திங்கள், 1 ஆகஸ்ட், 2016

தமிழ்நதியின் “பார்த்தீனியம்” நாவல் குறித்து

தமிழ்நதியின் “பார்த்தீனியம்நாவல் குறித்து
         
வசந்தன் தன் காதலை முதன் முதலாகச சொன்ன அன்று வானதி பல தடவை கண்ணாடி பார்த்தாள்....
-----
ராஜினி,சுபத்திரா,ஜெனிபர் இன்னும் எத்தனை பேர் தங்களுக்கு நடந்த கொடுரத்தை எவரிடமும் சொல்லாமல் மறைத்தவர்களின் நிலையும் மனநிலையும் என்னாகும். அவமானம் என்றெண்ணி வைத்தியசாலையில் சிகிச்சை கூட எடுத்துக் கொள்ளாமல் வலியும் சீழுமாய் அவதிப்படுபவர் எத்தனை பேர்...
-----
ஐபிகேஎல்எப்  எண்டதுக்கு அர்த்தம் இன்னெசெண்ட் பீப்பிள்ஸ் கில்லிங் போர்சஸ் எண்டு சொல்றது சரியாதானிருக்கு....
------
“என்னை மறந்திடுவீங்களா..?
        பிறகும் கேட்கிறாள்.இதென்ன கேள்வி அவன் தலையை நிமிர்த்தவில்லை.இத்தகைய கேள்விகள் எவ்வளவு அபத்தமானவை. உடலில் ஒரு அங்கத்தை இழப்பதைப் போன்றதல்லவா காதலை இழப்பதும்? அதனினும் மோசமான துயரம் அது.....

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எல்டிடிஇ தலைவரும் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவருமான வே.பிரபாகரன் தனது நேர்காணலில் ராஜீவ் காந்தி படுகொலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என வினவிய போது அது ஒரு துன்பியலான சம்பவம் என்றதிலிருந்து இந்த நாவலை வாசிக்கத் துவங்கினேன்.
            தமிழ்நதி தன் உரையில் குறிப்பிட்டிருப்பது போன்று 1983-89 வரையிலான இலங்கைத் தமிழ் நிலங்களிலிருந்த வாழ்வியல் முறைகளை இந்த நாவல் பேசுகிறது. 83 லிருந்து துவங்கிய மிகப் பெரியத் தாக்குதல் களிலிருந்து இலங்கைப் பிரச்சனைகளை அறியவேண்டிய சூழல்களை இந்தியாவும் இலங்கையும் ஏற்படுத்தியது. தமிழ் மக்கள் மீது துவக்கப்பட்ட தாக்குதல்களும் இனக்கொலைகளும் அதற்கு எதிராகத் துவக்கப்பட்ட போராட்ட அமைப்புகள் மற்றும் தமிழ்த்தனி ஈழப் போராட்டங்களும் போராளிக்குழுக்கள் துவக்கப்பட்டதும் நம் நினைவிலிருக்கும் துல்லியமான பிரச்சனைகள்.
                  இந்தியாவின் உதவிகள் அப்பொழுது இலங்கைத்தமிழ் மக்களுக்குக் கிடைத்தது. சிங்கள இனவாதத்திற்கும் சிங்கள அரசின் பிரச்சனைகளை எதிர்கொண்டு தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டும் போராட்டக் குழுக்களுக்கு ஆயுதங்களும் பணஉதவியும் அடைக்கலமும் இந்தியா செய்து வந்த சமயம். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வெளிப்படையான உதவிகளைச் செய்தார். அகதிகளுக்கான முகாம்கள் போராளிகளுக்கான பயிற்சி முகாம்கள். பண உதவி. உள்ளிட்ட உதவிகளைச் செய்து கொடுத்த வரலாறுகள் உண்டு. இலங்கையில் நிலவிய அரசியல் அதிகாரப் போட்டிகளும் இலங்கைத் தீவைத் தன்பிடியில் கொண்டுவருவதற்கான முயற்சியில் அருகாமை நாடுகள் எடுத்த ரகசிய முயற்சிகள் அங்கு பெரிய அளவில்  இனமோதல்களும் அழித்தொழிப்புகளும் நடந்தேறியது.
           தமிழ்நதியின் நாவலில் இந்தக் காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டுச் சூழல்களை மிக வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இலங்கையில் நடந்து வந்த அனைத்துப்பிரச்சனைகளின் தன்மைகள் குறித்து நாட்டிற்குள்ளும் வெளியே தமிழகம் உள்ளிட்ட பகுதிளிலிருக்கிற எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் பார்வையாளர்கள் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் என்று எழுதி வைத்த நிகழ்வுகள் ஏராளம். தமிழ் மக்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்பதிலிருந்தும் சிங்கள- தமிழ் மக்களுக்கான சரிசமவிகித அதிகாரங்கள் எனும் நிலையிலிருந்தும் பேசப்பட்ட பேச்சுவார்த்தைகள் நம்மிடம் உண்டு.
      தமிழ்நதியின் நாவலில் வருகின்ற பல தரப்பட்ட தமிழ் உணர்வு மிக்க கதாபாத்திரங்கள் வழியாக வாழ்ந்த இளையவர்கள், பாதிக்கப்பட்டவர் என வாழ்வியல் சம்பவங்களை விவரிக்கிறார். நாவலில் அமைதிப்படை நிகழ்த்திய கொடுரங்களைக் குறிப்பிடுகிறார். யார் யார் எந்த எந்த முகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டார்கள். ஆயுதங்களுடன் சரணடையாத விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்களை எப்படியெல்லாம் ராணுவம் சித்ரவதை செய்தது பற்றிய விவரங்களை தன் நாவலில் குறிப்பிடுகிறார்.
         நமக்கு தமிழகத்திலிருந்த அரசியல்கட்சிகள் மற்றும் பல அரசியல் இயக்கங்கள் நிகழ்த்திய பல போரட்டங்கள் நினைவுக்கு வருகிறது. தமிழகம் தன் சாதிக்கலவரங்களின் பொழுதும் மதக்கலவரங்களின் பொழுதும் ராணுவத்தின் வெறியாட்டத்தைக் கண்டிருக்கிற படியால் ராணுவம் இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கும் என்பதை உணரமுடியும்.  ஒரு  காலகட்டத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திராகாந்தி அம்மையார் 84ல் சுட்டுக் கொல்லப் பட்டபிறகு அன்றைய சூழலில் உலகெங்கும் பெரிய அளவில் அரசியல் கொலைகளுக்கு வித்திட்டது என்று சொல்லலாம். பழிக்குப் பழி வாங்கு வது என்பதான மாபெரும் அரசியல் தலைவர்களைப் பிரதமர்களை பழிவாங்குவது என்கிற அரசியல் பாதகத்தை நிகழ்த்துகிற விதமாகவே அன்றைய சூழலில் அறியப்பட்டது. அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அன்றைய தினம் நாடெங்கிலும் சீக்கிய மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்கள் படுகொலைகள் பயங்கரம். கோவையில் அவர்களுக்குரிய வீடுகள் கடைகள் டயர்கடைகள் எல்லாம் பற்றியெறிந்த காலச்சூழல்கள் நினைவுக்கு வருகிறது. எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு பயங்கரத்தைக் காண்பது என்பது சாதாரணமானது அல்ல.. பொதுவாக எல்லைப் பிரதேசங்களில் மலைப்பகுதிகள்,தீவுகள். பெரும் வனப்பகுதிகள் ஒட்டியிருக்கிற கிராமத்து மக்கள்தான் அதிகமாக அதிகாரத்தின் கீழ் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய எல்லையோர கிராமங்கள் கடற்கரைப் பகுதி மக்கள் இளையவர்கள் சிறுவர்கள் சிறுமிகள் விசாரணைகள் என்கிற அளவில் துன்புறுத்துப்படுவதை பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் மட்டுமல்ல அத்துனை விடுதலைக்காலங்களிலும் இந்த நிலங்கள்தான் இந்த மக்கள்தான் துன்புறுத்தப்படுவதை தமிழ்நதியின் நாவல் அறுதியிட்டுக்காட்டுகிறது.
             ராஜீவ்காந்தி படுகொலைப்பிறகான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை அதுபோல கொலைக்கும் முந்தைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்குள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் தங்கள் இலங்கைத் தமிழ்மக்கள் மற்றும் விடுதலை இயக்கங்கள் போராளி இயக்கங்கள் பற்றிய கருத்தாக்கங்கள் மாற்றம் பெற்றதை அறிவோம். பார்த்தீனியம் நாவலில் இந்தக் காலத்தின் நிழல்சாட்சியாக தொடர்ந்து வருகிறது. நாவல் குறிப்பிடுகிற காலத்தை நன்கு அறிந்தவனாக இருந்த படியாலும் இங்கு நிலவிய அரசியல் சூழல்களின் பொழுது அரசியல் களத்திலிருந்தவன் என்கிற முறையிலும் இந்த நாவலின் கதாபாத்திரங்க ளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கையின் தமிழர்கள் பெரும்பகுதி வசித்த பகுதிகளின் அவர்கள் தொழில்,கலாச்சாரம், பண்பாட்டு அளவில் பெரும் புகழ்பெற்று வாழ்ந்த வாழிடங்கள் அனைத்துமே அழித்தொழிக்கப்பட்ட காட்சிகளை தமிழ்நதி தன் துயர்மிகு வரிகளில் எழுதிச் செல்கிறார்.
             யாழ்ப்பாணம்,கண்டி,திரிகோணமலை,வவுனியா,யானை இரவு, பகுதிகளின் முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலைபற்றிய விவரணைகள் மற்றும் நாவல் மாந்தர்களின் இலங்கைத் தமிழ் உரையாடல்கள் எல்லாம் இலங்கைத் தீவில் நாம் அமைதியின் பொருட்டு சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகிறது. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கங்கள் உள்பட மற்ற போராளிப்பிரிவு களின் ஆயுதங்கள் ஒப்படைப்பு காலத்தையும் பேசுகிறது. பலவகையான கருத்துப் போராட்டங்கள், எதிர்நிலைக் கருத்துக்கள் இருந்த நிலையை கதா மாந்தர்கள் வாயிலாப் பேசுகிறார் தமிழ்நதி. தமிழகத்தில் கூட அரசியல் இயக்கங்கள் “இந்திய ராணுவமே இலங்கையிலிருந்து வெளியேறுஎன்னும் போராட்டத்தை நிகழ்த்தினார்கள். பொது அரசியல் அரங்கங்களில் இலங்கையில் நிகழ்ந்து வந்த அமைதிப்படையில் செயல்பாடுகளைக் கண்டித்தார்கள். இவையெல்லாவற்றும் விலையாக இந்தியாவின் ராஜீவ் காந்தி 1991 ல் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டபிறகு இலங்கையின் நிலவரங்கள் சர்வதேச அளவில் சீர்கெட்டது மட்டுமல்ல..ஒரு கருத்தாக இலங்கை சம்பந்தமான பிரச்சனையில் இந்தியாவின் சரியான நிலைபாடுதான் என்னும் கருத்து உருவாகிவிட்டது. ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்த பாதகச்செயலைக் காங்கிரஸ் அரசாங்கம் தன் சொந்த இழப்பாக கருதியதின் காரணமாக 1991 லிருந்து இலங்கை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது.அதுமட்டுமல்ல எல்லாப் போராளிக்குழுக்களும் சிதறிப்போனதைக் காலமும் இந்த நாவலும் அடையாளங்காட்டுகிறது.
      இன்றளவும் இலங்கைப் படைப்பாளர்களால் பலவித கருத்து முரண்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். இலங்கைக்குள்ளே அளிக்கப்படும் சிற்சில அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு சிங்க ளர்களுடன் இணைந்த பகிர்மானங்களுடன் வாழ்வது என்னும் ஒரு கருத்தோட்டமும் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்னும் கருத்துடனும் வாழ்கிறார்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் அளவில் தன் தாய்நாட்டிற்கு எந்த அளவிலும் உதவிவிடமுடியாத வண்ணம் அவர்கள் அடைக்கலாமாகியிருக்கிற நாட்டின் கெடுபிடிகளை யும் பொறுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. இலங்கை நாட்டின்  தேசியச் சூழல்களில் எதிர்பாராத நிலையாக அமைந்தது என்னவெனில் பத்து ஆண்டுகள் இந்தியாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்ததுதான். அது மட்டுமல்ல. இலங்கைக்குச் சாதகமாக இருந்த சூழல்கள் என்பது 89-91 வரையிலான திமுக அரசும் மத்தியில் நிகழ்ந்த விபி சிங் தலைமையிலான அரசும்தான் இந்தக்காலகட்டத்தைப் பயண்படுத்தியிருக்க வேண்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அதிக அளவில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் இயக்கச்செயல்பாடுகளும் இந்திய அரசால் திமுகவின் அரசியல் நிலையைத்தகர்க்கும் விதமாக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக வின் ஆட்சி கலைப்பை அடுத்து அரசியல் சூழல்களால் தமிழ்நாடு கொந்தளிப்பான நிலையில் தவித்தது. இதற்கு முன்பாக 87 ல் எம் ஜி ஆர் மறைவும் இலங்கை மக்களுக்குப் பெரும் சரிவைக் கொடுத்துவிட்டது. அதுவரையிலும் எல்லா  வகையான உதவிகளும் ஓரளவிற்கு கிடைத்துவந்த உதவிகள் துண்டிக்கப்பட்டது.
        எம்ஜிஆர் மறைவிக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைய ஏறக்குறை 89 வரை ஜனாதிபதி ஆட்சியில் அதிகளவு ஊடுறுவல் மற்றும் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை மீறிய செயல்பாடுகளை மிகவும் சரியாக கணித்த புலிகள் தங்களின் செயல்பாட்டில் மிகமிக தவறான முடிவான அந்தப் படுகொலையை நிகழ்த்த எல்லாமுமெ சர்வநாசமாக முடிந்து போனது. பிறகு அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் தமிழகத்தில் அதிமுகவும் புலிகளின் ஊடுறுவல்கள் மற்றும் இங்கிருந்து சென்று கொண்டிருந்த எல்லாவிதமான அரசியல் மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் இழந்துவிட்டது மட்டுமல்ல தமிழ்மக்களும் மிக கொடுமையானத் தாக்குதல்களைச் சந்தித்தார்கள். எப்படி இந்திராகாந்தி 1984 ல் சீக்கியப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டத ற்கு பழிக்குப்பழியாக சீக்கியர்கள் மீது காங்கிரஸ்காரர்கள் தாக்குதல்கள் தொடுத்தார்களோ அதேபோல இங்கு அனைத்துத்தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே என்று கருதப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள்.. தமிழ்நதியின் நாவலின் பின்னணி இந்தப் பகுதிகள்தான்.
              ஏற்கெனவே பற்பல படைப்புகள் வந்திருந்தாலும் தமிழ்நதி எடுத்த இந்த களம் முக்கியமானது. இவையணைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டியது. முழுவதும் பழிஅரசியல் சூழப்பட்டுவிட்ட இந்தியத் தமிழ்நிலம் மட்டும் இலங்கைத் தமிழ்நிலம் இவ்விரு நிலங்களின் மனிதர்களின் நியாயமான உணர்வுகள் பேணப்படவேண்டும். அவர்களின் வாழ்வு புணரமைக்கப்படவேண்டும் இன்றைய சூழல்கள் மிகவும் சரியாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. வேறுவழியில்லை. இந்த இடைப்பட்ட காலங்களில் நடத்தப்பட்ட தமிழ்மாகாணத்தேர்தல்கள் மற்றும் வழங்கப்பட்ட சிற்சில அதிகாரப் பகிர்வுகள் இலங்கையில் தற்காலிகமாக வெடிச்சத்தங்கள், பயங்கரங்கள் ஏறக்குறையக் குறைந்திருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறைகள் முள்வேலி முகாம்களில் மற்றும் அகதிகள் முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அவர்களுக்குரிய பகுதிகளில் மறுகுடியமர்த்தல்களுக்கான முயற்சிகள் நடைபெறுகிறது.  இந்த அளவில்தான் இலங்கையில் தமிழ்க் குடும்பங்களின் வாழ்வைப் புணரமைக்க முடியும். அயலகங்களில் வாழ்கிற லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் மக்களின் உணர்வுகளும் கோரிக்கைகளும் அபிலாசை களும்கூட அதுவேதான். ஒவ்வொரு இழப்பிற்குமான பழிக்குப்பழி என்பதாக அரசியல் பகைகளின் தட்பவெட்பச் சூழல்கள் தணிந்திருக்கிறது.
        1983-91 களின் இலங்கைச்சூழல்கள் இலங்கையில் இல்லை. அதுபொலவே தமிழகச்சூழல்களிலும் அதே நிலையில்லை. 91ல் அறிமுகப் படுத்தப்பட்ட காங்கிரஸ்-மன்மோகன்சிங் புதியப் பொருளாதாரக்கொள்கை களையும் நாம் கணக்கிடவேண்டும். இந்த அயலுறவுக் கொள்கைகளால் தேசிய இனங்கள் அழியத்துவங்கியது. உலக வர்த்தகங்களுக்குள்ளாக தேசியப் பிரச்சனைகள் அழுத்திக் கொள்ளப்பட்டது. வளரும் நாடுகள் தேசிய இனப்பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கிற நாடுகளைச் சுரண்டத் துவங்கியது. இதன் விளைவாகவே கீழ்த்திசைநாடுகளின் வளங்கள் சுரண்டப்படத் துவங்கியது. இதில் சிக்குண்ட நாடாக இலங்கையும் வளைக்கப்பட்டது. இலங்கையிலிருந்து பல நாடுகளிலுக்கு மக்கள் புலம் பெயர்ந்தார்கள். ஒரளவு வசதிவாய்ப்புகள் இருந்தவர்கள் வெளியேறினார்கள். அயலில் இருந்தவர்கள் தங்கள் உறவுகள் ஈழத்தில் படுகொலையாவதைச் சகிக்க முடியாதவண்ணம் தங்கள் படைப்புகளில் எழுதிக் கொஞ்சம் ஆசுவாசமானார்கள்.
            தமிழ்நதி உள்ளிட்ட இலங்கைப் படைப்பாளர்கள் தங்கள் எழுத்துகளில் இலங்கைத் தமிழ்த்தேசத்தின் கலாச்சாரச் செழுமைமிக்க வாழ்வை எழுதிவருகிறார்கள். விவசாயநிலங்களில் வெடிகள் புதைக்கப்பட்டதையும் பதுங்கு குழிகளில் வாழப்பழகிய காலத்தையும் பதிவாக்கியிருக்கிறார்கள். இயக்கங்களிலிருந்தவர்கள் இயக்கங்களிலிருந்து வெளியேறி ஜனநாயகத்தன்மைக்கும் பொதுவெளிக்கும் வந்தவர்கள் தகவல் இணையத்தொழிற்நுட்பச் சூழல்களைப் பயண்படுத்தி தங்கள் வாழ்வின் பகுதிகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
         தமிழ்நதியின் “பார்த்தீனியம்குறித்தும் ஒரு பதிவு வருகிறது. இந்திய அரசு அளித்த கொடைகளில் ஒன்று அமைதிப்படை. அது போல இந்தவிஷப் பார்த்தினியத் தூவல் என்கிறார். இலங்கையின் விவசாயத்தை முற்றிலுமாகப் பாதித்த வரலாற்றைப் பதிவு செய்கிறார் தமிழ்நதி. தமிழ் நாட்டிலும் அத்தகைய நிலையைப் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. பார்த்தீனியச் செடிகள் இலங்கையின் வளமான விவசாயத்தை அழித்த பதிவுகளை முன்வைக்கிறார். நாவலில் முன் பின் அத்தியாயங்களில் இலங்கையின் நிலப்பரப்பை மிக நேர்த்தியாக தத்ருபமாகப் பதிவு செய்கிறார். தமிழ்ப்பெயர்களில் அமைந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், நிலப்பரப்பின் வசதி கொண்டு போராளி அமைப்புகள் இயங்கிய விதம். அவர்கள் இலங்கை சிங்கள அரசு மற்றும் அமைதிப்படை ராணுவ வீர ர்களுடன் அகப்படும் சூழல்கள், விசாரணைகள், துன்புறுத்தல்கள், பாலியல்  சித்ரவதைகள். உள்பட காலக்கிரமமாகப் பதிவு செய்திருக்கிறார். நமக்குச் செய்திகளாகவும் பரிதாபத்திற்குரியதாக அறிந்த காட்சிகளுக்குள்ளும் சம்பவங்களுக்குள்ளுமாக அந்த தமிழர்களின் நிலையை ஒரு படைப்பாளியின் பொறுப்பு எனும் தார்மீகத்துடன் தமிழ்நதி பதிவாக்கியிருக்கிறார்.
      1983-89-91 வரையிலான இனப்போர்கள் களப்பலிகள் பற்றிய மிக நுட்பமான களஅரசியல் பதிவாக இந்த நாவல் அமைகிறது. இந்தக் காலத்தில் வாழக் கிடைக்காதவர்கள் புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இந்த நிலையே புத்தம் சமணம் பற்றிய எதிர்நிலைவாதங்களுக்கும் வித்திட்டது எனலாம். தமிழ்நதியின் இந்த ஆவணப்படுத்தல் மிக முக்கியமான படைப்பு என்று சொல்ல வேண்டும். இன்னும் எழுத எழுத தீராத காத்திரங்களை உடைய காலம்.
       காதலை நட்புணர்வை நண்பர்களை குடும்ப உறவுகளை ரத்த உறவுகளின் நிலையை தமிழ்நதியின் நாவலில் பதிவு செய்திருக்கிறார். எல்லா உறவின் கமறலையும் பிரதியுபகாரங்களையும் பேசியிருக்கிறார். போர் இலக்கிய வகைமைகளில் காதலும் பிரிவும் ஒரு தலைக்காதலும் இழப்புகளும் புலம் பெயர்தலும் பேசப்பட்ட பிரதிகளில் பார்த்தீனியம் முக்கியமானது.  தமிழக நிலப்பரப்புகள் இந்தக் காலங்களில் செழுப்புடைய தாகவே இருந்த நாட்கள். எனினும் 83-90 களில் அருகிலிருந்த இலங்கையின் தமிழ் நிலங்கள் நேரெதிராக போர்க்களங்களாக இருந்தது. தமிழகத்தில் நடத்தப்பட்டப் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் வீடியோக் காட்சிளில்தான் கண்ணுற முடிந்த காலம் அது. மிகைப்படுத்தப்பட வேண்டியதைக் குறைத்தும் குறைக்கப்பட வேண்டியதை மிகைப் படுத்தியும் காட்டப்பட்ட நாட்கள். இந்தக் காலம் எங்களுடை பதின் பருவங்கள். சுயநினைவுள்ள காலம். தமிழ் மக்களுக்காக எல்லா திசைகளிலும் மருந்து துணிமணிகள் அகதி முகாம்கள் துவங்கிய நாட்கள். ஒரு இனத்தின் ஒரு உறவின் ஒரு பகுதி வேட்டையாடப்பட்ட காலம்.
இனி ஒரு போதும் எந்தச் சிறுபான்மை மொழி பேசும் இனத்திற்கும் இத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இப்படைப்புகள் எழுதப்படுகிறது. அதிகாரத்தைப் பற்றிய பிறகு அதை எந்தச் சூழலிலும் இழந்து விடக்கூடாது அப்படியான அதிகாரம் ஒரு மக்கள் குழுவிற்கு வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை அளிக்கும் அதை நாம் பறி கொடுத்துவிட்டால் பிறகு மேலும் பல நூற்றாண்டுகள் கழித்தே அது நம் நம்மிடம் வந்து சேரும்..நாம் நம் மக்கள் இழந்துவிட்டார்கள்..அவ் வதிகாரம் வரும் வரையிலும் காத்திருப்போம்..வானதி,பரணி,தனஞ்செயன்,நித்திலன்., ஜீவானந்தம்,தனபாக்கியம் அருமைநாயகம் செல்வன் தயாபரன் உள்ளிட்ட அந்த  தீவின் படகுத்துறைகள், இரவுகள் பகல்கள் புயற்காலங்கள் என்று இந் நாவலின் களங்கள் ஒரு சுற்றுலாத் தோழன் போல நகர்த்திச் சென்று விளங்க வைத்திருக்கிறார்.
இன்னும் எழுதப்படவேண்டிய சங்கதிகள் வலிகள் உள்ளதை தமிழர்கள் வாழ்க்கை பேசுகிறது. தமிழ்நதியின் கவித்துவமிக்க எழுத்து நடையும் இலங்கைத் தமிழ் உரையாடல்களும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. உலக மொழிகளின் இலக்கியப் படைப்புத் தரத்திற்கு ஈழப்படைப்பாளர்களும் தமிழில் எழுதப்பட்டு வருகிறது என்பதற்கு இந்தப் படைப்பும் சாட்சி. தமிழ் மக்கள் வாழ்க்கை மட்டுமல்ல சிறுபான்மை இனங்களுக்கும் தேசிய இனங்களுக்குமான விடுதலைப் பார்வையை இந்த எழுத்து உருவாக்கியிருக்கிறது. அவருடைய கம்பீரமான தமிழ்ப் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு எந்த வகையிலும் கையாலாகாத ஒரு வாசக மனதின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
வெளியீடு- பார்த்தீனியம்- ஆசிரியர்- தமிழ்நதி ஏப்ரல் 2016
நற்றிணைப் பதிப்பகம் பி லிட்
எண் 6-84 மல்லன் பொன்னப்பன் தெரு

திருவல்லிக்கேணி சென்னை-5