பேசியது. அப்படியே உருவானது. இந்திய சுதந்திரத்திற்குப்பிறகான நவீன கவிதைகள் அகச்சிக்கல் களை மாநில உரிமைகளை மட்டுமே பேசியது. பாரதியைத் தவிர எந்த மாதிரியான ஒரு உலகு-வீடு-வாழ்வு வேண்டும் என்பதை யாரும் அந்தக் காலகட்டத்தில் பேசவேயில்லை. புலம்பித்தீர்த்தார்கள். அதனால் நல் உலகு உய்யவில்லை. இக் கவிதை இரண்டு கருப்பு வெள்ளை காலத்தையும் வண்ணங்களின் காலத்தையும் நினைவு கூர்கிறது
மெதுவாகத் திறங்கள்
கதவுகளை

உறங்கிக் கொண்டிருக்கும்
நான் எழுந்துவிடக்கூடும்

கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
நான் கலைந்து விடக்கூடும்

முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
நான் திடுக்கிடக் கூடும்

ஒரு கொலை செய்து கொண்டிருக்கும்
நான் கலவரப்பட்டு விடக் கூடும்

அல்லது
உறைந்து விடக் கூடும்
உங்கள் கண்கள்
செத்துக் கிடக்கும்
என்னைப் பார்த்து.-பக்-80

          தலைப்பிட்டு பதிவாகியிருக்கிற கவிதைகளில் இரா.பூபாலனின் வாழ்க்கை குறித்த புரிதல்கள் ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. கவிதைகள் குறித்து ஏதோ கொஞ்சம் வேறு வேறு குரல்களில் சிலர் பேசுகிறார்களே அவை என்னதானென்று வாசிக்கலாமே என “கவிதைகள்“ என வாராந்திரிகளில் வெகுசன ஊடகங்களில் எழுதிவருகிறவர்கள் சிலர் நகர்ந்து வருகிறார்கள். வரத்தொடங்கியிருக்கிறார்கள்.
கவிதைகளுக்கும் முந்தைய படிக்கட்டுகளில் பாராக்கு பராக்கு என்று விழிக்கிற சென்ற நூற்றாண்டின் தமிழுணர்வாளர்களின் பாசறையின் இளம் வாசகர் வாசகிகள் அச்சம் பீடிக்கத் தத்தளிப்பவர்களுக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் கவிதை நூல்கள் சிறந்தவொரு பாடப்புத்தகம் என்று சொல்வோம்.
நாட்டின் வளர்ச்சிவிகிதம் ஆண்டுக்குச் சராசரி 8.5 சதம்தான் கணக்கிடப்படுகிறது. தோராயமாக இந்த இழவு ஏழுக்கும் மேல் ஏறிய வரலாறு இல்லை. கவிதைகள் எழுதுகிறவர்கள் இதுதான் கவிதை என்று அறிந்து கொண்டால்போதும் நாட்டின் வளர்ச்சி விகிதும் 25 சதமாக தானாக உயர்ந்து விடும். சமீபத்தில் ஒரு சொற்கள் காலியான கவி ஒருவர் பல்லிபாப்பிராண்டிகள் சாப்பிடுவார் போல. தீடிரென்ற ஞானோதயம் வந்தவராக எனக்கு இதுதான் கவிதை என்று தெரிந்து விட்டால் கவிதையெழுதுவதை நிறுத்திவிடுவேன் என்றுச் சொல்லி யிருக்கிறார். இவர் ஒருவர் போதும் ஐம்பதாண்டுகால சிறந்த முயற்சிகளை அழிப்பதற்கும் காட்டிக் கொடுப்பதற் கும். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக பலமொழிகளில் என்ன வெங்காயத்தை எழுதினாராம். அகதிகளைத் திருப்பி அவர்களுடைய சொந்த நாடு அனுப்புகிறார்களாம். உண்மையிலேயே செய்ய வேண்டியது. இப்படியான கவிஞர்களைக் கண்களைக் கட்டிக் கொண்டு போய் இலங்கையில் இறக்கிவிட்டு வந்துவிடவேண்டும்.
இரா.பூபாலனின் உள்ளங்கையில் கடலும் பறவையின் கூடு ஒன்றும் பதுக்கிவைத்திருக்கிறார். தூளி ஆடிக் கொண்டிருக்கிறது. குஞ்சிலிப் பறவைகளின் சதுர்க்க ஒலி கேட்கிறது. கவிதைகள் தொகுப்பாகிற சமயத்தில் பல பொருள் பேசும் கவிதைகள் இரண்டாக இரண்டாக பதிவாகாமல் கவனித்துக் கொள்வது நலம். சுமார் என்பது கவிதைகளுக்கும் மேல் உள்ள இந்த நூலில் மிகையாகத் தெரிவது மிகமென்மையான அழகியலின் அமைதியான கூற்றுகள். சமகாலத்திற்கு அரசியலும் ரௌத்தரமும் அவசியம்.
மற்றொன்று முகநூல்கவிதை அமைப்பு முறை என்பது ஒன்று இல்லவேயில்லை. கவிதைதான். அதன் தளம்-கட்டுப்பாடு-வடிவ இறுக்கம்- சொற்சிக்கனம் அவசியமே இல்லை. காட்சிக் கதிர்களின் ஒளிச் சிதறல்கள் நீண்டு தெறிக்க வேண்டும்..
இரா.பூபாலனின் கவிமொழி அந்தப் பாராசூட்டைப் பற்றிக் கொள்ளும். வாழ்த்துக்களுடன்..
வெளியீடு-
பறக்க எத்தனிக்கும் ஒற்றைச் சிறகு
கவிதைகள்-ஆசிரியர். இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர்-642 123
பொள்ளாச்சி
விலை ரூ-70- பக் 95
90955 07547
98422 75662


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக