திங்கள், 2 ஜனவரி, 2017

Veyyil poemsகொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் வெய்யில் கவிதைத் தொகுப்பு குறித்து..

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
வெய்யில் கவிதைத் தொகுப்பு குறித்து..
         கவிதையில் உருவகம் செய்யப்படுகிற சித்தரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கிற படிமங்கள். கவிதை ஒவ்வொரு பதின்ம காலங்களில் கலை அழுத்தம் கொண்டிருப்பவை. 2010 ஆண்டுகளுக்குப்பிறகான கவிதை இயக்கம் முற்றுமையிலிருந்து பீறிட்டு எழுபவை. உலகளாவிய இணையச் செயல்பாடுகள். உலகளாவிய மனித உரிமை மீறல்கள். தன் உணர்வு சார் கவிதைகள் உரிமை மீட்புக் காலத்தின் கவிதைகள் என பொது உலகக் கோரிக்கைகள் விழுமியங்கள் பதிவாகிற நிலையில் தமிழ் நவீனக் கவிதைகள் எழுதப்படுகிறது.
      கவிதை தனக்காக ஒரு அகப்பதிவு வாதத்தையும் தர்க்கத்தையும் நிகழ்த்துகிறது. அது ஒரு தற்காலிகப் பிரகடனம் அல்ல. இந்தப் பழமைச் செயல்பாடுகளை இச்சமூகம் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமே என கவி பிரயாசைப்பட்டுக்கொள்கிற மனப் பதிவு வாதமும் செய்கிற தொழிலாகவும் உள்ளது.
        வெய்யில் கடந்த ஆண்டுகளில் முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கிறார். இந் நாள் நிலத்தின் மனிதர்களின் அரசியல் பற்றியும் அரசியல் போதாமை பற்றியும் எழுதியிருக்கிறார். பருவகாலத்தின் பிரழ்வுகளினூடே நீண்டு கொண்டே வரும் பெரும் அறிவு வரட்சியையும் குறிப்பிடுகிறார். பொருளாதாரத்தின் அடித்தட்டு நிலையிலிருக்கிற மனித மன உணர்வுகளை எழுதும் அவர் உளவியல் சார்ந்த அகவய வாதத்தையும் எழுதுகிறார்.
          கவிஞனின் அகத்தூண்டுதல் புறவய யதார்த்தச் சூழல்களால் உருவாகிறவை. அவனுக்குள் ஏற்கெனவே படிந்து போய்விட்ட இசைக் கோர்ப்புகள் வழியாக புதிய புதிய வரிகளைச் சேர்த்து இயற்கை ஓசைகளுடன் இணைத்து அழுத்தம் கொடுத்துக் கொள்கிறான். நம் காலத்தின் வாழ்க்கைக்கு பின்னணி இசைக்கலைஞர்கள் உடனே வந்து கொண்டிருக்கவேண்டும். அல்லது நாமே ஒரு பின்னணிக் கலைஞனாக மாறிக்கொண்டாக வேண்டும். வெய்யிலின் சிறந்த கவிதை ஒன்று.. இதே நேரம் ஞாயிற்றின் கீபோர்டு பசியை அது என்னமாதிரியான பசி என்பதைக் குறித்து நீண்ட விளக்கங்களுடன் பைபிளின் ஒரு வரி ஒன்று தாஸ் கேப்பிடலின் வரியைப் போன்றே உள்ளது என்கிறது. வெய்யிலும் குளிரும் கம்போசருக்கு அடங்காத மீறலை ரசிக்கிறது.
      
காற்றெல்லாம் உந்தன் கீதம்....

புதுவாழ்வு சதிராடுது
நளிர்ப்புகையினூடே
மீவேகத்தில் வருகிறது ரயில்
அந்தப் பேதையின் பாவாடையோ
தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது
அவனும் எவ்வளவோ முயல்கிறான் முடியவில்லை
பாலு கத்துகிறார் ராஜா.............?’
இசைக்கலைஞர் தனது மந்திரக்கோலைக் கீழிறக்குகிறார்
ரயில் நின்றுவிடுகிறது
எஃகுச் சக்கரங்கள்
மத்தாப்பைச் சிதறுகின்றன

சொல்லவோ ஆராரோ
ஆம் அம்மா! அந்த ரயில்தான்
உனக்கும் எனக்குமிடையே நீண்டு தடதடக்கும்
தொப்புள்கொடி
வலிக்கிறது ராஜா...வெட்டிவிடுங்கள்
ரணமான அவளின் உயிர்ப்பாதையில்
வேங்குழலின்  சாற்றைப்பூசிக்கொண்டிருப்பது யார்?  பக்-35

                  தனிமனிதனின் உளவியல்சார் கேள்விகள் அலைக்கழிக்கும் வாழ்வு சமகாலத்தின் இருப்பு. இலக்கியப்பிரதிகள் வழியாகத் தீர்க்க முனைவதே முக்கியமானது. வெய்யில் கவிதைகள் பிரதியுபகாரங்கள் கோராமல் நவீன வாழ்க்கையின் இருண்மைகளைப் பேசுகிறது. தொகுப்பில் உள்ள பல கவிதைகள் பிரச்சனைப் பற்றி ஆராயமல் அதன் காலத்தைப் பேசுகிறது. காட்சிகளும் சம்பவங்களும் பருவகாலத்தின் வெளிச்சங்களை அள்ளி வருகிறது. நம் சமகாலத்தின் காலவெளியில் புதிய புதிய நிலங்களும் நிலத்தின் அமைப்புகளும் மாறிவிட்டது. மனித உறவுகளும் இயற்கைக் காணுயிர்களும் மாறியிருக்கிது. மனித உடலின் வசீகரங்களும் எதிர்ப் பாலின ஈர்ப்புகளும் அதிகமாயிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்த மனித உடலின் வண்ணம் அமைப்பு ஆகுரிதி அனைத்தும் மாறியிருக்கிறது. திடப்பொருள்களின் மீது கவிழ்ந்த விருப்பங்கள் விருப்பங்களை அடைய எடுக்கும் பல விபரீத முயற்சிகள் அனைத்தும் புதுமையானது. வெய்யில் கவிதைகளில் முழுக்கவும் இந்தப் புதிய சித்திரங்களை கேலியும் விமர்சனமுமாக முன்வைக்கிறார்.
          இந்தக் காலத்தில் வீடுகளைப் போலவே உள்ளத்தின் இடங்களும் குறுகளாகியிருக்கிறது. நாமும் நம் ஆசைகளைக் குறுக்கிக் கொள்ளப் பழகச் சொல்லித் தத்துவங்கள் பேசுகிறது. செயல்படாத பணப்பெட்டிகள் அட்டையை உள்ளே சொருகினால் வெளியேற்றுகிறது ஒரு புதிய வேதப்புத்தகத்தை. இதுநாள் வரையிலும் பொருளியல் போதனைகள் யாவும் சாம்பலாகிப் புகையில் கரைந்து போய்விட்டது. மறுபடியும் இன்மையின் உலகத்திலிருந்து நாணயங்கள் பறித்து வாழ்கிற சூழல். ப்ராய்ட் உடலில் ஏற்படும் உணர்வு மாற்றங்களை மற்றும் பேசவில்லை. தனிமனிதனின் உணர்ச்சிகள் அவனின் குலக்குழு மற்றும் கூட்டுக்குழு உணர்வுகளின் தன்மைகளையும் பேசுகிறார். ப்ராய்ட் பற்றிய மூன்று கவிதைகளும் அவர் இன்றும் தேவைப்படும் அவசியத்தை உணர்த்துகிறது. விடைக்கும் நரம்பு துடிக்கும் வரை அவருடைய சொற்கள் இருக்கும்.


ஃப்ராய்ட்-3
வாளை விழுங்கி பூவை எடுத்தான்
மற்றொருவன்
பூவை விழுங்கி வாளை எடுத்தான்
ஃப்ராய்ட்-சபாஷ் சொன்னார்
பிறகு
பார்வையாளர்களை நோக்கி
“இதைக் கனவில் யாரும் முயற்சிக்க வேண்டாம்
குறிப்பாக முதலாவதை“
அவர் கண்கள் கருணையால் பளபளத்தன
தொனியில் ரகசியமிருந்தது
எதையும் புரிந்துகொள்ளாதது போல
செருமிக்கொண்டனர் மக்கள்..      பக்-67

       வாளை விழுங்கிப் பூவை எடுப்பதை கனவிலும் முயற்சிக்க வேண்டாம் என்பது நிஜவாழ்வில் அக் காரியத்தைச் செய்யுங்கள் என்பதுவே அதன் பொருள். இதன் பொருளில் ஒரு நிஜ வாழ்வு நடந்தேறியதை “ஊழி கடந்து வரும் “பிரெட் பாக்கெட்..!“ கவிதை உறுதி செய்கிறது. சென்னை மூழ்கிக் கொண்டிருந்த பெரும் மழையிரவின் சித்திரங்கள் இதன் பொருட்டு நினைவில் தள்ளாடுகிறது. புகைப்படக் கலைஞனின் காமிராவிலிருந்து மழைச்சித்திரங்களும் மிதக்கும் குடும்பங்கள் பிற மக்களுக்காக அறிவித்தார்கள் நாங்கள் நலமாக இருக்கிறோம்..மகிழ்ச்சியாக இருக்கிறோம். உங்களிடம் தெரிவிப்பதற்காக உயிரோடு வந்துள்ளோம் என்னும் காட்சிகள்.
        வெய்யில் தனது அருபதுக்கும் மேற்பட்ட கவிதைகளில் வெள்ளி வீதியாரின் நாப்கின் பற்றியும் எழுதியிருக்கிறார். மனித மனங்களின் கீழ்மை மேன்மை பற்றியும் பதிவு செய்கிறார். பல நீள் கவிதைகள் சொல்லும் பால்யக் கதைகளும் குறுங்கதையும் முக்கியம்.“ அறத்தடி நீர்,“மீ எனும் பனந் தீம்பிழி“ சூல் வயிற்று சித்திரம்“கஞ்சா ஆடு“ “கள்ளக்காதலின் அமுது“ உள்ளிட்ட கவிதைகள் புதிய களம், அகவயத் தூண்டலைக் கொண்ட கவிதைகள் தொகுப்பின் முக்கியமான கவிதையுடன் முடிக்கிறேன் வாழ்த்துக்கள் வெய்யில். தாமிரபரணியும் அதில் நிறைந்திருக்கும் எருமைகளுக்கும் பனைகளுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழக ஆறுகளை இனி கவிஞர்கள் சமர்ப்பணம் செய்து நினைவுட்டிக்கொண்டே இருப்பது நலம். வரைபடங்கள் வரையும் குழந்தைகள் ஆறு பற்றிக் கேட்டால் எதைக்காட்டுவது. பனை மரங்களும் சவுக்கு மரங்களும் தேவையிருந்த போது வளர்த்தோம் அந்நியத்தன்மையும் குறுகத் தரித்துக்கொண்டு வாழக் கற்றுக் கொண்ட பொறுப்பும் பரந்த உலகத்தைப் பார்க்க வைக்கவில்லை. கவிஞர்கள் உலகை விரித்து ஆகாசத்துடன் முடிச்சிடட்டும்
ராச்சடங்கு
ஆகாசமெங்கும் இரவாடிகள் திரிகின்றன
பழவாசனையின் காற்று நிறைகிறது
செழித்த நிலம் எங்களுடையது
வெடித்திருந்த பருத்தியில் கொஞ்சமெடுத்து
பூப்பூவாயிருக்கும் தேமல் மிகுந்த
முன்தொடையில் வைத்து உருட்டித் திரியாக்குகிறாள்
நான் கொஞ்சம் எண்ணையிடுகிறேன்.
பொங்கும் நெருப்பை திரியின் நுனிநாக்கில் இடுகிறோம்.
சூழ எழுகிறது விரக வாசனை
இப்படித்தான் ராத்திரி வயல்களில்
நிறைய தீபங்களை ஏற்றியபடியிருந்தோம்.---பக்55

வெளியீடு

மணல்வீடு
ஏர்வாடி
குட்டப்பட்டி அஞ்சல் மேட்டூர் வட்டம்

சேலம் மாவட்டம்- 98946 05371-விலை-ரூ 80-