ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

“காக்கா முட்டை” திரைவிமர்சனம் நன்றி 00கொலுசு மின்னிதழ்...

காக்கா முட்டை- திரைவிமர்சனம்-
இதுவரையிலான நடந்த உரையாடலை முன்வைத்து-
         காக்கா முட்டை படம் குறித்து மிக விரிவாகப் பேசப்பட்டு விட்டது. உண்மையில் ஒரு மிகச் சாதாரணமான படமாக இருந்த நிலையை தேசிய விருது அறிவிப்புகளும் இந்தப் படத்தை வாங்கிய வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியினர் செய்த பரவலான போஸ்டர் விளம்பரங்களும் இந்தப் படத்தை  வணிக அடிப்படையிலும் வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறது.
       மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெகுசன மக்கள் கண்டுகளித்த கலைப்படம் இதுவாகத்தான் இருக்கும். வெகுசன மக்களுக்குக் கலைப்படங்கள் மீது இருந்த அச்சத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.
        காக்கா முட்டை படத்திற்கு இணையதளங்கள் உள்பட வேற்றுமை பாராமல் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அநேகமாக ஒட்டுமொத்த ஆதரவை காக்கா முட்டை படத்திற்கு கிடைத்திருக்கிறது. கருத்தொற்றுமையுடன் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நிலை அமைந்திருக்கிறது.
         ஒரு முக்கியமான படம் எந்தெந்த வழிகளில் கொண்டாடப்படும் என்பதை அறிந்து கொள்ளவும் இந்தப் படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது. எளிமையான படங்களை குறைந்த அளவு பொருளாதாரச் செலவில் படங்களைத் தரமுடியும் என்னும் நம்பிக்கையை தற் பொழுது ஊடகவியல் காட்சி ஊடகவியல் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கையும் அளித்திருக்கிறது.
       படத்தின் கதையை மிகச்சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியது. இன்றைய மிக நிரப்ப பட்ட உணவுக்குவியல் உள்ள நம் நாட்டில் ஒரு சிறுவனின் எளிய விருப்பம் நிறைவேற்றப்படுகிறதா என்பதுதான். இதற்காகத் இயக்குநர்  மணிகண்டன் எடுத்த முயற்சிகள் தான் படத்தின் களம். பெருநகரங்களின் ஓரத்தில் கழிமுக கழிவு ஓர வாய்க்கால்களில் பாசனம் பிடித்த ஏரிகளில் வாழ்கிற எளிய மக்களின் வாழ்க்கையும் கூடவே வருகிறது. இந்திய சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் இந்தியப் பெருநகரங்களின் அருகில் வாழ்கிற மக்களின் வாழ்க்கைகளும் எளிய ஆசைகளும் தீர்க்கப்படுகிறதா என்பதே கேள்வி.
       படப்பிடிப்பின் களங்கள் தமிழ் சினிமாவிற்கு பழசு என்றாலும் மணிகண்டனின் பார்வை முழுக்கவும் கலையும் மனிதாபிமானமும் சார்ந்த வெளிப்பாடுகள். இரண்டு சிறுவர்களுடன் உள்ள தாய் அவளின் கணவன் சிறையில். அச்சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடும் ஆசை வருகிறது அந்த ஆசை நிறைவேறுகிறதா என்பதே படம் என்று அவர் சொன்ன கதையை யார்தான் படமாக்க முன்வந்திருப்பார்கள். படத்தைத் தயாரித்த இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகதஸ்கரும் பாராட்டுக்குரியவர்கள்.
         படம் வெளியான சில நாட்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது. சில முக்கியமான கருத்தியலாளர்கள் இந்திய ஏழ்மையை விற்றுப் பணம் பார்க்கும் குயுக்தி என்றெல்லாம் பேசினார்கள். நம் உரையாடலில் கலை குறித்துப் பேசும் போது ஏழ்மையை மட்டம் தட்டுகிற தூய கலையமைய வாதிகள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் காகிதப் புலிகள் எந்த நாளும் ஒரு அருகம்புல்லைக் கூட தன் வாழ்நாளில் கிள்ளியிருக்க மாட்டார்கள்.
    ஒரு வெகுசன மக்கள் ஊடகத்தை மக்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதை எதிர்க்கிறவர்களின் கலை பற்றிய அறிவை நாம் சோதிக்கவேண்டியிருக்கிறது ஒரு உரையாடலில் ஒரு வசனம் “குப்பத்துப் பசங்கன்னு ஏன் சார் சொல்றீங்க..நம்ம பசங்கன்னு சொல்லுங்களே..படம் இதைத்தான் சொல்ல வருகிறது. கட்டாயக் கல்வி கட்டாய தமிழ் வழிக்கல்வி. தமிழுக்கு முன்னுரிமை என்றெல்லாம் பேசும் சமயத்தில் சிறார் கல்விக்கு முன்னுரிமையும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பும் அவசியத்தை இந்தப் படம் பேசுகிறது.
    இந்தியப் பொருளாதரச்சூழலில் இன்று ஒரு குடும்பம் சாப்பிடவேண்டுமென்றால் குடும்பமே பாடுபட்டுத்தான் சாப்பிடவேண்டியிருக்கிறது. ஏழ்மையில் இருப்பவர்கள் நிலையை நாம் சொல்லவேண்டியதில்லை. வறுமையைப் பேசத் துணிவதே நாம் கலைக்குச் செய்யும முதல் மரியாதை. அரசியலற்ற கலையின் அம்சத்தின் மேன்மை யான பகுதிகளை காக்கா முட்டை படம் எடுத்துரைக்கிறது.
     பீட்சா கடை முதலாளிகள் மற்றும் அடியாட்களை துவக்கத்திலிருந்து மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டப்பட்டு பிற்பாடு படத்தின் இறுதியில் அவர்கள் நல்லவர்கள் அல்லது வியாபார உத்தியின் வெளிப்பாடு என்று மிக தைரியமாக ஒரு கலைஞன் பேசியிருக்கிறான் வணிகமயத்தின் ஊடுபாவுகளில் சிக்கும் எளிய உணவு ரசனை பற்றிய மையக்கருத்து நமக்குள் உரையாடுகிறது. விவாதங்களுக்கு பஞ்சமோ அறிவுரையோ இல்லாமல் இல்லை.
    படமாக்க முறைகளில் வணிக படத்தின் அம்சங்கள் தான் அதிகமாகத் தென்பட்டது. பின்னணி இசையின் இறைச்சல்கள். வாகனங்களின் சத்தம். தேவையில்லாத எதிர்பார்ப்பும் விறுவிறுப்புமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சிறுவர்களும் அவர்களின் சிரிப்பிலேயே கலையின் எதார்த்தம் மின்னுகிறது. காணாமல் போன சிறுவர்களைத் தேடிக் கொண்டு வருகிற தாயைக் கண்டதும் “தோ அம்மாடா ..என்று ஓடிவந்து கட்டிக் கொள்கிற காட்சியின் இதுவரையிலுமான தமிழ் சினிமாவின் அம்மா பாசத்தை விடவும் உன்னதமான காட்சியாக அமைந்திருக்கிறது. வழக்கம் போல ஏழ்மை யைக் காசாக்குதல் எனும் விமர்சனம் வருகிறது. இந்திய தமிழ் சினிமாக்கள் குறித்து வருகிற  விமர்சனங்கள்தான்
     சத்யஜித்ரே, அடுர் கோபாலகிருஷ்ணன், மிருனாள் சென் “பசிதுரை, எம் ஏ காஜா போன்ற இயக்குநர்களுக் கும் இந்த விமர்சனம் வந்து போனது. இந்திய வறுமையை ஏழ்மையை பற்றாக்குறைகளை கலை என்ற பெயரில் வெளிநாட்டில் வெளிச்சம் போட்டுக்காட்டி தங்கள் மேதாவித்தன்தைக் காட்டிக் கொள்கிற கூட்டம் என்றார்கள் திரைப்படக்கலைஞர்களை...
எழுபதுகளில் பசி படம் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல.. இதே போன்ற சென்னையின் மற்றொரு மக்களின் முகத்தை அந்தப்படம் காட்டியது. பசி இயக்குநர் துரை ஷோபா உள்பட விருதுகள் மேல் விருதுகள் வாங்கி குவித்தார்கள். உலகிலேயே ரஷிய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டுத் தெரிவித்து பேசவைத்த திரைப்பட இயக்குநர் பசி துரைதான். தமிழ்த்திரைப்படம்தான் அந்த சாதனையைச் செய்திருக்கிறது. ஆனால் மணிகண்டனின் திறமை பற்றி இங்கு எந்த பெரிய அளவு மரியாதையும் கிட்டவில்லை.
        சமீபத்தில் மீண்டும் ஒரு முறை காக்கா முட்டை படம் பார்க்க வாய்த்தது. இடையிடையில் இரண்டு சிறுவர்கள் மற்றும் மணிகண்டனின் உரையாடல்கள் அடங்கிய பிரிமியர் ஷோ வும் பார்த்தேன். இப்படத்தின் ஆக்கங்கள் பற்றிய விரிவான உரையாடலை மணிகண்டன் தந்தார். சின்னவன் பாராட்டும் போது கூல் கூல் என்று மணிகண்டனைக் குத்தினான். பெரியவனை வாடா போடா என்றே அழைத்தான். தேசிய விருது பெற்ற செய்திகளைச் சொன்னபோது அவர்களுக்கு மகத்துவம் தெரியவில்லை. ஒரு வேளை அந்த விருதும் பீட்சா போல கொழ கொழவென்றுதான் இருக்குமோ என்று நினைத்திருப்பான் என்று நினைக்கிறேன். அவனுடைய அந்த சிரிப்புதான் படத்தின் மாஸ்டர் கிளாஸ் அப்பியரன்ஸ் என்று சொல்ல வேண்டும்..
சின்னவனிடம் கேட்டபோது “உன்னுடைய முதல் விமானப் பயணம் எப்படியிருந்தது விமானம் மேலே பறந்தபோது என்னவெல்லாம் உணர்ந்தாய்...“என்று மணிகண்டன் கேட்டபோது சின்னவன்
“ஏசப்பா...என்ன சீக்கிரம் அம்மா அப்பாகிட்ட கொண்டு போய் விட்ரு...என்று வேண்டி நடித்துக் காட்டி வெட்கப்பட்டான்....










ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மு.சந்திரகுமார் நாவல் “எரியும் பட்டத்தரசி” குறித்து..

மு.சந்திரகுமாரின்...
எரியும் பட்டத்தரசி- நாவல்
      தமிழில் நாவல் வடிவங்கள் நவீன காலத்திற்கேற்ப மாறிக் கொண்டு வருகிறது. அறநெறி இயலுக்குள் நுழைகிற பெரும்பாலான நாவல்கள் அகத்துக்குள் நடக்கிற குழப்பங்களை விசாரணை செய்யும். அரசியல் தவிர்த்த நாவல்கள் மனதின் ஆழத்தில் முங்கிக்கொண்டு புறச்சிக்கல்களை அலசும். அரசியல் தவிர்க்கிற நாவல்கள் பொது மனதின் அபிப்ராயங்களுக்குள் எளிதில் நுழைந்து விடும். பெரும்புகழையும் பெற்றுவிடும். ஒரு படைப்பாளி அரசியல் மட்டும் பேசாமல் அதிகாரங்களுடன் அனுசரித்துப் போய்விட்டால் போதும் அவனுடைய படைப்புகள் மிக உச்ச்த்திற்குச் சென்றுவிடும்.
          தமிழ் நாவல்களில் உள்ள சிக்கல் இதுதான். அரசியல் நாவல்களுக்கு  என்று வாசிப்பு தளம் இடது சாரி முகாம்கள் தவிர பொது இடத்தில் அதற்கு அவ்வளவாக மரியாதை கிடையாது. பொதுப்படையான ரசனையில் அரசியலுக்கு இடமளிப்பதில் நாவல் வாசகர்கள் விரும்புவதில்லை. நாவல் வாசிப்புக் காலமாக எண்பதுகளைச் சொல்லலாம். நெருக்கடி காலத்தின் நாவல்கள் பரவலாக அரசியல் களமாகவே இருந்தது.
      இருந்தாலும் அரசியல் நாவல்களை எழுதாமல் படைப்பாளர்கள் விடுவதில்லை. அரசியலைக் களமாக கொள்ளாத படைப்புகள் சந்தேகத்திற்குரியவையாகவே எதிர்காலத்தில் கணிக்கப்படும்.
       மு.சந்திரகுமாரின் எரியும் பட்டத்தரசி நாவல் தமிழின் முக்கியமான அரசியல் நாவலாகிறது. சுமார் ஐநூற்றைம்பது பக்கங்களுக்கும் மேல் எழுதப்பட்ட இந்த நாவல் கோவை நகரத்தின் ஐம்பதாண்டுகால தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் இடதுசாரி அரசியல் நிலைபாடுகளைப் பேசுகிறது.
      சமூகத்தின் விளிம்பு நிலைமக்கள் என்று அறிப்படுகிற அல்லது குற்றம் சுமத்தப்பட்ட அருந்ததியர்களின் அரசியல் மயப் போராட்டம் என்று சொல்லலாம். அரசியலமைப்பிற்குள் வருவதற்குக் கூட அவர்கள் நிகழ்த்திய போர்கள் இந்த நாவல்களில் வருகிறது. அரசியல் கட்சிகளின் ஏமாற்று வாக்குறுதிகள். தொழிற்சங் கங்களின் பிளவுகள், ஆதிக்க சக்திகளின் தொடர் தாக்குதல்கள் உள்பட பல்வேறு களச் செயல்பாடுகளை இந்த நாவல் பேசுகிறது. என்னதான் இடதுசாரி அரசியலை விளிம்பு நிலைமக்கள் தவிர்க்க நினைத்தாலும் அவர்களுடன் காலங்காலமாகத் துணை நின்று போராடிக்கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள்தான். தற்காலிக நிம்மதிக்கு இந்த விளிம்பு நிலைமக்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக்கட்சியின் மாவட்ட தலைமையுடன் இணங்கிப் போய்விடுகிற நிலையையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
            கோவை சுதந்திரமடைந்த பிறகு தொழில் நகரமாக வளர்வதற்கு ரயில்பாதைகளும பஞ்சாலைகளும் வார்ப்படத் தொழில்கள்  மோட்டார் சம்பந்தப்பட்ட தொழில்கள் உள்பட பல்வேறு தொழில்கள் வளரத் தொடங்கிய பிறகு அதனுடனே தொழிற்சங்கங்களும் வளரத்தொடங்கியது. இந்த வளர்ச்சிக்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட விளிம்பு நிலைமக்கள் கூலித் தொழிலாளர்களாகவும் மூன்று சிப்ட் முறைகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள். துவக்கத்தில் இந்த இடங்களில் சாதிய மோதல்கள் எழத்துவங்கிய போது முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர்கள். தொழில் வளர்ச்சியை எதிர்கொண்டாக வேண்டிய நிலையிலும் தங்கள் சாதியத் தொழில்கள் சார்ந்து விடுதலையடைய அவர்கள் மற்ற தொழில்களுக்காக பயண்படுத்தப் பட்டார்கள்.
       அப்படியாக அவர்கள் தொழிலாளிகளாக நுழைந்த பொழுது அவர்கள் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளையும் மு.சந்திரகுமார் பதிவு செய்திருக்கிறார். நகர விரிவாக்கத்திற்காக அவர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்டது. அதையொட்டி நடந்த தாக்குதல் என நாவல் எல்லா இடங்களையும் பதிவு செய்கிறது. இதன் பின்னணியிலிருந்த அரசியல் புள்ளிகள் திராவிடக்கட்சி களின் வளர்ச்சியும் ஆராயப்படுகிறது. தலித் இயக்கங்க ளின் வளர்ச்சியும அதன் செயல்பாடுகளும் வென்றெடுத்த இயக்கங்களையும் பேசுகிறது. ஒரு பெருநகரத்தின் அரசியல் சூழல்களை விரிவாகப் பேசுகிறது..கோவையின் பிரமாண்டமான தோற்றத்திற்கு உதவுகிற நகர்களான காளப்பட்டி, பீளமேடு, மசக்காளிபாளையம், ஹோப்ஸ் என அவிநாசி சாலையும் அதனையொட்டி வருகிற சிறிய கிராம ஊர்களின் அரசியல் பிரச்சனைகளின் வரலாறும் பேசப்படுகிறது. நிலக்கிழார்கள், ஆதிக்கவாதிகள், ஆளும் திராவிடக்கட்சிகளின் நிலைபாடுகள் அதே போல தொழிற்சங்கங்கள் வைத்துப் போராடிய இடதுசாரிகளின் நிலைபாடுகளும் பேசப்பட்டது.
    ஒரு நிலையில் பிரச்சனைகள் வெடித்த காலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பதவியிலிருந்த நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டிடத் தவறவில்லை. பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கிற இடதுசாரி உறுப்பினர் கள் எடுத்த சில முடிவுகள் என்பதாக நாவலில் எந்தப் பதிவையும் அவர் எழுத தவறவில்லை. மக்கள் நலன் போராட்டங்களில் களத்தில்  சில தவறுகளும் நிலைப்பாடுகளும் சூழலுக்குத் தக்கவாறு மாற்றிட வேண்டிய நிலையில் இடதுசாரிக்கட்சிகள் எடுத்த நிலைகள் மீதும் விமர்சனங்கள் உள்ளது.
       அதிகாரங்களுக்கு எல்லா மட்டத்திலும் உதவிகள்  கிடைக்கும். யார் சொன்னாலும் கேட்பார்கள். எந்தப் போரட்டத்தையும் அரசு அதிகாரத்தினால் உடைக்க முடியும். எந்தப் போராட்டக் குழுக்களையும் கலைத்து விடமுடியும். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் வென்ற சரித்திரங்களும் உண்டு. அப்படியாக வெற்றி பெற்ற போரட்டங்களில் பலவைகளில் ரயில்வே கூட்செட் மற்றும் ஜீவா பாரம் தூக்குவோர் சங்கத்தின் வெற்றிகளை யும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
      இந்த நகரத்தின் உருவாகத்தின் பின்னணியில் நிகழ்ந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தொழிற்சங்க போராட்ட வெற்றிகளும் அதில் அருந்ததியர்களின் எழுச்சியையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது புனையப் பட்ட பல்வேறு பொய் வழக்குகள் மற்றும் கள்ளச்சாராய வழக்குகள் அடிதடி வழக்குகள் என்ற பதிவுகளையும் அதன் விடுதலைக்காக வாதாடிய விபரங்களையும் பதிவு செய்திருப்பது ஒரு சாமான்ய னின் பார்வையிலிருந்து எழுதப்பட்டவை.
       இடதுசாரிக் கட்சிக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட குறிப்புகள்.பேட்டிகள், நேர்காணல்கள், காவல் நிலையத்தி லிருந்து பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள், குற்ற விபரங்கள் என பற்பல தரவுகளை இந்நாவலின் நேர்மைக்கு இணைத்திருக்கிறார். தொழிற்சங்க வரலாற்றின் காலப்பதிவாகவும் அமைந்திருக்கிறது. இந்த நாவலில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் விபரம் பதிவிடப்பட்டிருந்தாலும் ஆதிக்க வாதிகளின் அடக்குமுறைக்கு வித்திட்டவர்களின் பெயர்களை அவர் தவிர்த்திருக்கிறார். அந்தப்பதிவு பெரும் நெருடலாகவே அமைந்த ஒன்று. அவர் மறைமுகமாக வாவது அந்த நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக் கலாம். கோவையின் புறநகர்களில் நாம் அறிய அண்ணா நகர்,அம்பேத்கார் நகர். காமராஜர் நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர் நகர்,கலைஞர்நகர் என்னும் நகர்கள் புறம்போக்குப் பகுதிகளில் குடிசைகளாக, ரயில்வே பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசித்த அருந்த தியர்கள் மீது நிகழ்ந்த பிரச்சனைகளையும் அவர்களுக்கு நிலஉரிமைச் சான்றுகள் பெற்று வாழ எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
        பொதுவாக இந்த நாவலில் பதிவு செய்யப்பட்ட செய்தியில் தத்துவார்த்தமாக களப்பதிவுகள் உள்ளது. செய்தி திரட்டுகளாக விசாரணைக்குறிப்புகளாகவும் உள்ள நாவல் பதிவுகள் முக்கியமானது. இடதுசாரிக்கட்சிகளின் தனிப்பட்ட வளர்ச்சியை முக்கியமாக வைத்து நடத்திய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியை அலசுவது சிறப்பு. இந்திய தமிழக மற்றும் உள்ளுர் அரசியல் களங்களில் இடது வலது சாரி அரசியல் களங்கள் சற்று வித்தியாச மானவை. இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குள் உள்ள தொழிற்சங்க கட்சி நிலைப்பாடுகள் குறித்த பதிவுகள் வித்யாசமானது. வரும் காலத்திற்கும் புதிய தலைமுறைக்கும் முக்கியமானது. அது போலவே சில சுயேட்சையான அரசியல் தேர்தல் பங்களிப்பு முடிவுகளை இந்திய கம்யுனிஸ்ட்சி கட்சி எடுத்த முடிவுகளை நாம் அறிவோம். ஆனாலும் சமீபத்தில் பல்வேறு களப் பணிகளில் இரண்டு கட்சிகளும் இணைந்து பணியாற்று வது மகிழ்வான செய்திகளாகும்.
இரண்டு கட்சிகளும் இணையவேண்டும் என்று விரும்புகிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. அவை சாத்தியமற்றதாகவும் கனவாகவும் நிகழ்ந்து கொண்டிருக் கிறது. உள்ளாட்சித தேர்தல்களில் தேர்தல் பணிகளில் நிலவுகிற இடம் பிடிப்பு வெற்றி சம்பந்தமான போர்களில் நடைபெறுகிற சம்பவங்களும் முக்கியமானவை.
மு. சந்திரகுமாரின் நாவலில் புதிய கோவையின் பழைய சரித்திரம் எனலாம். களத்தில் அனுபவம் ரத்தம் தோய்ந்த அரசியல் இயக்கங்களின் செயல்பாடாக பதிவாகியிருக் கிறது. சந்திரகுமார் ஒரு தொழிற்சங்கவாதியாக, கட்சி செயல்பாட்டாளராக எழுத்தாளராக, பல போரட்டங்களில் ஈடுபட்டவராக வழக்குகள் கைதுகள் என்று அனுபவத்தின் சாட்சிகளாக அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து இந்த நாவல் புதுமையாக உள்ளது.
கலைப்படைப்புகளைக் காணும் வாசிக்கும் வாசகர்களுக்கு வாழ்க்கையை வாசிக்க விரும்பும் போது நிச்சயமாக எரியும் பட்டத்தரசி அசலான அனுபவத்தைத் தருவது உறுதி. தலித் இயக்கங்களுக்குள் நிகழ்கிற பிணக்குகள் அவர்கள் கொள்கை புர்வமாக சந்திக்கிற பல்வேறு நெருக்கடிகள் முரண்பாடுகளையும் நாவல் பல்வேறு அத்தியாயங்களில் வெளிப்படையாக பேசுகிறது. காளப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தாக்குதல்களும் பிற்பாடு நடந்த சமூக ஒருங்கிணைப்பு முயற்சிகளும் குறிப்பிட்டுள்ளார்.
     இந்த நாவல் ஒவ்வொரு பெருநகரத்தின் பின்புலம் தொழில்மய நெருக்கடிகளால் பின்னப்பட்டது என்பதை உணர்த்துகிறது. தங்களைப் புணரமைத்துக் கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் எப்படிப் பேராடுகின்றன என்பதை இந்த நாவல் எந்த அழகியல் கோட்பாடுகளையும் கொள்ளாமல் மக்கள் மொழியில் பேசியிருக்கிறது. காவல் நிலையங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான உறவுகள் முற்றிலும் வினோதமான பக்குவங்கள் கொண்டது. இந்த அனுபவங்களை வெறும் அழகியல் நோக்கிலும் அகச் சிக்கல்களுடன் எழுதமுடியாது. புழுதியிலும் வெயிலிலும் இரவு பகல் பாராமல் இந்தப்பெருநகரத்தை உருவாக்க உழைத்த சாமானியர்களின் வாழ்க்கைப் பதிவாக இந்த நாவல் உருப்பெற்றிருக்கிறது.
அரசியல் மனமாச்சர்யங்கள் தவிர்த்து மு.சந்திரகுமாரின் மார்க்சிய பார்வை போற்றப்படவேண்டியது. அவரின் விமர்சனங்கள் பரிசீலிக்கப்படவேண்டியவை. சில படைப்புகள் நமக்கு கச்சா பொருளாக இருந்தால் தான் நாம் நம் வாழ்விற்குத் தேவையான தத்துவ விசாரத்தைக் கண்டடைய முடியும்..தலித் இயக்கங்களின் அரசியல் விடுதலையெழுச்சி பற்றிய முக்கியமான இலக்கியப் பதிவாகவும் இந்த நாவல் விளங்குகிறது. ஆகப்பெரும் சிறந்த முயற்சியை விமர்சனங்களைக் கண்டு அச்சுறாமல் படைப்பாளிக்குரிய பொறுப்புடன் நூலாக்கி இருக்கிறார். களம்,பொறுப்புகள், அரசியல்இயக்கம் என இடையறாது சுழல்கிற மார்க்சீய சித்தாந்தம் கற்றவரான

தோழர் மு. சந்திரகுமாருக்கு வாழ்த்துக்களுடன்..
எரியும் பட்டத்தரசி..நாவல்
வெளியீடு- பதிவுகள் பதிப்பகம்
தாய்மை இல்லம் 10-ஸ்ரீராம் நகர் 2 வது வீதி
லட்சுமி புரம் கோவை 641004
அலைபேசி-90033 92939
Auto5chandran@gmail.com       











சனி, 5 செப்டம்பர், 2015

நிஷா மன்சூர் கவிதை நூல் நிழலில் படரும் இருள்..

“நிழலில் படரும் இருள்“ நிஷா மன்சூரின் கவிதைகள் குறித்து
கவிதைக்குத் திரும்பிய மனம்

கவிதைகளிலிருந்து விலகி இருத்தல் சாத்தியமாகாது. அது ஒரு நீர்மையாகிற இன்மையெனலாம். கவிதைகள் எழுதப்படாத நாட்களில் கவிதை எழுதியவன் கவிதைகளுக்குள் நுழ்ந்து வாழ்ந்து கொண்டிருப்பான் எனலாம். “ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது“ என்பதாக. சமீப நாட்களில் கவிதைகள் எழுதாத மனங்கொண்டு இருந்தேன். அப்படியாகவே நிறைய கவிஞர்கள் கவிதைகள் எழுதாமல் இருக்கிற கவிஞர்களும் இருக்கவே செய்கிறார்கள். கவிதைகள் எழுதாத கவிஞர்களின் நாட்கள் என்று கூட தலைப்பிட்டு நிறைய கவிதைகள் எழுதக் கூட இயல்பாக யாருக்கும் வாய்ப்புள்ளது. ஒரு வகையில் நிறைய எழுதுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கிறபோது சரி நாமும் சற்று ஓய்வெடுக்கலாம் என நினைப்போம். ஆனாலும் சொற்கள் தத்தளித்துக் கொண்டு எப்படியாவது வரியாக மாற சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டேயிருக்கும்.
      அப்படித்தான் தன் வாழ்நாளில் பாதி வருடங்கள் கவிதைகளும் கவிதைகளை எழுதிக்கொண்டுமிருந்த ஒரு கவிஞரின் தொகுப்பு சமீபத்தில் வாசிக்க கிடைத்தால் புதிய வெளிச்சமாக அமையும் அல்லவா. அப்படித்தான் நிஷா மன்சூரின் “நிழலில் படரும் இருள்“ கவிதைத் தொகுப்பைச் சொல்ல லாம்.1995 ல் தன் முதல் தொகுப்பான “முகங்கள் கவனம்எனும் நூல் வெளியிட்டு பிறகு 2000 ஆண்டில் சிறந்த இளங்கவிஞர் என விருது பெற்றவருமான நிஷா மன்சூர் தன் புதிய கவிதைகளுடன் இது வரையிலான கவிதைகளையும் தொகுத்துள்ளார். எண்ணிக்கையில் அடர்த்தியும் கனமும் குறைந்த கவிதை நூல் பலமிக்கவை என்பதை நிருபிக்கிற தொகுப்பாகவும் உள்ளதை குறிப்பிடவேண்டும்.
        கவிஞனால் அதிகமாக எழுத முடியாதவையும் எழுந்த முடிந்தவைகளை நிர்ணயிப்பவை அனுபவச் செறிவுதான். வாழ்க்கையின் அனுப்பிடிகளும் சொர்க்க நினைவுகளும் காணவியலாத சகிக்கவிலாத காட்சிகளைப் பதனம் செய்வதும் கவிதையின் இருப்பும் கவிஞனின் அறிக்கையுமாக பதிவாகிறது. அதிகமான காட்சிகளைக் காண்கிறவன் அதிகமாக எழுதக் கிடைக்கிறது. பெருநகரின் பலவிதமான காட்சிகள். தூசிகள், தினமும் கணத்தில் கடந்து கொண்டே போகிற வாகனங்கள். சக்கரங்கள் உருவான பொழுதிலேயே அலைக்கழிப்புகள் உருவாகிவிட்டதாகவே மனிதனின் வாழ்வும் அலைக்கழிப்பிலேயே உழல்கிறது. தேவையான பொருட்கள்  தேங்கிக்கிடந்தபோதும் மீண்டும் மீண்டும் இருப்புக் கொள்ளத்தேடிப் போகிறதாகவே மனித உடலின் பரபரப்பு இந்த கடப்பாடு எனலாம். கவிஞர் நிஷா மன்சூர் கவிதைகளில் பல காட்சிகள் மேற்கண்ட வலிமையின் தீவிரத்தைப் பேசுகிறது. மனிதன் தன் உணவுக்காகவோ அல்லது பரந்து பட்ட உலக இயக்கத்தை தனக்கான உணவைத்தேடுவதோடு உலகின் வரைபடத்தைக் காண எத்தனிக்கிறான் எனவும் இக்கவிதை வாயிலாக அறியமுடிகிறது. ஒரு வகையில் வாசகன் உள்ளிட்ட எல்லா மனித இரைப்பையும் இப்படியாகவே அலைகிறது.
நீ இரைத்துவிட்ட
எனக்கான உணவைப் பொறுக்க
நாடெங்கிலும் பறந்து கொண்டிருக்கும்
எளிய பறவை நான்---
        முதல் விதை அல்லது ஒரு பிரகடனம். பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது “உணவு இயற்கை தரும் உமக்குத் தொழில் அன்பு செய்தல் கண்டீர்..“ ஒரு மெல்லிசையில் வீணைக்குக் கூட சில நொடிகள் தான் கிடைக்கிறது அந்தப் பாடலுடன் தன் பிரச்சனைகளையும் பேசிக் கொள்வதற்கு. பிறகு உறைக்குள் சென்று மௌனமாக உறங்கிவிட்டு பிற்பாடு எப் போதோ மறுபடியும் சில கணங்களுக்குக் காத்திருப்பது போல.
        நவீன காலத்தின் சித்திரங்களை தன் இருபதாண்டுகளின் கவிதைகளிலும் பேசியிருக்கிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதப்பட்ட கவிதைகளிலும் சொற்களின் அளவும் நெடிய அனுபவமும் பதிவாகியிருக்கிறது. ரசனையும் அனுபவமும் பல கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் ஒன்றாக ஏற்பட்டு விடுவது தவிர்க்க முடியாதவை. சொல் முறையிலும் பகிர்ந்து கொள்வதிலும் சற்று வேறுபடுத்திக் காட்டும் போது அக்கவிதை நமக்கு சில நுட்பங்களை விவரிக்கிறது.
       பொதுவாக நவீன கவிதைகள் எழுதி வருகிறவர்கள் குறிப்பிடுபவர்களில் முக்கியமானவராக நகுலன் உள்ளார். அவர் பற்றிய கவிதையொன்றாவது இடம்பெற்றுவிடும். நகுலனின் எண்பதாண்டு வாழ்க்கை மட்டுமல்ல இந்த நவீன காலத்தின் தனிமையும் அவர் காலத்தின் தனிமையும் இணைவதாகவே பொருளாகிறது. திரும்பத்திரும்ப எளிமைக்குள் நுழைய எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகள்தான் நவீன கவிதையின் இயல்பு இனி நிஷா மன்சூரின் நகுலன் கவிதை
கோல்ஃப்லிங்க் சாலைக்குழந்தை
ஆளரவமற்ற
தனிமையின் பூதம் ஆட்கொண்டிருந்த
தன் வீட்டு வாசலைப் பார்த்து
நகுலன் சொன்னார்
“இந்த வாசலில் ஏன் இத்தனை செருப்புகள்...
அதிலும்
குழந்தைகளின் குட்டிக்குட்டிச் செருப்புகள்
ஒற்றைப் பூனை என் முகம் பார்த்து
“மியாவ்“ என்றது..
         வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் பள்ளிவாசல் செல்கிற இஸ்லாமியர்கள் சிலர் காலதாமதாக வருகிற பொழுது அவர்களின் வாகனங்களும் கால் செருப்புகளும் விடப்பட்டிருக்கிற வாயில்கள் நமக்கு நினைவுக்கு வருகிறது. மனித இருப்புகளை சதா நினைவுட்டி அறிவித்துக்கொண்டிருக்கிற படிமங்களாக இந்த செருப்புகளின் அடையாளங்களை நாம் காண்கிறோம்..
        ஒருவர் பல சோடி  செருப்புகளை உபயோகப் படுத்தினால் கூட இல்லாத சோடி செருப்புகளின் வழியாக அவர் எவ்வளவு தொலைவு எப்படியான முக்கியமான பணிக்குச் சென்றிருப்பார் என்பதையும் நாம் அறிய முடிகிற கவிதை..
        எனக்குத் தெரிந்து நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்க முன்பு  ஆளரவமற்ற பகுதியில் வீட்டு மனை வாங்கி வீடு கட்டிக் குடியிருந்தார். அவர் அச்சம் போக்குவதற்கு வீட்டின் முன்பாக பல சோடி செருப்புகளை பலவாறு நிறுத்தி வைத்து தன்னுடன் நிறையப் பேர் குடியிருக்கிறார்கள் ஆகவே திருடர்களே நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஊருக்கும் உலகிற்கும் தன் குடும்ப மனதிற்கு ஆறுதலாகவும் இந்த செருப்புகளை வைத்த காலம் நினைவுக்கு வருகிறது.
கவிஞர்களுக்கே உரிய இயற்கை நேசம் இவரது கவிதைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. முக்கியமாக இவர் கவனப்படுத்தியிருப்பது பவானி மற்றும் ஆறுகளுக்குள் கழிவுகள் கொட்டப்படுவதைக் குறித்த கவிதைகள் முக்கியமானது. அந்த நிலச்சரிவு குறித்த கவிதை சர்வதேச தரமிக்க தமிழ் கவிதை எனலாம். மழைக்கால ங்களில் நிலச்சரிவுப் பகுதிகளில் வாழ்கிற மலையக மக்களின் வீடுகள் பாதைகள் பற்றிய அச்சம் நமக்கு வருகிறது. நாம் செய்திகளாக அறிந்து ச்ச்சொ கொட்டிக் கொள்கிற காட்சிகள் கவிதையாக வந்திருப்பது முக்கியம். 1994 வாக்கில் நடைபெற்ற ஊட்டி நிலச்சரிவில் பேருந்து புதைந்து போன காலத்தை நினைவுட்டுகிற கவிதை அது. அதன் சொற்களில்
யாரோ ஒருவனின் சதையைத்தின்று
வளர்ந்திருக்கும் செடியில்
ஒரு மஞ்சள் பூ பூத்திருக்கிறது—என்கிறார்.
         இந்த வாழ்க்கையில் நம்முடன் தவிர்க்க முடியாது வியர்வையைப்போல உடனிருப்பது பொய். பொய் சொல்வது வேறு..கற்பனை என்பது வேறு கற்பனை உரைகள் பொய்களில் அடங்காது. எனினும் நம்மால் இந்த யுகத்தில் பொய் சொல்லாமல் வாழ முடியாது. குறிப்பாக அலைபேசிகளில் பொய் இல்லாமல் பேசாமல் வாழ்வது சாத்தியமில்லை. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்து அலைபேசியில் பேசுவானெனில் சத்தியமாக அவனால் பொய் பேசாமல் இருக்க முடியாது என்பதே பொய்யற்ற உண்மை. பொய் பொருந்தி விடுகிற பொழுது கவிஞனின் ஆற்றாமை படும் துயரம் அவஸ் தையானது. தவிர்ப்பையும் தவிப்பையும் நியாயப்படுத்த நம்மிடம் பொய் தவிர வேறொன்றுமில்லை.
“ஒரு ஆத்மார்த்தமான பொய்யை
அழகாகச் சொல்கிறேன்
எனினும்
அந்தப் பொய்க்கு உண்மையானவனாக
ஒருபோதும் இருக்க முடிவதில்லை..
       இந்தக் கவிதை நாம் பேசும் பொய்க்கு ஆறுதலாக இருக்கிறது. நம் இருப்பை மாற்றி அறிவிக்கிறோம். நம்முடன் இருக்கும் நபரை அகற்றுகிறோம். எத்தனை அழிப்புகள் கணத்தில் நிகழ்கிறது பொய் வழியாக..
        நிஷா மன்சூர் சமீபத்திய இலக்கியச் சந்திப்பின் நிகழ்விற்கு பங்கேற்பாளர்களுக்காக வர்க்கிகள் அடங்கிய பெரிய பாக்கெட்டுகள் கொண்டு வந்தார். அதுவரையிலும் இலக்கியக் கூட்டங்களுக்கு பலவகை பலகாரங்கள் சாப்பிட்டு இருந்தாலும் வர்க்கி வந்து சாப்பிட்டது புதுவிதமான உணர்வைத் தந்தது என்றார்கள் பங்கேற்றவர்கள். அவர் மேட்டுப்பாளையம் ஆதலால் அவருக்கு ஒரிஜினல் வர்க்கிகள் கிடைக்க வாய்ப்பு அதிகம். நிகழ்வு முழுக்க வர்க்கியின் சுவை நாக்கில் கூடவே இருந்தது இந்தக் கவிதையை வாசித்த பிறகு காலமெல்லாம் கூடவே வரும் போலிருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் கதையொன்று “சீனி தூவிய மொற மொற பிஸ்கட்“ என்னும் சொலவடை புகழ்பெற்றது. மகாராஜாவின் ரயில் வண்டி கதையில்.  வர்க்கித்தூளுக்குப் பின்புலம் குறுங்காதையாக விரிகிறது
தமிழின் மிக முக்கியமான நெடுங்கவிதையெனலாம்..
பசிக்கு
வர்க்கித்தூள் வாங்கிச் சாப்பிடுவேன் பஸ்ஸில்
ஒரு ருபாய்க்குக் கைநிறையக் கிடைக்கும்
பிரித்து விட்ட ஸ்டேப்ளர் பின்னுடன்
சிலசமயம்
வழுக்கி விழுந்த நிலவு போல
முழு வர்க்கியும் வந்து விழும்......
         இறுதியில்
இன்று
நண்பன் வீட்டு உபசரிப்பில்
வர்க்கித்தூள்
“நீயெல்லாம் சாப்பிடுவாயா..? கேள்வியுடன் பரிமாறல்
திரும்புகையில்
அப்போதே போல் ஏப்பம்
வர்க்கி ஏப்பத்திற்கு
எப்பவுமே தனிவாசனை....
         1997 வாக்கில் மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த ஒரு மதவெறிக் கொலையில் கொல்லப்பட்ட சிறுவனை அடக்கம் செய்து விட்டு வந்து எழுதப்பட்ட ஒரு கவிதை இன்று உலகின் பல மூலைகளில் நிகழ்ந்து வரும் இனப் படுகொலைகளின் பின்னணியில் உள்ள உளவியலைப் பேசுகிறது..
ஏழுவயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன..
தளர்ந்த
உள்ளிருந்த சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன..
         தொகுப்பில் உள்ள பல கவிதைகள் பல பக்கங்களுக்கு மேற்கோள் எடுப்பதற்கு உகந்ததாகவே தென்படுகிறது.  கவிதை வாசகர்களின் ரசனை அனுபவத்திற்கு விட்டு விடுகிறேன்.. நூலில் நீங்கள் ஆழ்ந்தால் கிட்டுகிறவை. அவர் குறிப்பிட்டிருக்கிற இஸ்லாமிய தொன்ம வாசகமான “ஒவ்வொரு மண்ணறையிலிருந்தும் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் மனிதர்கள் எழுப்ப படுவார்கள்..“ அப்படித்தான் இந்த தொகுப்பின் கவிதைகளும். உலகின் எல்லா உயிரிகளும் தன் அபிலாஷைகளை அனுபவிக்க ஏதாவது ஒரு அளப்பரிய தியாகத்தை முன்வைத்தே வாழ்கிறது என்பதை இந்த கவிதை நூல் முன்வைக்கிறது. தமிழ் கவிதையின் கட்டமைப்பும் கோருகிற யாசகங்களும் அதுவே ஆகிறது.. அவசியம் வாசியுங்கள்...
இப்பொழுது இறுதியாக மீண்டும் கவிதைகளுக்கு திரும்பியிருகிற கவிஞர் நிஷாமன்சூருக்கு வாழ்த்துக்களுடன் அவர் கவிதையின் சில வரிகளுடன்
மௌனகோஷம் எழுகிறது
“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்..“ இறைமறை வசனம்-109.6
கவிதையின் பக்கம் –48
“நிழலில் படரும் இருள்“
கவிதைகள் –ஆசிரியர்- நிஷா மன்சூர்
வெளியீடு- பக்கங்கள் 72- விலை ரூ 80
மலைகள்
119 முதல்மாடி
கடலூர் மெயின் ரோடு
அம்மாபேட்டை சேலம்-636003