ஞாயிறு, 11 ஜூன், 2017



பிரபஞ்சன் கட்டுரைகள்


 


பிரபஞ்சன் படைப்புகள் குறித்த அமர்வை ஏற்பாடு செய்திருக்கும் ஆம்பல் இலக்கியக் கூடல் நண்பர்கள் படைப்பாளர்களுக்கு நன்றி..தவிர்க்க முடியாத என் குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக இந்த அமர்வில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருத்தம் கொள்கிறேன்..பிரபஞ்சன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களுடன்..


“தாழப்பறக்காத பரத்தையர் கொடி“-பிரபஞ்சன் கட்டுரைகள் பற்றி


 


இந்தக் கட்டுரைத்தொகுப்பில் பதினேழு கட்டுரைகள் அடங்கியிருக்கிறது. என்பதை விடவும் தமிழ் நிலத்தின் கடந்த ஐம்பது ஆண்டுகளின் சமூகப் பொருளியல் வரலாற்றுப் பதிவுகள் அடங்கியிருக்கிறது எனலாம். ஒரு படைப்பாளி எழுதுகிற பத்திகளும் கட்டுரைகளும் அனுபவங்களும் படைப்புகள் தான். பிரபஞ்சன் கட்டுரைகளில் சிறுகதைகளுக்குரிய நடையும் வசீகரமும் தன் அனுபவங்களை வாசகனுடன் இயல்பாகப் பகிர்ந்து கொள்கிற முயற்சியுமாக இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கிறது.


“தாழப்பறக்காத பரத்தையர் கொடி“ கட்டுரைத்தொகுப்பினுள் அடங்கிய கட்டுரைகள்


1 பகவத் கீதை பாடமும் பலான படங்களும்


2 குமுதத்தின் கதை


3 இன்னும் வராத தொலைபேசி


4 பானு உன் புத்தப்பை அண்ணனிடம் இருக்கிறது


5 தாய்ப்பாலும் தென்னம்பாலும்


6 இரண்டு பிரஞ்சுப் பெண்கள்


7 மது நமக்கு மது நமக்கு மது நமக்கு உலகெல்லாம்


8 தெருப்பாடல்கள்


9 ஒரு அரவாணியின் முதல் நாவல்


10 மனதில் புகுந்த்து மா மத யானை


11 4 பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும்


12 அதிகாரத்திற்கு எதிரான சில குரல்கள்


13 அபாயகரமானது கவிதை


14 காடுகளை மனக்கும் முகைப் பூக்கள்


15 உலகத் தமிழ் மாநாடு செய்ய வேண்டியது என்ன


16 பரத்தையரும் கலைஞர்களும்


17 தாழப் பறக்காத பரத்தையர் கொடி


         தலைப்புகளின் வழியாகவே நாம் கட்டுரைகளின் உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்.


       தமிழ்ச்சமூகத்தின் படைப்பிலக்கியம் ஆங்கிலம் பிரஞ்ச் மொழிகளின் வழியாகவும் பரந்து பட்டு விரிந்த களமாக இருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கு புதுவையும் பிரஞ்ச் கலாச்சாரமும் பெரிதும் பயண் பட்டிருக்கிறது. இந்த மரபும் ஏதேச்சையாக அமைந்து விட்ட காலணியாதிக்கச் சூழலும் காரணமாகிறது.


பிரபஞ்சனின் கட்டுரைகள் கடந்த ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிப்பு ஊடகங்களிலும் இலக்கியப் பிரதிகளிலும் வலம் வருகிறது. கலை இலக்கியம்,சினிமா,நாடகம்,அரசியல்,சமூகவியல் கூறுகள், பண்பாட்டுக் களம்,மரபிலக்கியக் கூறுகள் உள்பட அனைத்து வகைமைகளிலும் தன் பார்வையை தனது தனித்த பதிவுகளை அவர் இடையறாது எழுதிப் பதிவிடுகிறார். தன் வாழ்நாளின் முழுமையை ஒரு படைப்பாளி தன் காலத்து சமூகத்திற்கு கொடையாக்குகிறார் என்றால் இச்சமூகம் பெரும் பேறு பெற்ற சமூகம் என்றே கொள்ளவேண்டும்.


முதலிரண்டு கட்டுரைகளில் தான் பணியாற்றி குமுதம் இதழின் பின்புலம் மற்றும் அதன் வாசகத் தன்மை பற்றிய அபிப்ராயங்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். குமுத்த்தில் நவீன இலக்கியப் படைப்பாளர்களின் பல படைப்புகள் வெளியாக காரணமாக இருந்துள்ளார். அந்த இதழுக்கு இலக்கியத்தரம் மேம்பட தனது உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். சுப்ரமணியராஜ்,மாலன்,பால்யு உள்ளிட்ட இலக்கிய நண்பர்கள் பற்றிய குறிப்புகள் முக்கியமானது.


பிரபஞ்சன் கட்டுரைகளை பல வகைமை இதழ்களில் வாசித்து இருக்கிறேன். பல்சுவை இதழ்களிலிருந்து புலனாய்வு அரசியல் வார ஏடுகளிலிருந்து தீவிர இலக்கிய இதழ்களிலிருந்து சிறுபத்திரிக்கைகளி லிருந்து நாளேடுகளின் தனித்த பிரத்யேகமான கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அதே போன்றே விழா மலர்கள் ஆண்டுமலர்கள் சிறப்புமலர்களிலும் பிரபஞ்சன் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அந்தக் கட்டுரைகள் பலது நூலாக்கம் பெற்றுள்ளது. சில கட்டுரைகள் வாசகர்களின் மனதில் தங்கியிருக்கிறது.


        அரவாணியின் முதல் தமிழ்நாவல் எனும் வகையில் பிரியாபாபு எழுதிய மூன்றாம் பாலின முகம் நாவல் பற்றிய அறிமுகம் முக்கியமான கட்டுரை. மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய படைப்பிலக்கியத்தின் அம்சம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். விளிம்பு நிலை மனிதர்களுக்குக் கிட்டுகிற மரியாதையும் சமூக அந்தஸ்த்தும் கிட்டாத அந்நிலை மக்கள் பற்றி எழுதிய நாவலை மூத்த படைப்பாளர் எனும் முறையில் அணுகியிருப்பது வரவேற்கத்தக்கது. பிற்பாடு அந்த நாவல் பரவலாகவும் பேசப்படக் காரணமானது.


       தனது மதுப் பழக்கம் பற்றி வெளிப்படையாகப் பேசும் கட்டுரை மிகவும் சுவராசியமானது. ஒரு மரத்துக் கள் மீதான பரிச்சயம் பற்றிச் சொல்கிறார். ஒரு மரத்துக்கள்ளை ஒரு மண்டலம் இருமண்டலம் சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படுகிற வலிமையைச் சொல்வது ஆச்சர்யம்தான். மனித ஆன்மாவிற்குத் தேவைப்படுகிற போதையை இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் பேசியிருக்கிறது என்பதை சுட்டுகிறார். மது பற்றிய அனுபவங்கள் படுசுவராசியம். வெள்ளைக் கார துரை துய்மா கொண்டு வந்த சட்டத்தினைப் பதிவு செய்கிறார். 1741 பிப்ரவரி 18 வெள்ளைக்காரர், தமிழர் மற்றும் கறுத்த சனங்களுக்கு அறிவிக்கிறதாவது. மார்ச் மாதம் முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும் பிராந்தி, சாராயம், கோவை சாராயம் லிக்கர் சாராயம் பத்தாவி சாராயம் கொழும்பு சாராயம் பட்டை சாராயம் போன்றவற்றை விற்றாலும் விற்பித்தாலும் ஆயிராம் வராகன் அபராதம் கொடுத்து ஒரு வருடம் காவலில் கிடக்கவேண்டியது..“ என்கிறது சட்டம். இந்தச் சட்டத்தை ஆறே மாத்த்தில் நம் மக்கள் தூக்கிக் கடலிலே வீசிவிட்டு குடிக்கத் துவங்கியதைக் குறிப்பிடுகிறார்.


        அதோடு தன் பால்யத்தின் சினிமா பார்த்த ரசனையையும் ஒரு நாளில் பல படங்கள் பார்த்த அனுபவத்தையும் பேசுகிறார்.


அவர் எழுத வந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறது. திராவிட இயக்கங்களின் வளர்ச்சியென்பது சினிமாவின் தாக்கத்தை வைத்து வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சன் அருபதுகளின் காலத்திய மக்களின் அறிவு போதாமை, கல்வியின்மை, சினிமா மீது கொண்டுள்ள அளப்பரிய ஆர்வம் பற்றியெல் லாம் தனது கட்டுரைகள் படைப்புகள் வாயிலாக பதிவு செய்திருக்கிறார்.  நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்டு வருகிற தடைகள். அதிகாரங்களில் இருப்பவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் விதி முறைகள் குறித்தும் சிந்தித்து எழுதியிருக்கிறார். பிரபஞ்சன் புதுச்சேரியை தமிழகத்தையும் ஒன்றாகவே பார்த்தார். புதுச்சேரி அரசியல் நிலவரம் நேரடியாக வித்தியாசம் மிக்கது. அங்கு மிகச்சாதாரணமாக கட்சி மாறுதல்களும் கட்சித்தாவல்களும் முரண்பாடுகளும் உள்ளதாகும். சமூக அரசியல் சூழல்களும் சமுகவியல் நிலைகளும் தமிழகத்திற்கும் புதுவைக்கும் மாறுபாடுகள் உண்டு. புதுவை அரசியல்வாதிகளின் வாழ்க்கை மிகமிக எளிமையானது. புதுவையின் மக்களும் இயல்பாகவே எளிமையும் பொருளாதார அடிப்படையில் சாதாரணமானவர்கள். ஆனால் தமிழகத்தின் அரசியல் நிலையென்பது முழுமையாக சாதியக் கூறுகளால் இயக்கப்படுபவை. பிரபஞ்சன் தனது எழுத்துக்களில் சாதிய அடுக்குகளை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்துள்ளார்.


       கட்டுரைகளின் தன்மை கூட சிறுகதைகளைப் போன்றும் குறுநாவல்களின் அளவு போலும் வாசிக்க வாசிக்க கவனம் கொள்ளத்தக் கதாக இருப்பவை. அவர் சூழ்நிலைகளைச் சித்திரிப்பதுவும் காட்சிகளையும் சம்பவங்களையும் சொல்லிவருகிற கோர்வையும் வாசகனை இயல்பிலேயே ஆழச் சென்று விடுவதற்கு வழி செய்கிறது. சாலைகள்,வீடுகள், சுற்றுப்புறங்களின் சத்தங்கள், அறைகள், அக்கம்பக்கத்து மனிதர்கள் அவர்களின் பொருளாதார நிலை, அவர்களின் மெல்லிய உணர்வுகள் முதற்கொண்டு மனிதாபிமான அணுகுமுறைகளின் படி ஒரு எழுத்தாளர் பதிவுசெய்யவேண்டியவற்றை நேர்த்தியாக எழுதியிருப்பார். ஒரு பாரா கேளுங்கள்.


“தெருவின் இரண்டு பக்கமும் முருங்கை மரங்கள். அவரவர் வீடுகளுக்கு முன்னால் வளர்ந்திருந்த முருங்கை மரங்கள் கே கே நகர் என்று சுருக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகருக்குள் மூன்று நகர்கள் இருந்தன. மூன்று பொருளாதாரத் தரத்தினர் வாழ்ந்த நகர்கள். தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழும் அல்லது கடன் அடைத்துக் கொண்டு சிரமப்படும் உயர் மற்றும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நகர். அரசுக் குடியிருப்புகளாலான நகர்.குடிசைகள் மற்றும் சின்னஞ்சிறிய கல்வீடுகள் கொண்ட ஒண்டுக் குடித்தனங்களால் ஆன தொழிலாளர்களின் நகர்..“ பிரபஞ்சனின் சமூகப் பார்வையை எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் கவனிக்க வேண்டிய பொறுப்பைச் சொல்கிற பத்தி இது. சென்னை போன்ற நகர்களில் தங்கி வாழவேண்டிய பத்திரிக்கைக்காரப் படைப்பாளர்களின் வாழ்க்கையை பிரபஞ்சன் பதிவு செய்திருப்பதை இலக்கிய உலகம் மறக்காது போற்றும். பணிச்சுமை அதிகமாக இருந்து வருமானமும் இருப்பிடமும் போதாமையாக இருந்து


கலையின் மீது உள்ள ஆர்வம் தூண்டத் தூண்ட சிந்தனையில் அணையாமல் எரிகிற நெருப்பைப் பற்றிக் கொண்டு பத்திரித்துறை படைப்பாளர்களின் வாழ்க்கையை பிரபஞ்சன் தன் ஆயுள் முழுக்கவும் எழுதிவருகிறவர்களின் முதன்மையானவர்.


          மேன்சன் அறைகள் குறித்தும் சென்னை வாசம் பற்றிய பதிவுகள் அவர் கட்டுரைகளில் அதிகம் இருக்கும். அறைவாழ்க்கை, வாழ்வு முழுக்கவும் பயணங்களால் மாறிவிட்ட நிலை பற்றியும் சுவை மிக்க எழுத்தாகப் பதிவு செய்திருப்பார்.


        நான்கு பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும் கட்டுரையில் தனது நாடகம் தன் அனுமதியின்றி எடுத்தாளப்பட்டது குறித்த தன் கடுமையான எதிர்வினையை ஆற்றியிருப்பார். ஒரு படைப்பாளியின் படைப்பை அவர் வாழ்ந்து கொண்டிருக்கிற சமயத்தில் அனுமதியைப் பெறாமல் பேராசியர்களும் பதிப்பகமும் பயண்படுத்திக் கொண்டதை எதிர்த்து இறுதி வரை போராடி அதற்காக்க் கொஞ்சம் சன்மானமாகப் பெற்றதாக எழுதிய கட்டுரை முக்கியமானது. இன்றைய சூழலிலும் படைப்புத் திருட்டு என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஒருசிலர்தான் துணிந்து அவற்றிற்கெதிராகப் போராடி வெளியே கொண்டு வருகிறார்கள் சிலர் சரி வாழ்ந்த கொள்ளட்டும் என அனுமதித்து விடுகிறார்கள்.


           உலகத் தமிழ் மாநாடுகள் செய்யவேண்டியது என்ன எனும் கட்டுரை காலத்திற்கும் முக்கியமான கட்டுரை. பொதுவாக தமிழின் பெயரால் நடத்தப்படும் மாநாடுகள் சுயசார்பாகவும் நடத்துகிறவர்களின் தனிப்பட்ட புகழ் ஓங்கவும் நிலைக்கவுமே நடத்தப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே மாநாடுகளில் என்னன்ன விடயங்கள் பின்பற்றப் படவேண்டும் என்னமாதிரியான கட்டுரைகள் ஆய்வுக் கோவைகள் திறனாய்வுகள் நடத்தப்படவேண்டும் என்பதை பிரபஞ்சன் தெளிவு படுத்துகிறார்.


 அபாயகரமானது கவிதை எனும் தலைப்பிலான கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன். மக்மூத் தார்வீஷ் முதலாமாண்டு நினைவேந்தல் கட்டுரை அது. புலம் பெயர் அகதிகள் மற்றும் படைப்பாளர்களின் கவிதைகளுடன் எழுதப்பட்ட கட்டுரை மிகவும் முக்கியமானது. ஈழத்துக் கவிஞர்களின் பல கவிதைகளை அவர் எடுத்தாண்டுள்ளார்.“திசையெல்லாம் தமிழ்க் கவிதை“ எனும் நூலை முன்வைத்து பிரபஞ்சன் ஈழத்துக் கவிதைகளை விரிவாகப் பேசுகிறார். கவிஞர் சேரன் வெளிப்படுத்தும் துயரை இங்கு பதிவிடுகிறேன்.


“எப்படிப் புணர்வது என்பதைப் பாம்புகளிடமும் எப்படிப் புலர்வது என்பதை காலையிடமும் கேட்கலாம். மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதை யாரிடம் கேட்கலாம் கேள். முழுநிலவின் பாலத்தின் கீழ் உறைந்த பாற்கடலின் பாடும் மீன்கள் எங்கே போய்விட்டன என்பதைக கார்காலத்தின் மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதை திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடம்...“ உலகெலாம் பறந்து விரிந்து தன் அகதி வாழ்க்கையின் தனிமை உணர்ச்சியை பிரபஞ்சன் நினைவு கொள்கிறார்.


பிரபஞ்சன் கட்டுரையை முடிக்கும் பொழுது இப்படியாக இறுதி செய்கிறார்.“ பாப்லோ நெருடா மரணப்படுக்கையில் இருந்த ஒரு நாள் எதிர்ப்புரட்சி ராணுவன் அவர் வீட்டைச் சோதனையிட வருகிறது. அவரைக் கைது செய்யவும்தான். அப் பொழுது நெருதா சொன்னார் “ நாலாப் பக்கமும் பாருங்கள் உங்களுக்கு அபாயகரமான ஒரே ஒரு பொருள்தான் இருக்கிறது. அதாவது கவிதை“


        பிரபஞ்சன் படைப்புலகம் பரந்த வெளியில் திகழ்வது. அவருடைய கருத்தாக்கங்கள் முழுக்கவும் தனிமனித ரசனை அனுபவமாகத் திகழ்வது. எளிய சாமானியனின் கருத்தொற்றுமையுடன் இணைந்து கொள்வது. அவருடைய ஐம்பத்தைந்து ஆண்டு எழுத்து வாழ்வைச் சில பக்கங்களின் சுருக்கமாக அறிந்து கொள்வது அல்ல நம் வாசக மனம். மாறாக அவருக்கான கொண்டாட்ட நிலைகளிலும் படைப்பாக்க முறைகளை நாம் கற்றுத் தேர்வதும்தான் நாம் அவருக்கு மாணவர்களாக இருக்க முயல்வது. சமகாலத்தில் தன்னுடன் எழுதி வருகிற இளையதலைமுறைப் படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் அறிமுகங்களும் நூல் மதிப்புரைகளும் அறிமுக உரைகளும் நிகழ்த்துகிற வாசகமனம் கொண்டவராகவும் பிரபஞ்சன் தன்னை இளம் படைப்பாளர்களுடனும் பொருத்திக் கொள்கிறார்.


       படைப்பாளர்களைத் தாம் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உரிய மதிப்பீடுகளைத் தந்துவிடவேண்டும். இந்த முனைப்பின் வழியாக பிரபஞ்சன் படைப்புகள் பேசப்படுவது காலத்திற்கு மிக மிக அவசியமானது. பிரபஞ்சன் சாரிடம் ஆசியும் வாழ்த்துக்களையும் வேண்டிக் கொள்வது


எளிய வாசகன்


இளஞ்சேரல்


கோவை விழாக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்...


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக